உணர்வை அருளும் ஆவி!

"ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்" (ஏசா. 11:2).

இயேசுவின் மேலிருந்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து, ஏசாயா தீர்க்கதரிசி, மேலிருக்கக்கூடிய பூரணமான ஏழு வித அபிஷேகங்களைக் குறித்து எழுதுகிறார். இன்றைக்கு நாம் கிறிஸ்துவின்மூலம், இந்த அனைத்து அபிஷேகங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்காகவே அப். பவுல் ஜெபித்தார். "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வின் தேவனும், மகிமையின் பிதாவுமானவர், நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத் தையும், தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத்தந்தருள வேண்டிக் கொள்ளுகிறேன்," என்றார் (எபேசி. 1:17).

இதில் ஒன்று, உணர்வை அருளும் ஆவியாகும். பாருங்கள், சாத்தான், உணர்வை கெடுக்கும், அசுத்த ஆவிகளைக் கொண்டு வருகிறான். வேதம் வாசித்தால், அதை உணரவே விடமாட்டான். வசனங்களுக்குள்ளே உள்ள, ஆழமான ஆவிக்குரிய அர்த்தத்தை புரிந்துகொள்ள விடமாட்டான். கண்கள் திறந்திருந்தாலும், கவனிக்க முடியாததாயிருக்கும். காதினால் கேட்டாலும், அது அவர்களுக்கு புரியாத புதிராகவே இருக்கும்.

பாருங்கள்! இயேசு சீஷர்களுடனே எம்மாவூருக்கு கடந்துபோனார். இயேசு கிறிஸ்து அவர்களோடு நடந்தும், அவர், இயேசு என்று உணர்ந்துகொள்ளவில்லை. வேத வசனங்களை விளக்கிக் காட்டியும், அவர்கள் உணர்ந்துகொள்ளாமல் துக்க முகமுடையவர்களாகவே சென்றுகொண்டிருந்தார்கள். இன்றைக்கும் எவ்வளவோ வேத வசனங்கள் பிரசங்கிக்கப்பட்டாலும், அதை உணர்ந்து செவி கொடுப்பதில்லை. ஒரு காதில் கேட்டு, மறு காதில் விட்டுவிடுகிறார்கள்.

இதை விளக்கும்படி இயேசு கிறிஸ்து ஒரு உவமையை சொன்னார், "கேளுங்கள் விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது. ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப் போட்டது" (மாற். 4:3,4). வேத வசனத்தை கேட்டும், அதை புரிந்துகொள்ளாத உணர்வில்லாத இருதயமுள்ளவர்களைக் குறித்து, இந்த வசனம் பேசுகிறது. "பிசாசானவன், ஆகாயத்துப் பறவைபோல பறந்து வந்து, வசன விதைகளை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போட்டுவிடுகிறான்.

இயேசு சொன்னார், "ஒருவன் ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும் போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக் கொள்ளுகிறான். அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்" (மத். 13:19). இதனால் ஆண்டவர் வெளிப்படுத்தின விசேஷத்தில், ஏழு சபைகளுக்கும் எழுதி, முடிவில், "காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்று சொன்னார். காதுள்ளவன் என்பது, "உணர்ந்துகொள்ளுகிறவன்" என்பது அர்த்தமாகும்.

சில உவமைகள், சீஷர்களுக்கு விளங்கவில்லை. ஆகவே, இயேசு தனிமையாய் இருக்கும்போது, அவரிடத்தில் வந்து விளக்கம் கேட்டார்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரிடத்தில் கேட்கும்போது, வேதத்தின் இரகசியங்களையும், மறை பொருட்களையும், உங்களுக்கு வெளிப்படுத்தித்தருவார்.

நினைவிற்கு:- "வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்திலிருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்" (ஏசா. 45:4).