நியாயத்தின் ஆவி!

"நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல்மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்" (ஏசா. 28:6).

ஆவியானவர், எப்படி பல்வேறு விதங்களிலே நமக்கு உதவியாக நிற்கிறார் என்பதைக் குறித்து, தியானித்து வருகிறோம். ஆவியானவர் ஒருவராயிருந்தபோதிலும், பல்வேறு விதங்களிலே தன்னை வெளிப்படுத்துகிறார். அதிலிருந்து, கர்த்தர் அன்பும், அக்கறையுமுள்ளவர். எல்லாவற்றையும், நன்மைகேதுவாகவே செய்தருளுவார் என அறிந்துகொள்ளலாம்.

"நியாயத்தின் ஆவி," என்று இரண்டு இடங்களில் வருகிறது. ஏசாயா 4:3-ம் வசனத்தில், இரண்டுவித ஆவிகளாக தன்னை வெளிப்படுத்துகிறார். "நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதிலிருந்து நீக்கிவிடுகிறார்." எருசலேமில், இரத்தப்பழிகள் விழுந்திருக்கும் போது, நீதி செய்கிறவராக நியாயத்தீர்ப்பின் ஆவியோடு எழுந்தருளுகிறார். பின்பு, கறைதிரை ஒன்றுமில்லால் போகும்படி, சுட்டெரிப்பின் ஆவியினால் சுத்திகரிக் கிறார்.

ஆண்டவர், நீதி நியாயத்தை விரும்புகிறவர். தேசங்கள் தவறும்போது, அந்த தண்டனையை அனுப்புகிறார். தனி மனிதனானாலும், அரசாங்கமானாலும், துன் மார்க்கத்தை தட்டிக் கேட்கிறார். தவறு இருக்குமானால், சிங்காசனத்தை புரட்டி தள்ளி, ராஜாக்களை அகற்றி, புதிய ராஜாக்களை ஏற்படுத்துகிறார். ஆபிரகாம் கர்த்த ருக்கு கொடுத்த பெயர், "சர்வலோக நியாயாதிபதி" என்பதாகும் (ஆதி. 18:25).

சோதோம், கொமோரா பட்டணங்கள், தேவனை விட்டு விலகி, ஆண்புணர்ச்சி யில் இறங்கினது, அவருக்கு மன வேதனையாயிருந்தது. அவர் அனுப்பின தூதர் களையும்கூட புரிந்துகொள்ளாமல், அவர்களையும் அனுபவிப்பதற்கு, மக்கள் கூடி வந்தார்கள். முதலாவது, கர்த்தர் அவர்களுக்கு குருட்டாட்டத்தை பிடிக்க வைத்தார். லோத்து நீதிமானாயிருந்தபடியால், லோத்தின் குடும்பத்தை வெளியேற்றி, சோதோமை அக்கினியால் அழித்துப் போட்டார்.

கிறிஸ்துவை அறியாதவர்களுக்குக் கூட, மனச்சாட்சியை வைத்திருக்கிறார். கிறிஸ்தவர்களுக்கென்று, நீதி நியாயங்களை போதிப்பதற்கு, வேதாகமத்தை அருளி செய்திருக்கிறார். சத்திய ஆவியை அனுப்பிக் கொடுக்கிறார். அரசாங்கத்தில் பணியாற்றின, ஒரு நல்ல தேவ மனிதனை, சிலர் அநியாயமாய் குற்றஞ்சாட்டி, வேலை நீக்கம் செய்தார்கள். அது நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தபோது, கள்ளசாட்சி சொல்லுவதற்காக, மூன்று பேரை எழுப்பினார்கள். நீதிபதி எல்லா வற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார்.

இவர், "குற்றமற்றவர்" என்று நீதிபதிக்குத் தெரிந்தாலும், அதை நிலை நிறுத்த போதிய சாட்சிகளில்லாமலிருந்தது. அன்றைக்கு, கள்ள சாட்சிகள் வீடுகளுக்குத் திரும்பும்போது, பலத்த விபத்து ஏற்பட்டு, மூன்று பேரும் அந்த இடத்திலேயே மரித்துப்போனார்கள். நீதிபதி அதை அறிந்தார். தீர்ப்பு எழுதும்போது, "இந்த கிறிஸ் தவன், நீதிநெறி தவறாதவன்," என்பதற்கு, கடவுளே சாட்சி. அந்த மூன்று சாட்சி களும், இன்றைக்கு பூமியிலில்லை. நான் விசாரித்த அளவில், இவர் குற்றமற்றவர், என்று தீர்ப்பு செய்தார்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய நீதி நியாயங்கள் புரட்டப்படுகிறதா? கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். நிச்சயமாகவே, கர்த்தர் உங்களுக்காக வழக்காடி யுத்தம் செய்வார். சர்வலோக நியாயாதிபதி, நியாயம் செய்யாமலிருப்பரோ?

நினைவிற்கு:- "என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்" (ஏசா. 42:1).