பலமுள்ள ஆவி!

"தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" (2 தீமோத். 1:7).

இந்த ஒரு வசனத்தில், கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற மூன்று மேன்மையான அபிஷேகங்களைக் குறித்து எழுதியிருக்கிறது. இதில் முதல் வருவது, "பலமுள்ள ஆவி." ஆம், உங்களுக்கு ஆவி, ஆத்துமா, சரீரத்தில், உள்ளான மனுஷனில் பெலன் தேவை. சின்ன காரியத்திலும் சோர்ந்துவிடாமல், சாத்தானோடு யுத்தம் செய்வதற்கு, உன்னத பெலன் தேவை. பலமுள்ள ஆவி தேவை.

ஆவியானவர் தருகிற இந்த பெலனை, "உன்னத பெலன்" என்று அழைக் கிறோம். இயேசு சீஷர்களைப் பார்த்து: "நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்" (லூக். 24:49). "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்த மும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்" (அப். 1:8).

உலகத்தார், தங்களுடைய சரீரத்தை கட்டமைப்பாய் வைத்துக்கொள்வதற்கு இரவும் பகலும், உடற்பயிற்சி செய்கிறார்கள். நரம்பு,எலும்புகளை, மாம்சத்தை முறுக்கி, ஏற்றி, குத்துச் சண்டைகளில் இறங்குகிறார்கள். ஆனால் அப். பவுல் சொல்லுகிறார், "சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது" (1 தீமோத். 4:8). என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், சில நாட்கள் ஜுரம் மோதியடிக்கும்போது, சரீர பெலம் ஒன்றுமில்லாமற்போய்விடும்.

உலகத்தில் வாழ்ந்த சகல மனுஷரிலும், பலசாலி யார்? என்று கேட்டால், சிம்சோனைக் குறித்து சொல்வேன். எப்படி சாலொமோனுக்கு, அளவற்ற ஞானத்தை கர்த்தர் கொடுத்தாரோ, அதுபோல, சிம்சோனுக்கு பரிசுத்த ஆவியானவர், அத்தனை பெலனைக் கொடுத்திருந்தார். அதைக் கொண்டு, அரிய பெரிய காரியங்களைச் செய்தார். உண்மைதான். ஒரு கழுதை தாடை எலும்பை எடுத்து, ஆயிரம்பேரை அடித்துக் கொன்றார். காசா நகரத்து கதவுகளை, அஸ்திபாரத்திலிருந்து பிடுங்கி எடுத்து, 46 மைல் சுமந்து, மலைக்கு கொண்டு போனார்.

ஆனால், அவருடைய வாழ்க்கையில் வந்த பாவ இச்சைகள், அவர் பெலத்தை யெல்லாம் உறிஞ்சி, உலகத்திலே மாபெரும் பெலவீனனாய் மாற்றிற்று. சிம்சோனை கொல்ல காரணமாயிருந்தவர்கள், பெலிஸ்தியரல்ல. தெலீலாள் என்ற வேசியுமல்ல. ஆம், சிம்சோன் செய்த பாவங்களே, அவருடைய மரணத்துக்குக் காரணமாயிருந்தது. அவர் பிரதிஷ்டையை இழந்து, கர்த்தருக்கு துரோகம்பண்ணினதினால், பெலனை இழந்தார்.

வேதம் எச்சரிக்கிறது, "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோம. 6:23)."பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்" (எசேக். 18:20). "இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக் கும்" (யாக். 1:15). தேவபிள்ளைகளே, பாவத்தை வெறுத்து பரிசுத்த ஆவியான வரில் ஐக்கியங்கொள்ளும்போது, நீங்கள் உள்ளான பெலனிலே வல்லமையுள்ளவர் களாயிருப்பீர்கள். எத்தனை ஆயிரம் பிசாசுகள் உங்களுக்கு எதிர்த்து வந்தாலும், இயேசுவின் நாமத்தினாலும், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், சாட்சியின் வசனத்தினாலும் அவைகளை முறியடிப்பீர்கள்.

நினைவிற்கு:- மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும். என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்" (நீதி. 19:3).