கர்த்தருடைய ஆவி!

"கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்" (ஏசா. 11:2).

"கர்த்தருடைய ஆவி" என்பதை, "கர்த்தத்துவத்தின் ஆவியென்றும், ஆளுகை யின் ஆவி"யென்றும் அழைக்கலாம். ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டபோதே, கர்த்தர் ஆதாமை, இந்த கர்த்தத்துவத்தின் ஆவியினால் நிரப்பியிருந்தார். ஆகவே ஆளும் படியான அதிகாரம், அவருக்கு வந்தது. சகல ஜீவ ராசிகளும், மிருக ஜீவன்களும், பறவைகளும், மீன்களும்கூட, ஆதாமுக்குக் கீழ்ப்பட்டிருந்தன.

அந்த கர்த்தத்துவத்தின் அபிஷேகத்தினால், உலகத்திலுள்ள அவ்வளவு மிருகங் களையும், பறவைகளையும் அறிந்து, அவைகளின் சுபாவம், குணாதிசயங்களின் படியே, அவைகளுக்கு பெயர் சொல்லி அழைத்தார். ஆனால், எந்த நேரம், அவர் பாவம் செய்தாரோ, அந்த நேரம் கர்த்தருடைய ஆவியானவர் அவரைவிட்டு விலகினார். ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டார். தேவனோடுள்ள ஐக்கியத்தையும், கர்த்தத்துவத்தையும் இழந்துபோனார்.

சாத்தான், ஆதாமை வஞ்சித்து, அந்த கர்த்தத்துவத்தை பிடுங்கிக்கொண்டபடியால், அவன், இந்த "உலகத்தின் அதிபதி" என்று அழைக்கப்பட்டான். இப்பிரபஞ்சத்தின் "அந்தகாரலோகாதிபதி" என்று குறிப்பிடப்பட்டான். அண்ட சராசரங்களை, அவன் ஆட்டிப் படைத்தான். ஆனால் கிறிஸ்து பிறந்தபோது, ஆதாம், ஏவாள் என்னென்ன இழந்தார்களோ, அவைகளையெல்லாம் கிறிஸ்து பெற்று, மனுக்குலத்துக்குத் திரும்ப அளிக்கும்படி சித்தமானார்.

கிறிஸ்துவைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தபோது, "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்" என்றார். ஆதாம் இழந்த கர்த்தத்துவத்தை, பிதாவாகிய தேவன், தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்கு கொடுக்க சித்தமானார். "தாவீதின் சிங்காசனத்தையும், அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும், நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத் துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை" (ஏசா. 9:7).

நாம் இன்றைக்கு இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய பிள்ளை களாயிருக்கிறபடியால், நாம் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரரும், அவரோடு ஆளுகை செய்கிறவர்களுமாயிருக்கிறோம். கிறிஸ்துவின் கல்வாரி தியாக பலியினால், இன்றைக்கு கர்த்தத்துவம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தத்துவம் என்பதற்கு, "ஆளுகிற அதிகாரம்" என்று அர்த்தம். வேறு வார்த்தையில் சொல்லப் போனால்,"ராஜரீகம்" என்பது அதன் அர்த்தம்.

நீங்கள் பெற்ற அபிஷேகம், உங்களை ராஜாக்களும், ஆசாரியருமாய் மாற்றுகிறது. ஆகவே, "நான் வாழப் பிறந்தவன். ஆளப் பிறந்தவன்," என்று முழங்கி சொல்லலாம். "நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார்" (வெளி. 1:6 ). பரலோகத்திலே மீட்கப்பட்டவர்கள், மகிழ்ச்சியோடு பாடுகிற பாடல் என்ன? "எங்கள் தேவனுக்கு முன்பாக, எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர். நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்" (வெளி. 5:10).

நினைவிற்கு:- "வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும், ஆளுகையும், மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக் கப்படும்" (தானி. 7:27).