தெளிந்த புத்தியின் ஆவி!

"தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" (2 தீமோத்.1:7).

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்குமே, ஓரளவு புத்தியுண்டு. நல்ல புத்தியுமுண்டு, கெட்ட புத்தியுமுண்டு. கள்ள புத்தியுமுண்டு, கபட புத்தியுமுண்டு. சிலரை நாம் திட்டும்போது, உனக்கு நல்லபுத்தியே இல்லையா? என்று சொல்லி, திட்டுகிறோம். அதே நேரத்தில், பரிசுத்த ஆவியினால் வருகிற புத்தியை, "தெளிந்த புத்தி" என்று சொல்லுகிறோம். அது, நம் ஒவ்வொருவரும் விரும்பக்கூடிய புத்தியாகும்.

சில வேளைகளில், நம் புத்தி சரியாய் வேலை செய்யாது. கலங்கிப்போயிருக்கும். மிகுந்த மன துக்கத்தினால், என்ன முடிவெடுக்க என்று தெரியாதபடி, உள்ளம் தடுமாறும். ஆகவே பழமொழியாக, ‘மிகுந்த சந்தோஷத்திலும் முடிவெடுத்து விடாதே. மிகுந்த துக்கத்திலும் முடிவெடுத்து விடாதே’ என்பார்கள். சிலர், பயங்கரமான இச்சைகளுக்குட்பட்டிருப்பார்கள். அப்பொழுது, நீதி நெறியே அவர்களுக்குத் தெரியாது. அந்த இச்சையின் ஆவி, அவர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதினால், தான் குடிப்பது சாக்கடையா? என்பதுகூட தெரியாமல், முடிவில் எயிட்ஸ் நோயையும், பலவிதமான வியாதிகளையும் சம்பாதித்து விடுவார்கள்.

"பசி வந்தால், பத்தும் பறந்துபோகும்," என்பார்கள். பத்துவிதமான நல்ல குணங்களை, அது குறிக்கிறது. சரி, பசியாகிய இச்சை வரும்போது, மூளை வேலை செய்யாது. பெலிஸ்திய பெண்ணை பார்த்துவிட்டு, இச்சையினால் நிரம்பி, சிம்சோன் என்ற நியாயாதிபதி தன் பெற்றோரிடம், "அவளைத்தான் திருமணம் செய்ய வேண்டும். அவள் என் கண்களுக்கு இன்பமானவள்," என்று சொன்னான். தன் இச்சையின்படியே நடந்து, முடிவில் கண் சொருகிப்போன குருடனாய் மாறி விட்டார். அதுபோல, கெட்டக் குமாரனும்கூட, நண்பர்களோடு உலகத்தின் சிற்றின்பங்களை அனுபவிக்க புறப்பட்டுவிட்டான்.

தகப்பனும், மூத்த சகோதரனும், உறவினர்களும், இளையவனுக்கு எவ்வளவு ஆலோசனை சொன்னார்களோ தெரியவில்லை. தகப்பன் வீட்டை வேண்டாம் என்று வெறுத்து, தகப்பனுடைய ஆஸ்தி மட்டுமே போதும் என்ற நிலைமைக்குள்ளே, வந்து விட்டான். காரணம் என்ன? அந்த இளையக்குமாரனுடைய புத்தி, சரியாய் வேலை செய்யவில்லை. புத்திக் கலங்கிப்போயிருந்தது.

ஆகவே அவன், தூர தேசத்திற்குப் புறப்பட்டுபோய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். பின்பு, குறைவுபடத் தொடங்கினான். பன்றிகள் தின்னும் தவிட்டினால் தன் வயிற்றை நிரப்ப ஆசையாய் இருந்தான் (லூக். 15:16). ஆனால் அவனுக்கு புத்தி தெளிந்தபோது, தாழ்விலே உட்கார்ந்து, சிந்தனை செய்தான். அந்த சிந்தனை, தகப்பன் வீட்டை நோக்கிப் பார்க்கச் செய்தது. இதனால் தகப்பனுடைய அன்பையும், வீட்டையும் எண்ணி ஓடிவந்தான்.

இப்படித்தான், பாபிலோன் அரண்மனையின் உச்சியிலே நின்றபோது, நேபுகாத் நேச்சாருடைய புத்தியிலே பெருமை வந்தது. இதனால் பயித்தியக்காரனானான். ஆடு மாடுகளைப்போல, புல் மேய ஆரம்பித்தான். அவர் எழுதுகிறார், என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன். என் புத்தி எனக்கு திரும்ப வந்தது, என்று!

நினைவிற்கு:- "அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்தி சொல்லு" (தீத்து 2:6).