உன்னதத்தின் ஆவி!

"உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும், அப்படியே இருக்கும்; அப்பொழுது, வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்" (ஏசா. 32:15).

ஆண்டவர், "உன்னதத்தின் தேவன்" என்று அழைக்கப்படுகிறார். ஆங்கிலத் தில், "கூடஞு –ணிண்ணா ஏடிஞ்ட எணிஞீ." அதற்கு எல்லா தேவர்களிலும் அவர் உயரமானவர், உன்னதமானவர், மகிமையானவர் என்பது அர்த்தம். "உன்னதமான தேவன்" என்று யோபு பக்தன், அதிகமுறை தன்னுடைய புத்தகத்தில் எழுதுகிறார். சங்கீதம் 91-ஐ பாடலாக பாடும்போது, "உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன், சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்" என்ற வார்த்தைகள் உள்ளத்தை எவ்வளவு மகிழ்விக்கிறது! உன்னதமானவரால் வரும் அடைக்கலங்கள், பாதுகாப்புகள், ஒவ்வொரு வசனத்திலும் பிரகாசிக்கிறதைப் பார்க்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சில கிறிஸ்தவ தலைவர்கள், அப்போதைய முதல்வரை சந்திக்கப் போனார்கள். அவர், மேஜையில் வேதாகமத்தை வைத்திருக் கிறதைப் பார்த்ததும், அவர்களுக்கு பெரிய சந்தோஷம். "ஐயா, நாங்கள் ஒரு பெரிய ஆலயம் கட்டும்படியாக விரும்புகிறோம். ஆனாலும், எங்களுடைய ஆலயத்தின் அங்கத்தினர்கள், பெரும்பாலும் ஏழைகள். ஆகவே, தயவுசெய்து எங்களுக்கு ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலத்தைத் தர உத்தரவிட்டால், நன்றியுள்ளவர்களாயிருப்போம்" என்று சொன்னார்கள்.

அதற்கு அந்த முதல்வர், என்ன சொன்னார் தெரியுமா? "ஒன்றே குலம். ஒருவனே தேவன்." "கிறிஸ்து" ஒருவரே உன்னதமான தேவன் என்று, நான் உணருகிறேன். அவர் வழியோரம் நடப்பட்ட கற்களைப் போன்ற தெய்வமல்ல. அவருடைய போதனைகள், அவருடைய செயல்கள் அவ்வளவு உன்னதமானவை. அப்படிப்பட்டவருக்கு ஏன் புறம்போக்கு நிலத்தைக் கேட்கிறீர்கள்? இயேசு, புறம்போக்கு தெய்வமல்ல. நல்ல இடத்திலே, இடம் பார்த்து அருமையாய் கட்டுங் கள். உங்களுக்கு, எல்லாவிதத்திலும் நான் உதவியாயிருப்பேன் என்று சொன்னார். அந்தப்படியே, ஆலயத்துக்கு வேண்டிய செங்கல், சிமெண்ட் போன்றவைகளை, இலவசமாய் கொடுத்து உதவினார்.

யோபு பக்தன் சொன்னார், "உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?" (யோபு 31:2). அநேகர், உலகத்தில் அலைந்துத் திரிகிற பலவிதமான விக்கிரகங்களின் ஆவிகளை, தெய்வம் என்று எண்ணி, கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் தேவர்களென்றும், மதஸ்தாபகர்களென்றும், தங்களை தெய்வத்தின் திருஅவதாரம் என்றும் சொல்லிக்கொள்ளுகிறார்கள். கர்த்தர் ஒருவரே வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தவர். அவர் ஒருவரே, நமக்காக பூமிக்கு வந்து கல்வாரிச் சிலுவையிலே, ஜீவனைக் கொடுத்துவிட்டு, உன்னதத்துக்கு ஏறிச் சென்றவர்.

உன்னதமானவர், உங்கள்மேல் ஊற்றியிருக்கிற அபிஷேகமே, உன்னதத்தின் ஆவியாகும். அந்த ஆவி, நீங்கள் பூமிக்குரியவர்களல்ல, உன்னதத்திற்குரியவர்கள், நித்தியத்துக்குரியவர்கள் என்பதை, உங்களுக்கு உணர்த்திக் காண்பிக்கிறது. அவர் உங்களோடு உடன்படிக்கை செய்து, "உன்னதத்திலும், பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கின வர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ள வர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்" என்கிறார் (ஏசா. 57:15).

நினைவிற்கு:- "கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே, ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்" (மத். 21:9).