சுட்டெரிப்பின் ஆவி!

"ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடுவார்" (ஏசா. 4:3).

கிறிஸ்தவ வாழ்க்கையில், இரண்டு அனுவத்தைப் பார்க்கிறோம். முதலாவது, இரட்சிப்பின் அனுபவம். இரண்டாவது, பரிசுத்த ஆவியானவரின் அனுபவம். அந்த அபிஷேக அனுபவத்தோடு, அக்கினியாலும் நிரப்பப்படுகிறீர்கள். அந்த அக்கினி, உங்களுக்குள்ளே ஒரு சுத்திகரிப்பை உண்டுபண்ணும்படி, சுட்டெரிக் கிற ஆவியாகவுமிருக்கிறது.

ஒவ்வொரு கிறிஸ்தவனைச் சுற்றிலும், இரண்டு வித போராட்டங்களிருக்கின் றன. முதலாவது, பாவ போராட்டம். இரண்டாவது, பாவப் பழக்க வழக்க போராட்டம். ஒரு மனிதன், எத்தனையோ ஆயிரம் பாவங்கள் செய்தாலும், அவன் சிலுவையண்டை வந்து நிற்கும்போது, இயேசுவின் இரத்தம் அவன் மேல் விழுந்து, பாவங்களற கழுவி சுத்திகரிக்கிறது. பரிசுத்தமாக்கிவிடுகிறது. இதோடு பிரச்சனை கள் தீர்ந்துவிடுவதில்லை. ஒரு சர்ப்பத்தைப்போல, பாவ பழக்க வழக்கங்கள், சந்தர்ப்பம் தேடி, அவனை பின் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன.

பின்தொடருகிற, பாவ சுபாவத்திலிருந்து, விடுதலைபெற என்ன வழி? அதற்காகத் தான், நாம் பரிசுத்த அக்கினியிலிருந்து வருகிற, சுட்டெரிப்பின் ஆவியை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். "அக்கினிமயமானவரே, என் ஆவி, ஆத்துமா சரீரத்துக்குள் இறங்கி வாரும். கர்த்தருக்குப் பிரியமில்லாத பாவ சுபாவங்களை, தீய நினைவுகளை, எண்ணங்களை, இருதயத்திலிருந்து சுட்டெரித்து நீக்கிப்போடும்," என்று கேட்க வேண்டும்.

சாதாரணமாக, உங்கள் வீட்டிற்கு ஒரு விஷ பாம்பு, வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலாவது, அதை தலையில் அடித்துக் கொல்ல வேண்டும். பின்பு அதை, அக்கினியினால் சுட்டெரிக்க வேண்டும். அப்பொழுது தான், பூரண நிம்மதியும், ஜெயமும் உங்களுக்குக் கிடைக்கும். ஆதாம் ஏவாளை வஞ்சித்து, மனுக்குலத்தை பின் தொடர்ந்த வலுசர்ப்பமாகிய பாம்பை, ஆண்டவர், கல்வாரிச் சிலுவையிலே தோற்கடித்தார். அதன் தலையை நசுக்கினார். இயேசுவின் பாதங் களிலே வழிந்த இரத்தம், அவன்மேல் நமக்கு ஜெயத்தைத் தருகிறது.

அதோடு, காரியம் முடிந்துபோய்விடவில்லை. அந்த வலுசர்ப்பத்தை சுட்டெரிக்க வேண்டும். சிலுவையிலே, பாம்பை நசுக்கின ஐம்பதாவது நாள், பெந்தெகொஸ்தே நாளாகும். அன்றைக்கு சீஷர்கள் மேல், ஆண்டவர் அக்கினி அபிஷேகத்தை ஊற்றி, பாம்பின் சுபாவமாகிய பாவப் பழக்கவழக்கத்தை சுட்டெரிக்க, கர்த்தர் கிருபை பாராட்டினார். தேவபிள்ளைகளே, நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்று, சும்மாயிருந்துவிடாதிருங்கள். உங்களுடைய மாம்சத்தின் ஒவ்வொரு அணுக்களும், பாவ சந்தோஷங்களை அனுபவிக்கும்படி ஏங்கிக்கொண்டிருக்கிறது. பாம்பைப் போல, தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஆகவே, ஒவ்வொருநாளும் சுட்டெரிப்பின் ஆவியினால், உங்களை நிரப்ப வேண்டியது அவசியம்.

ஆஸ்பத்திரிகளிலே விஷக் கிருமிகளோ, வைரசோ பரவாதபடி நோயாளிகளின் பழைய உடையை தீக்கொளுத்துவார்கள். இஸ்ரவேலருக்குள் சாபத்தை கொண்டு வந்த, ஆகானையும், அவனுடைய வீட்டாரையும் சுட்டெரித்தார்கள். இன்றைக்கு நீங்கள் பரிசுத்த ஆவியினால் பிசாசின் சுபாவங்களையும், பாவ உறவு முறைகளையும் சுட்டெரியுங்கள். அப்பொழுது ஆவியில் விடுதலையும், சமாதானமுமுண்டாகும்.

நினைவிற்கு:- "பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்" (லூக். 12:49).