தேவ ஆவி!

"அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற மனுஷனைப்போல, வேறொருவன் உண்டோ என்றான்" (ஆதி. 41:38).

இது பரிசுத்த ஆவியானவருடைய யுகம். மாம்சமான யாவர்மேலும், அவர் ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆவியின் வரங்களைத் தந்துகொண்டிருக்கிறார். ஆவிகளின் கனியைக் கொடுத்து, கிறிஸ்துவின் சுபாவத்திலே நம்மை பூரணப் படுத்திக்கொண்டிருக்கிறார்.

தற்போது, நாம் பின்மாரியின் நாட்களுக்குள் வந்திருக்கிறோம். பிதாவானவர் பரலோகத்திலிருக்கிறார். கிறிஸ்துவானவர், மகிமையின் நம்பிக்கையாக உங்களுக் குள் வாசம் பண்ணுகிறார். முன்பு பரலோகத்தில், ஏழு அக்கினி தீபங்களாய், சிங்காசனத்துக்கு முன்பாக எரிந்துகொண்டிருந்த, ஏழு ஆவியின் தீபங்களும், இன்றைக்கு உங்களுக்குள்ளிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர், உங்களை அவருடைய ஆலயமாக்கி உங்களில் அவர் தங்கி இருக்கிறார்.

அபிஷேகத்தினால், தேவாதி தேவன், உங்களை விசேஷமுள்ளவர்களாக்கு கிறார். அவர் யோசேப்புக்கு, சொப்பனங்களையும், தரிசனங்களையும் காணக்கூடிய வரத்தைக் கொடுத்தார். பஞ்சகாலம் எப்பொழுது வரும்? ஜனங்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படாதபடி, என்ன செய்ய வேண்டும், என்று தனது திட்டங்களையும் சொன்னபோது, அதைக் கேட்ட பார்வோன், மிகவும் ஆச்சரியப்பட்டான். தன் தேசத்திலே ஆயிரக்கணக்கான மந்திரவாதிகளும், ஜோசியர்களும் இருந்தாலும், "தேவ ஆவியைப் பெற்ற யோசேப்பைப்போல, ஒருவருமில்லை" என்று சாட்சி பகிர்ந்தான்.

இன்றைக்கு கேரளா தேசம், தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது என்ற செய்தியைப் பார்த்தேன். வெள்ளத்தினால், பலத்த சேதங்கள். 54 ஆயிரம் பேர், வீடுகளை இழந்து, அகதிகளாய் நிற்கிறார்கள் என்ற செய்தியைப் பார்த்தேன். கேரளா முதலமைச்சருக்கு, யோசேப்பைப்போல தரிசனங்களையும், சொப்பனங்களையும் கண்டு, தேசத்தைப் பாதுகாக்கவில்லையே என என் உள்ளம் எண்ணுகிறது, ஏங்குகிறது. இந்த வரம் தேசத்தில் அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, குடும்பத்துக்கும் பிரயோஜனமாயிருக்கும். இதனால் வரப்போகிற ஆபத்தை தடுத்துவிட முடியும்.

யோசேப்பிலிருந்த அத்தனை வரங்களும், தானியேலுக்குள்ளும் இருந்தது. எகிப்திலே, பார்வோன் இருந்ததுபோல, பாபிலோன் தேசத்திலே, நேபுகாத்நேச்சார் இருந்தார். ஞானத்துக்கும், புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில், ராஜா கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யமெங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும், ஜோசியரி லும், அவர்களை பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்.

நேபுகாத்நேச்சார், ஒரு சொப்பனத்தைக் கண்டு, மனம் கலங்கினார். அந்த சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் சொல்ல வேண்டும் என்று, தன் தேச ஞானிகள் எல்லோரையும் கேட்டுக்கொண்டபோது, அவர்கள் சொன்னது என்ன? "மாம்சமாய் இருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களே ஒழிய, ராஜ சமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவருமில்லை" என்றார்கள் (தானி. 2:11).

உலகத்தில் நிறைய விக்கிரகங்களின் ஆவிகள் இருந்தாலும், குறி சொல்லுகிற ஆவிகளிருந்தாலும், மந்திரவாதிகளிடம் மற்றவர்கள்மேல் ஏவிவிடுகிற ஆவி களிருந்தாலும் தேவ ஆவிக்கு இணையானது ஒன்றுமில்லை. கர்த்தர் உங்களை அந்த ஆவியினால் நிரப்புவாராக. மறைபொருளை வெளிப்படுத்த உதவிச் செய்வாராக.

நினைவிற்கு:- "இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப் படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்" (தானி. 2:19).