எலியாவின் ஆவி!

"எலியாவின் ஆவி, எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள்" (2 இராஜா. 2:15).

இங்கே, "எலியாவின் ஆவி" என்று வாசிக்கிறோம். எலியாவை, ஆவியானவர் நிரப்பினதினால், அந்த ஆவியின் வல்லமையினாலே, எலியா இயற்கைக்கு அப்பாற் பட்ட மிகப் பெரிய அற்புதங்களைச் செய்தார். பாகாலின் வழிபாட்டைவிட்டு விட்டு, கர்த்தரை தொழுதுகொள்ளும்படி இஸ்ரவேல் தேசத்தை வழிநடத்தினார்.

எலியாவின் மேல் பக்தி வைராக்கியத்தின் ஆவியிருந்தது. "கர்த்தரே தேவன்" என்று நிரூபிக்க, அவர் துடிதுடித்துக்கொண்டிருந்தார். பாகாலுக்கும், அவனுடைய தீர்க்கதரிசிகளுக்கும் விரோதமாய், தைரியமாய் சவால்விட்டு, வைராக்கியமாய் எழுந்து நின்றார். ஆம், அவர்மேல் ஒரு அக்கினி அபிஷேகமிருந்தது. ஆகவே, "அக்கினியால் உத்தரவு அருளும் தேவனே தேவன்," என்று முழங்கியது மட்டு மல்லாமல், வானத் திலிருந்து அக்கினியை பலிபீடத்தின்மேல் இறக்கி, "கர்த்தரே தேவன்," என்று நிரூபித்தார்.

அவரை நிழல்போல பின்பற்றின எலிசா, அவரிடம் கேட்டுக்கொண்டதெல்லாம் "உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றார்" (2 இராஜா. 2:9). அப்படியே எலியா எடுத்துக்கொள்ளப்படும் போது, எலிசா இரண்டுமடங்கான ஆவியின் வரத்தையும், எலியாவின் மேலிருந்து விழுந்த சால்வையையும் பெற்றுக்கொண்டார்.

எலியாவின் ஆவியைக் குறித்து, யோவான்ஸ்நானகனைப் பற்றிய தீர்க்கதரிசன வார்த்தையிலும் காணலாம். தேவதூதன், தகப்பனாகிய சகரியாவிடத்தில் அறிவிக் கும்போது: "அவன், பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும், பலமும் உடையவனாய், அவருக்கு முன்னே நடப்பான் என்றான்" (லூக். 1:17).

எலியாவும், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி. யோவான்ஸ்நானனும்கூட, பழைய ஏற்பாட்டுக்குரிய கடைசி தீர்க்கதரிசி. அவர்கள் எல்லோரும், கல்வாரி இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கவில்லை. புதிய ஏற்பாட்டிற்கு வந்திருக்கிற நீங்கள், கிறிஸ்துவின் ஆவியையுடையவராய் இருக்கிறீர்கள். நீங்கள் பெற்றிருக்கிற அபிஷேகமானது, பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த எலியா, எலிசாவின் அபிஷேகத்தைப் பார்க்கிலும், கோடி மடங்கு மேன்மையானது.

ஒருமுறை சமாரியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாததினால், சீஷர்கள் இயேசு விடத்திலே வந்து, "ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி, இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?" என்று கேட்டார்கள். இயேசு திரும்பிப் பார்த்து, "நீங்கள் இன்ன ஆவியுடையவர்கள் என்பதை அறியீர்கள்" என்று சொல்லி, அதோடு மனுஷகுமாரன் ஜீவனை அழிக் கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார்.

ஆம், தேவபிள்ளைகளே, எலியாவைப்போல பழிக்குப் பழி வாங்க வேண்டும். தேவனுக்கு கீழ்ப்படியாதவர்களை சுட்டெரிக்க வேண்டும் என்ற நிலைமைக்கு, உங்களை உட்படுத்தாதிருங்கள். கிறிஸ்துவின் அன்பின் அபிஷேகத்தால் நிரப்பப் படும்படி, கிறிஸ்துவினுடைய அன்பின் ஆவியை வாஞ்சியுங்கள்.

நினைவிற்கு:- "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே, தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது" ( ரோம. 5:5).