ஜீவனுடைய ஆவி!

"ஆவி போகவேண்டுமென்றிருந்த, எவ்விடத்துக்கும் அவைகள் போயின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது" (எசேக். 1:20).

"ஜீவனுடைய ஆவி," என்கிற வார்த்தை, எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் மாத்திரம் இருக்கிறது. அதுவும் திரும்பத் திரும்ப வருகிறது. நம் கர்த்தர் ஜீவனுடையவர். இ .0ன்றைக்கும் ஜீவிக்கிறவர். உயிர் வாழுகிறவர். "மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்," என்று திருவுளம் பற்றினவர் (வெளி. 1:18).

உலகத்தில், ஆயிரக்கணக்கான மதஸ்தாபகருடைய கல்லறைகள் மூடிக் கிடக் கின்றன. மரித்தார்கள், ஆனால் எழுந்திருக்கவில்லை. முகமது நபியின் கல்லறை, மெக்காவிலிருக்கிறது. மகாத்மா காந்தியின் கல்லறை, டில்லியிலுள்ள ராஜ்காட்டிலிருக்கிறது. அறிஞர் அண்ணாவின் கல்லறை, சென்னை மெரினாவில் இருக்கிறது. அரசியல் தலைவர்கள், எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும், அவர்கள் இந்த ஜீவனுள்ளோர் தேசத்திலே, என்றென்றும் ஜீவிக்கிறவர்களல்ல.

ஒருமுறை பரிசேயரும், சதுசேயரும், யூதர்களும் இயேசுவிடத்திலே வந்து, "எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும், நீ பெரியவனோ? அவர் மரித்தார். தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்" (யோவா. 8:53). அதற்கு இயேசு; "உங்கள் பிதாவாகிய ஆபிரகாம், என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான். கண்டு களிகூர்ந்தான். ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே, நான் இருக்கிறேன் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" (யோவா. 8:56,58).

இன்றைக்கு கிறிஸ்தவ மார்க்கத்திலே, ஒரு பிரிவினர், புனிதரை வணங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இயேசுவின் தாயாகிய மரியாளானாலும் சரி, எவ்வளவு பெரிய புனிதராயிருந்தாலும் சரி, அவர்கள் மரித்தார்கள். யாரும் உயிர்த் தெழுந்ததில்லை. அவர்கள் நம்முடைய ஜெபத்தைக் கேட்பதுமில்லை. அந்த ஜெபத்தை, கிறிஸ்துவிடம் கொண்டு போவதுமில்லை.

ஒருமுறை ஒருவரிடம், "நீங்கள் எப்படி இரட்சிக்கப்பட்டீர்கள்?" என்று கேட்ட போது, அவர் சொன்ன பதில் என்னை சிந்திக்க வைத்தது. "செத்த மாடு, உயிருள்ள கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்குமோ? செத்த புனிதர்கள், உன் ஆவிக்குரிய ஜீவியத்திலே, நீ வளர, உனக்கு உதவிச் செய்ய முடியுமோ? என்ற வார்த்தையின் மூலமாக, இரட்சிக்கப்பட்டேன். கர்த்தர் எனக்கு, உண்மையான தேவனையும், ஜீவனுள்ள தேவனையும் மட்டுமே, அறிவிக்க வேண்டும். அவரே, இரட்சிப்பைத் தர வல்லமையுள்ளவர்," என்பதை உணர்த்தினார்.

இன்னொரு சகோதரன் சொன்னார், "நீங்கள் வழி தெரியாமல் தடுமாறுகிறீர்கள். ஒருபக்கம் பல தெய்வங்களின் சிலைகளிருக்கின்றன. இன்னொரு பக்கம், உயிருள்ள ஒருவர் நிற்கிறார். யாரைப் பார்த்து வழி கேட்பீர்கள்? சிலைகளாகிய சொரூபங்களிடமா? அல்லது ஜீவனுள்ள கிறிஸ்துவிடமா?"

ஆம், ஜீவனுள்ள இயேசுவே, வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். அவர் ஒருவரே, உங்களுக்கு நித்திய ஜீவனைத் தந்து, பிதாவினிடத்தில் அழைத்துச் செல்லுகிறவர். இயேசு மரித்தோரிலிருந்து, உயிரோடு எழுந்தார். நாற்பது நாளளவும் தம்முடைய சீஷர்களுக்கு தரிசனமாகி, தான் உயிரோடிருப்பதை வெளிப்படுத்தினார். பிறகு மேகங்கள்மேல் ஏறி, பிதாவினுடைய வலதுபாரிசத்திலே அமர்ந்தார். நமக்காக பரிந்து பேசுகிற, அவர் மீண்டும் இந்தப் பூமிக்கு வருவார்.

நினைவிற்கு:- "இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு, என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்" (சங். 42:8).