புதிய ஆவி!

"அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளு வேன்" (எசேக். 11:19).

கடைசி காலங்களிலே, கர்த்தர் நமது மனதில் எழுதக்கூடிய, புதிய உடன் படிக்கையை செய்தருளுவார். அந்த உடன்படிக்கையின்படி, நமது உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுப்பார். பழைய ஏற்பாட்டில், தலையிலே எண்ணெய் வார்த்து அபிஷேகம் பண்ணினவர், இப்பொழுது, உள்ளத்தை அபிஷேகம்பண்ணுகிறார். புதிதான ஆவியைக் கொடுக்கிறார். சதையான இருதயத்தை அருளிச் செய்கிறார். இதைக் குறித்து அப். பவுல் எழுதும்போது, "உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவி யுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும், தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள" (எபேசி. 4:23,24).

கர்த்தர் என்னை இரட்சித்தபோது, அதுவரை என்னை அழுத்திக்கொண்டிருந்த ‘டிப்ரஷன்,’ என்னை விட்டு நீங்கினதை உணர்ந்தேன். ஒரு பெரிய பாராங்கல் என்னைவிட்டு நீங்கினது. இருளின் ஆதிக்கம், என்னை விட்டு விலகினதை உணர்ந்தேன். மட்டுமல்ல, கர்த்தர் என்னை ஒரு புதிய சிருஷ்டியாய் மாற்றினார். பரலோக குடும்பத்தின் அங்கத்தினராய், என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார். "ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின" (2 கொரி. 5:17).

என்னை விட்டு, பழைய சினிமா மோகங்கள் ஒழிந்து போயின. கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட் ஒழிந்துபோனது. பழைய நண்பர்கள் எங்கே போனார்களென்று தெரியவில்லை. பிசாசின் ஆதிக்கத்துக்குள்ளிருந்த நான், இயேசு வின் இரத்தத்தால், புதிய மனிதனாகி, கர்த்தரோடு நடக்க ஆரம்பித்தேன். இரட்சிப்பை மட்டுமல்ல, கர்த்தருடைய புதிய ஆவியினாலே, உங்கள் ஆத்துமாவை அபிஷேகம் பண்ணுகிறார். உங்களுடைய இருதயம், வெறுமையாயிருக்கக்கூடாது. புதிய அபிஷேகத்தைப் பெற்று, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும்.

ஒருமுறை டி.எல் மூடி என்ற பக்தன், விசுவாசிகளைப் பார்த்து, "ஒரு கண்ணாடி குடுவையில், விஷவாயு நிறைய இருக்கிறது. அதை வெளியேற்றுவது எப்படி?" என்று கேட்டார். சிலர், அந்த கண்ணாடிக் குடுவையை கவிழ்த்து வைத்து விட்டால், விஷவாயு வெளியேறிப் போய்விடும் என்றார்கள். வேறு சிலர், அந்த கண்ணாடிப் குடுவையை, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டிக்கொண்டிருந்தால், வெளிக்காற்று உள்ளே போய், முழுவதும் சுத்தமாகி விடும் என்றார்கள். மூடி பக்தன் சிரித்துக் கொண்டே, "என்ன செய்தாலும், நீங்கள் நூற்றுக்கு நூறு, அந்த, விஷவாயுவை வெளியேற்ற முடியாது. அதை வெளியேற்ற எளிதான ஒரு வழி என்ன தெரியுமா? இந்த கண்ணாடிக் குடுவை முழுவதையும் தண்ணீரால் நிரப்பி விடும்போது, விஷவாயுக்கு உள்ளே இடமில்லாதபடி, தானாக வெளியேறிவிடும்" என்றார்.

அதுபோல, உங்களை புதிய ஆவியாகிய, பரிசுத்த ஆவியினால் நிரப்பும்போது, உங்களுக்குள்ளேயிருக்கிற வேண்டாத அசுத்தங்கள், பாவ பழக்கவழக்கங்கள், சாத்தானுடைய கேடுபாடுகளெல்லாம் வெளியேறிவிடும். தேவபிள்ளைகளே, உங்களுடைய உள்ளத்தை, ஒருநாளும் வெறுமையாய் வைத்திராதிருங்கள். அப்படி வைத்தால், உள்ளேயிருந்து வெளியேறிய, பல அசுத்த ஆவிகள், இன்னும் வேறு ஏழு பொல்லாத ஆவிகளையும் கூட்டிக்கொண்டு வந்து, உட்புகுந்துவிடும் அல்லவா? (மத். 12:43-45). உங்களைப் பரலோக ஆவியினால் நிரப்புங்கள்.

நினைவிற்கு:- "புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன். என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்" (சங். 92:10).