உற்சாகத்தின் ஆவி!

"உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்" (சங். 51:12).

சோர்வையும், மனக் கிலேசத்தையும், துக்கத்தையும், மாற்றக் கூடியதுதான் "உற்சாகத்தின் ஆவி." நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, அநேக மக்கள், "மனச் சோர்பு" என்று சொல்லப்படுகிற, ‘டிப்ரஷன்’ என்ற ஆவியினால் தாக்கப்பட்டிருக்கிறதைப் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் இழந்து, நடைபிணமாய் வாழுகிறார்கள். நேரத்திற்கு எழும்புவதில்லை. பல் விளக்கி, குளித்து, ஆயத்தப் படுவதுமில்லை. எதையுமே செய்ய மனமின்றி, படுக்கையிலே சோம்பேறித்தனமாய் படுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த டிப்ரஷன், மனச் சோர்வின் ஆவி, சிலரை தாக்கும்போது, அவர்கள் குடித்துக்கொண்டேயிருக்கிறார்கள். மனக் கவலைகளை மறக்கக் குடிக்கிறேன் என்று சொல்லுகிறார்கள். வேறு சிலர், ‘கஞ்சா’ போன்ற போதைப் பொருட்களுக்கு, அடிமையாகி விடுகிறார்கள்.

இந்த கொடிய ஆவியை, ஜெபத்தினால் மட்டுமே மேற்கொள்ள முடியும். நண்பர்களாலும், வைத்தியர்களாலும் மிகச் சிறிய அளவுதான், முயற்சி செய்ய முடியும். மனோதத்துவ நிபுணர்கள் வந்து, பணம் கறந்துவிட்டுப் போவார்களே தவிர, பூரண சுகத்தைக் கொடுக்க முடியாது. இந்த டிப்ரஷனுக்கு கர்த்தர் கொடுக்கிற மாற்று மருந்து, "உற்சாக ஆவிதான்." அது மன எழுச்சியைத் தரும், சந்தோஷத்தைத் தரும், குடும்பத்துக்காகவும் கர்த்தருக்காகவும், ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற உணர்வைத் தரும்.

இந்த ‘டிப்ரஷன்’ வருவதற்கு என்ன காரணம்? என்ன பாவம், சாபம் இருக் கிறது? என்பதை கவனித்து அறிக்கையிடும்போது, கர்த்தர் மன உளைச்சலையெல் லாம் மாற்றி, கசப்புகளையெல்லாம் அகற்றி, மீண்டும் உற்சாகத்தைத் தந்தருளுவார். தாவீது கொடிய பாவத்தில் விழுந்தபோது, அது உற்சாகத்தின் ஆவியை இழக்கும் படிச் செய்தது. இரட்சணிய சந்தோஷத்தை, அவரைவிட்டு விலக்கி விட்டது.

தாவீது கண்ணீரோடு கர்த்தரண்டை, பாவத்தை அறிக்கை செய்து, மனம் திரும்பினபோது, கர்த்தர் மறுபடியும் உற்சாகத்தின் ஆவியைத் தந்தருளினார். கர்த்தருடைய மந்தையை மேய்க்கிறீர்களா? உற்சாக மனதோடு செய்யுங்கள் (1 பேது. 5:2). கர்த்தருக்கு நீங்கள் கொடுக்கிறீர்கள். தேவன் அதில் பிரியப்படும்படி, உற்சாகமாய்க் கொடுங்கள் (2 கொரி. 9:7). இரக்கம் செய்கிறவன், உற்சாகத்துடனே செய்யக்கடவன் (ரோம. 12:8).

இந்த டிப்ரஷன் என்பது, ஒரு பக்கம் பிசாசின் ஆவியிடத்திலிருந்து வந்தாலும், மறுபக்கம் மாம்சத்தின்படியுள்ள அன்பு, தகாத உறவு மூலமாகவும் வருகிறது. ஆகவே, மாம்சத்தில் எழும் அன்பை புறம்பே தள்ளிவிட்டு, பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருங்கள். மாம்சமோ பெலவீனமுள்ளது. ஆவியோ உற்சாகமுள்ளது. மாம்சத் தில் வாழ்ந்தால், சோதனைக்குட்பட்டு விழுந்துபோவீர்கள். ஆவியிலே ஜெபிப் பீர்களாகில், உற்சாகத்தோடு விழித்திருந்து ஜெபம்பண்ணுவீர்கள் (மாற். 14:38).

தேவபிள்ளைகளே, நீங்கள் உற்சாகப்படுவது மட்டுமல்ல, மற்றவர்களையும் உற்சாகப்படுத்துங்கள். சோர்ந்துபோகிறவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களைத் திடப்படுத்துவீர்கள். இஸ்ரவேல் தேசத்திலே பல பலிகள் செலுத்தப்பட்டாலும், ஒரு பலி, "உற்சாக பலி" என்று அழைக்கப்படுகிறது.

நினைவிற்கு:- "புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாக பலி களைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்க ளுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்" (ஆமோஸ் 4:5).