மகிமையின் ஆவி!

"தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர், உங்கள்மேல் தங்கியிருக் கிறார். அவர்களாலே தூஷிக்கப்படுகிறார். உங்களாலே மகிமைப்படுகிறார்" (1 பேது. 4:14).

கர்த்தர் நமக்குத் தருகிற பெரிய அபிஷேகம், "மகிமையின் அபிஷேகமாகும்" தன்னுடைய சரீரமாகிய சபைக்கு கொடுக்கிற எல்லா ஈவுகளிலும், பெரிய ஈவு, தேவனுடைய மகிமையேயாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபடுகிறதற்கு முன்பாக, "பிதாவே, நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை, நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ, அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை, நான் அவர்களுக்குக் கொடுத் தேன்" என்று ஜெபித்தார் (யோவா. 17:24,22).

அந்த மகிமைதான், பூரண மகிமையுள்ள கிறிஸ்துவுக்கு உங்களை ஏற்ற மணவாட்டியாய் மாற்றும். அந்த மகிமையின் ஆவியினால், உங்களுடைய சுபாவங்கள், குணாதிசயங்கள் அனைத்தும், கிறிஸ்துவைப்போல மறுரூபமாக்கப்படும். இதைக் குறித்து சங்கீதக்காரன் எழுதினார், "ராஜகுமாரத்தி, உள்ளாகப் பூரண மகிமை யுள்ளவள். அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது" (சங். 45:13).

சாதாரணமாக, கர்த்தருடைய மகிமையான செயல்களையும்கூட, "மகிமை" என்று சொல்லுவார்கள். கானாவூரிலே இயேசு, ஒரு மகிமையான செயலைச் செய்தார். தண்ணீரை திராட்சரசமாய் மாற்றி, தன்னுடைய மகிமையை வெளிப்படுத்தினார். யோவான் 11-ம் அதிகாரத்தில், இன்னொரு மகிமையான செயலைப் பார்க்கி றோம். மார்த்தாளைப் பார்த்து, நீ விசுவாசித்தால் தேவ மகிமையைக் காண்பாய், என்று சொன்னார். அப்படியே லாசருவை, மரித்தப் பிறகு, நான்காம் நாளிலே, உயிர்ப்பித்து, மகிமையான செயலை செய்தார்.

மற்றொரு மகிமை என்பது, தேவனுக்கு நாம் செலுத்துகிற கனம், துதி, ஆராதனையாகும். கர்த்தரை மகிமைப்படுத்துவோம் என்று போதகர் சொல்லுகிற போது, நாம் கைகளை உயர்த்தி, "ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்" என்று சொல்லு கிறோம். சாலோமோனுக்கு ஒரு மகிமையிருந்தது. யோசேப்புக்கு எகிப்தில் எவ்வளவோ மகிமையிருந்தது. ஆனால் "தேவ மகிமை" என்பது, தேவன் ஒருவருக்கே உரிய, "ஷெக்கினா மகிமை"யாகும். அது, அவருடைய ஜோதிப் பிரகாசம். ஆசரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்தஸ்தலம் முழுவதிலும், தேவனுடைய ஷெக்கினா மகிமையே, ஒளிகொடுத்துக்கொண்டிருந்தது.

நாம் விரைவில் மகிமையின் ராஜாவை, கண்ணாரக் கண்டு மகிழப் போகி றோம். பிரதான தூதன் எக்காளத்தை தொனிக்கும்போது, நாம் எல்லோரும் திறந்த முகமாய், "கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே, மகிமையின்மேல் மகிமை யடைந்து மறுரூபப்படுகிறோம்" (2 கொரி. 3:18). தேவ பிள்ளைகளே, கர்த்தருடைய வருகையின் நேரம் மிகவும் நெருங்கிவிட்டது. அவரை காண வேண்டுமென்று ஏக்கம் கொள்ளுங்கள். கடைசி நாளில் அவர் பூமியின்மேல் நிற்பார் என்று அறிந்திருக்கிறேன். அவரை நானே காண்பேன். அந்நிய கண்களல்ல என் கண்களே அவரைக் காணும், என்று யோபு பக்தன் சொல்லுகிறார். தேவபிள்ளைகளே, உஙகளுக்குள் அந்த வாஞ்சை உண்டா?

நினைவிற்கு:- "வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள். அநாதி கதவுகளே உயருங்கள். மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்" (சங். 24:7).