ஞானத்தின் ஆவி!

"ஞானத்தையும், உணர்வையும் அருளும் ஆவியும், ... கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்" (ஏசா. 11:2).

சாதாரணமாக ஒரு குழந்தை, பெற்றோரிடமிருந்து ஓரளவு ஞானத்தைப் பெற்றுக் கொள்ளுகிறது. பின்பு ஆசிரியர்களிடமிருந்து, நண்பர்களிடமிருந்து, வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து, ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, வெற்றியை சுதந்தரித்துக் கொள்வ தற்கு, இந்த ஞானம் மிகவும் அவசியம்.

அதே நேரத்தில், உலக ஞானம் என்று ஒன்று இருக்கிறது. உலக பாரம்பரியங்கள், உலக பழக்கவழக்கங்கள். உலக ஆசாபாசங்களின்படி, அந்த ஞானம் செயல்படுகிறது. அப். பவுல், இந்த உலக ஞானத்தைக் குறித்தும், இப்பிரபஞ்சத்தின் ஞானவான் களைக் குறித்தும், அதிகமாக பேசியிருக்கிறார். அவர்கள், தங்களை ஞானிகளென்று சொல்லியும், பயித்தியக்காரர்களானார்கள் (ரோம. 1:22).

அதே நேரம், சாத்தானுடைய தீய ஞானமுமிருக்கிறது. அவன் ஹிட்லரை தெரிந்துகொண்டு, தன்னுடைய தந்திரமான, கொடூரமான ஞானத்தின் விளைவாக, லட்சக்கணக்கான இஸ்ரவேல் மக்களை கொன்றுபோட்டான். இரண்டாம் உலக மகா யுத்தம் வந்ததற்கு, ஹிட்லர் பெற்றிருந்த தீய ஞானமே காரணமாகும். ஆனால் கர்த்தரோ, உங்களை இரட்சித்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பி, ஞானத்தின் அபிஷேகத்தை கிருபையாய்த் தந்தருளுகிறார். அந்த ஞானம், பரத்திலிருந்து வருகிற தெய்வீக ஞானமாகும். இந்த ஞானத்தை நீங்கள் பெற விரும்பினால், எல்லா ஞானத்துக்கும் உறைவிடமான கிறிஸ்துவை, நோக்கிப்பாருங்கள். அவருடைய ஞானத்தைக் குறித்து, வியந்து போற்றிய அப். பவுல், "ஆ! தேவனுடைய ஐசுவரி யம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது," (ரோம. 11:33) என்று கூறி மகிழ்ந்தார்.

இயேசு கிறிஸ்துவிலே, இந்த ஞானம் வெளியரங்கமானது. "இவர் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவருக்கு இந்த ஞானமும், பலத்த செய்கைகளும் எப்படி வந்தது," என்று கேட்டார்கள். ஆம், அவர் ஞானஸ்நானம் பெற்றபோது, ஞானத் தின் ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல, அவர்மேல் இறங்கி தங்கியிருந்தார் (மத். 3:16). அந்த ஞானம், அவரிடமிருந்தபடியால், யாரும் அவரை குற்றஞ்சாட்ட முடியவில்லை. எந்த கேள்வி கேட்டும், அவரை மடக்க முடிய வில்லை. அவரை பிடிக்க வந்த போர்ச்சேவகர்களும்கூட, அவர் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலமும் பேசினதில்லை என்றார்கள் (யோவா. 7:46). தேவ பிள்ளைகளே, அந்த ஞானத்தைக் கர்த்தரிடம் கேளுங்கள்.

அந்த ஞானத்தின் ஆவியை, கர்த்தர் பேதமையான தன்னுடைய சீஷர்களுக்குக் கொடுத்தார். மீன் பிடித்துக்கொண்டிருந்த, படிப்பறிவில்லாத பேதுருவை கர்த்தர் எவ்வளவு ஞானமாய் பயன்படுத்தினார்! ஞானமுள்ள பிரசங்கம் செய்யும் ஆத்து மாக்களை, ஆயிரமாயிரமாக சம்பாதிக்கும்படி கல்விமானின் நாவை அவருக்குத் தந்தருளினார். மேலும், அப். பவுல் அந்த ஞானத்தின் காரணமாக, பரலோக ராஜ்யத் தின் இரகசியங்களை, அறிந்து நமக்கு வெளிப்படுத்தினார். தேவபிள்ளைகளே, கர்த்தரை சார்ந்துகொள்ளுங்கள். அவரே உங்களுக்கு ஞானமாய் இருப்பாராக.

நினைவிற்கு:- "உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக் கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன். அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்" (யாக். 1:5).