வேறே ஆவி!

"என்னுடைய தாசனாகிய, காலேப், வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடி யினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும்" (எண். 14:24).

இங்கே, "வேறே ஆவியை" என்று எழுதப்பட்டிருக்கிறதினால், பரிசுத்த ஆவியில்லாமல், "வேறொரு ஆவி" என்று எண்ணிவிடக்கூடாது. ஆவியானவர் ஒருவரே. உலகத்தாரைப் பலவிதமான ஆவிகள் பற்றிப் பிடித்திருந்திருக்கலாம். ஆனால், தேவபிள்ளைகளை நிரப்புகிறவரும், வழிநடத்துகிறவரும், பரிசுத்த ஆவியானவர் ஒருவர் மட்டுமே. அப்படியானால், "வேறே ஆவி" என்று, எதைக் குறித்து கர்த்தர் இங்கே வேதத்தில் பேசுகிறார்?

ஆம், கானான் தேசத்தை வேவு பார்த்துவிட்டு வரும்படி, மோசே பன்னி ரண்டுபேரை, கோத்திரத்துக்கு ஒருவர் வீதம், அனுப்பினார். அந்த பன்னிரண்டு பேருக்குள், பத்துபேர் கானான் தேசத்தை சுற்றிப் பார்த்துவிட்டு, இஸ்ரவேல் ஜனங்களுக்கு துர்ச்செய்தியைப் பரப்பினார்கள். பரிசுத்த ஆவியானவரால் அவர்கள் நிரப்பப்பட்டு, ஆலோசனை சொல்லவில்லை. அவர்களுக்குள் சுயப் பரிதாபமிருந்தது. தாழ்வு மனப்பான்மை, தோல்வியின் எண்ணம், முறுமுறுக்கும் ஆவியிருந்தது. அவர்களுக்கிருந்த ஆவி வேறு. காலேப்புக்குள்ளும், யோசுவாவுக்குள்ளுமிருந்த ஆவி வேறு. ஆகவேதான், இங்கே கர்த்தர் காலேப்புக்குள், "வேறே ஆவியிருந்தது" என்று, மற்ற பத்துபேரை விட்டு, வேறு பிரித்துச் சொல்லுகிறார்.

இரண்டு முக்கியமான ஆவிகளுண்டு. ஒன்று, "உலகத்தின் ஆவி," என்று அழைக்கப்படுகிறது. அடுத்தது, "வேறே ஆவி" அல்லது "பரிசுத்த ஆவி," என்று அழைக்கப்படுகிறது. அப். பவுல் சொல்லுகிறார், "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்" (1 கொரி. 2:12).

ஆகவே உலகத்தார் நடக்கிற வழியிலே, நாம் நடப்பதில்லை. உலகத்தார் சிந்திக் கிறது போல, நாம் சிந்திக்கிறதுமில்லை. கிறிஸ்துவின் ஆவி நமக்குள் வாசமாயிருக்கிற படியால், தோல்வியையல்ல, வெற்றியையே பேசுகிறோம். "உலகத்தோற்றத்திற்கு முன்னே, தேவன் தம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டது மாயிருந்த, இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்" (1 கொரி. 2:7).

உலகத்தின் ஆவியைப் பெற்றிருக்கிறவர்களோ, தோல்வியை பேசி, கலகமூட்டு கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய வலிமையை எண்ணாமல், தங்களுடைய சுய பெலத்தைக் குறித்தே எண்ணுகிறார்கள். ஆனால், காலேப் கர்த்தருக்காக வேறு பிரிக்கப்பட்டவராயிருந்தார். கர்த்தருடைய சபையிலும்கூட, சுய ஞானத்தின்படி கிரியை செய்கிற உலகத்தார் இருப்பார்கள். அதே நேரத்தில் கர்த்தரால் வழிநடத்தப் படுகிற, பரிசுத்தவான்களுமிருப்பார்கள். உலக ஞானமும், உலக ஆவியும் நிலை நிற்கும்போது, அங்கே கலவரங்களும், முறுமுறுப்புகளும், அழுகைகளும் தான் உண்டாகும்.

தேவபிள்ளைகளே, நீங்கள் வித்தியாசமானவர்கள். உலகத்தாரினின்று வேறு பிரிக்கப்பட்டவர்கள். நீங்கள் பெற்றிருக்கிற அபிஷேகம், உன்னதத்துக்குரியது. ஆகவே ஆவிக்குரியவைகளை சிந்தித்து, அவைகளை பேசி, சபையிலும், குடும்பத் திலும் சமாதானத்தைக் கொண்டு வாருங்கள். உலகத்தாரோடு ஒன்றாக நிற்காமல், கர்த்தருக்காக வேறு பிரிந்து, தனித்து நில்லுங்கள். சத்திய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர், உங்களுக்கு துணை நிற்பார்.

நினைவிற்கு:- "நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலி ருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது" (யோவா. 15:19).