நல்ல ஆவி!

"நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக" (சங். 143:10).

கர்த்தருடைய ஆவியைக் குறித்து, தாவீது "நல்ல ஆவி" என்று சொல்லுகிறார். இதிலிருந்து, நீங்கள் கெட்ட ஆவிகளுண்டு, அசுத்த ஆவிகளுண்டு. பொல்லாங்கை ஏற்படுத்தும் ஆவியுண்டு, பயமுள்ள ஆவியுண்டு என்று நீங்கள் அறியலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் நல்லவர், பரிசுத்தமுள்ளவர். தெய்வீகத்தை நமக்குள்ளே கொண்டு வருகிறவர். கர்த்தர் யாக்கோபோடு பேசி, "உன் தேசத்துக்கும், உன் இனத் தாரிடத்துக்கும் திரும்பிப் போ. உனக்கு நன்மை செய்வேன்" என்று சொன்னார் (ஆதி. 32:9). ஆவியானவர் ஒருபோதும், உங்களுடைய தீமைக்காக கிரியைச் செய்கிறவரல்ல. அவர், நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறார்.

கர்த்தரிடத்திலிருந்து நல்லதையும், நன்மையானவைகளையும் எதிர்பாருங்கள். அவர், உங்களுடைய பரமபிதா அல்லவா? தகப்பன், பிள்ளைக்கு இறங்கி, நன்மையானவைகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதா எவ்வளவு அதிகமாய், உங்களுக்கு நன்மை செய்வார்! இன்றைக்கு கர்த்தரிடத்தில் உங்களுக்குத் தேவையான நன்மை எது என்று கேளுங்கள். வறட்சியான நிலங்களை அல்ல. செழிப்பான நல்ல நிலங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இஸ்ரவேலின் முதல் இரண்டு ராஜாக்களைப் பாருங்கள். ஒருபக்கம் சவுல், மறு பக்கம் தாவீது. சவுல் தாவீதை பகைத்தார். ஈட்டியால் கொன்று போட வகை தேடி னார். பெருமை, அவருக்குள் பற்றியெரிந்துகொண்டிருந்தது. தாவீதைக் கொன்றால், அவர் தன்னுடைய ராஜ்யபாரம் பலப்படும் என்று எண்ணினார். ஆனால் தாவீதைப் பாருங்கள்! கர்த்தர், சவுலை எத்தனையோ தரம், தாவீதின் கையிலே ஒப்புக்கொடுத் தாலும், தாவீது அபிஷேகம் பெற்ற, ஒரு தேவ மனிதனுக்கு விரோதமாய், என் கையை நீட்ட மாட்டேன், தீமை செய்ய மாட்டேன் என்று விலகிக் கொண்டார்.

ஒருநாள் சவுல் அதை உணரும்படி, கர்த்தர் வாய்ப்பளித்தார். அவர் நேருக்கு நேராய் தாவீதைப் பார்த்தார். "நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்குத் தீமை செய்தேன். நீ எனக்கு நன்மை செய்ததை, இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்று போடவில்லை. இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக" (1 சாமு. 24:17-19) என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

தீமைக்கு தீமை செய்வது எளிது. வஞ்சம் வைத்து பழி வாங்குவது, எளிது. இது மனுஷீக குணம். ஆனால், தெய்வீக குணம் என்ன? இயேசு கிறிஸ்து தாமே மலைப் பிரசங்கத்தில் அதை சொன்னார். "ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" (மத். 5:39). "ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதி யுங்கள்" (மத். 5:41-45).

தேவபிள்ளைகளே, நீங்கள் உலகத்தாரைப் பார்க்கிலும், விசேஷமுள்ளவர்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்டிருந்தால், கிறிஸ்து உங்களுக்குள் வாழுகிறார். அபிஷேகம் பெற்றிருந்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பியிருக்கிறார். ஆகவே, அவர் தருகிற தெய்வீக சுபாவங்களை, உலகத்துக்கு வெளிப்படுத்துங்கள். கிறிஸ்துவின் போதனைகளை, உங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு முடிந்த வரையிலும் நன்மை செய்யுங்கள்.

நினைவிற்கு:- "தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்" (சங். 34:14).