நிலைவரமான ஆவி!

"தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை, என் உள்ளத்திலே புதுப்பியும்" (சங். 51:10).

"நிலைவரமான ஆவி" என்றால் என்ன? ஆம், "ஸ்திரமான, உறுதியான, தடுமாற்றமில்லாத ஆவி," என்பதே இதன் பொருளாகும். தாவீது சில வேளைகளில் கர்த்தரைப் பாடி, ஆராதித்து, துதிப்பதில் உன்னதமான இடத்தை வகித்தார். சில வேளைகளில், ஸ்திரீகளின் சிநேகிதத்தால் தடுமாற்றமடைந்தார். பத்சேபாளிடத்தில் பாவத்துக்குட்பட்டபோது, மனங்கசந்து அழுதார்.

ஏன் சீராக, தூய்மையான வாழ்க்கை வாழ முடியவில்லை? ஏன் விழுந்து விழுந்து, எழும்பிக்கொண்டிருக்கிறேன்? ஏன் சில வேளை உன்னத்தில் மலை உச்சியில் வாழ்வதைப் போன்ற, மேன்மையான ஆவிக்குரிய அனுபவமிருக்கிறது? ஏன் சில வேளைகளில் பாதாளத்தின் படுகுழியிலே விழுந்து தவிக்கிறேன்? என்று எண்ணி, அவர் கண்ணீரோடு கர்த்தரைப் பார்த்து, "சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை, என் உள்ளத்திலே புதுப்பியும்" என்றார்.

பரிசுத்தத்துக்காக, ஆவியானவர் வல்லமையாய் கிரியை செய்தாலும், இந்த உலகத்தில் சாத்தானுடைய கிரியைகளுமிருக்கிறது. சோதனைகளைக் கொண்டு வருகிற சோதனைக்காரனின் ஆவியுமிருக்கிறது. சாத்தான் இருக்கிற வரையிலும், அசுத்தங்களும், பாவங்களும், இச்சைகளும் உலகத்தில் கிரியைச் செய்துதான் ஆகும். காற்று இருக்கிற வரையிலும், கடல் அலைகள் எழும்பத்தான் செய்யும்.

பேதுருவைப் பாருங்கள்! ஒரு பக்கம் கர்த்தர்மேல் அன்பு. அவருக்காக வைராக் கியம் பாராட்டினார். ஆனால், மறுபக்கமோ பெலவீனமாயிருந்தார். சூழ்நிலைகள் அவரை பயப்படுத்தினதினாலே, இயேசுவை சபித்து, சத்தியம் பண்ணி, முடிவில் மனம் கசந்து அழுதார். அவரே ஸ்திரமில்லாமலிருக்கும்போது, மற்றவர்களை அவர் ஸ்திரப்படுத்துவது எப்படி? இயேசு சொன்னார், "இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உன்னைப் புடைக்கிறதற்கு, உத்தரவு கேட்டுக் கொண்டான். நீ குணப்பட்ட பின்பு, உன் சகோதரரை ஸ்திரப்படுத்து."

"சீமோன்" என்ற பதத்திற்கு, "நாணல்" என்று அர்த்தம். காற்று வீசுகிற திசை எல்லாம், உறுதியில்லாமல் ஆடிக்கொண்டிருக்கும். கர்த்தர், அந்த பெயரை மாற்றி, "கற்பாறை" என்று அர்த்தங்கொள்ளும் "பேதுரு" என்ற பெயரைக் கொடுத்தார். நீ கர்த்தருக்குள் உறுதியாயிருக்க வேண்டும். நிலைவரப்பட்டிருக்க வேண்டும். மற்றவர்களை ஸ்திரப்படுத்த வேண்டும். தாவீது நிலைவரமான ஆவியை கர்த்தரிடத்தில் கேட்டபோது, கர்த்தர் தாவீதை ஸ்திரப்படுத்தினார். அன்போடு சொன்னார், "உன் வீடும் உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைப்பெற் றிருக்கும்" (2 சாமு. 7:16).

ஒருமுறை பிசாசு பிடித்த ஒரு சிறுவனுடைய விடுதலைக்காக, ஒரு தகப்பன் இயேசுவிடத்தில் வந்தான். கண்ணீரோடு இயேசுவைப் பார்த்து, அது அநேகந்தரம் தீயிலும்,தண்ணீரிலும் இவனை தள்ளிற்று என்று சொன்னார். தீயும், தண்ணீரும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை. தண்ணீர் தீயை அவித்துப்போடுகிறது. பல நேரங்களில், அக்கினி தண்ணீரை எதிர்த்து நிற்கிறது. இயேசு அவனை குணமாக்கி, நிலைவரமான ஆவியை அவனுக்குக் கொடுத்தார். தேவபிள்ளைகளே, விழுந்து, விழுந்து நீங்கள் எழும்பாமல், கர்த்தருக்காக அக்கினியாய் நில்லுங்கள். கடைசி வரை, பரிசுத்தத்திலே நிலைநிற்கும்படி ஜெபியுங்கள்.

நினைவிற்கு:- "நீ குளிருமின்றி அனலுமின்றி, வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்" (வெளி. 3:16).