விசேஷித்த ஆவி!

"தானியேலுக்குள் சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிறதும், கருகலானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும், புத்தியும், விசேஷித்த ஆவியும் உண்டென்று காணப் பட்டது" (தானி. 5:12).

தானியேலுக்குள் கர்த்தர் வைத்திருந்த ஆவி, "மகா விசேஷ"மானது. அதை ராஜாவாகிய பெல்ஷாத்சார், தன்னுடைய தாயின் மூலம் அறிந்தார். "உம்முடைய ராஜ்யத்திலே, ஒரு புருஷன் இருக்கிறான். அவனுக்குள், பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது. உம்முடைய பிதாவின் நாட்களில், வெளிச்சமும், விவேகமும், தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது" (தானி. 5:11). "தானியேலுக்குள், சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிறதும், புதை பொருள்களை வெளிப்படுத்துகிறதும், கருகலானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும், புத்தியும், விசேஷித்த ஆவியுமுண்டு."

பெல்ஷாத்சார் ராஜா, தானியேலைப் பார்த்து, "உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும், புத்தியும், விசேஷித்த ஞானமும், உன்னிடத்தில் காணப்பட்டது என்றும், உன்னைக் குறித்து கேள்விப்பட்டேன் என்றார்" (தானி. 5:14). பெல்ஷாத்சார் ராஜாவுக்குப் பிறகு வந்த தரியு ராஜா, "தானியேலுக்குள், "விசேஷித்த ஆவி" இருந்தமையால், அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த, ராஜா நினைத்தார்" (தானி. 6:3).

தேவபிள்ளைகளே, உங்களுடைய குடும்பத்தில், கர்த்தர் உங்களை விசேஷ முள்ளவர்களாய் மாற்றுகிறவர், அலுவலகத்திலே நீங்கள் பலபேரோடு வேலை செய்தாலும், நீங்கள் விசேஷமுள்ளவர்களாய் விளங்குவீர்கள். காரணம் என்ன? தேவனாகிய கர்த்தர் விசேஷமுள்ளவர். "மற்ற நேசரைப் பார்க்கிலும், உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப் பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? (உன். 5:9). அதன் பதில் என்ன? "என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்." "வெண்மை," "பரிசுத்தத்தைக்" குறிக்கிறது. "சிவப்பு" அவருடைய தியாகமாகிய "கல்வாரி அன்பைக்" குறிக்கிறது. அவருடைய தலை தங்கமயமாயிருக்கிறது. "தங்கம்" என்பது, "விசுவாசத்தைக்" குறிக்கிறது. "பொன்னிலும், பசும்பொன்னிலும், மேன்மையான வேதத்தைக்" குறிக்கிறது. ஆம், அவர் விசேஷித்தவர்.

ஒரு தகப்பனுக்கு ஆறு பிள்ளைகள். அவர் தனக்கிருந்த ஒரே வயல் நிலத்தை, ஆறு பேருக்கும் பங்குபோட விரும்பாமல், இதில் விசேஷித்தவன் யார்? அவனுக்குக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்தார். ஆகவே, தன் ஆறு பிள்ளைகளையும் கூப்பிட்டு, உங்களுடைய கையிலே ஆளுக்கு, ஆயிரம் ரூபாய் கொடுப்பேன். எப்படியாவது, நம்முடைய வீட்டின் ஒரு அறையை, இந்த பணத்தைக்கொண்டு பொருள் வாங்கி நிரப்ப வேண்டும் என்று சொன்னார். ஒருவன், ஆயிரம் ரூபாய்க் கும் வைக்கோல் வாங்கி நிரப்பினான். அடுத்தவன், ஆயிரம் ரூபாய்க்கு மணலை வாங்கி கொட்டினான். ஒவ்வொருவரும், ஒவ்வொருவிதத்தில் நிரப்புவதற்கு, முயற்சித்தார்கள்.

ஆனால் இளைய மகனோ, குறைந்த விலையில் ஒரு மெழுகுவர்த்தியையும், தீக்குச்சியையும் வைத்து, அந்த அறையை வெளிச்சத்தினால் நிரப்பினான். அவனே விசேஷித்தவன். அவனுக்கு வயல் கொடுக்கப்பட்டது. தேவபிள்ளைகளே, நீங்கள் விசேஷமுள்ளவர்களாய் விளங்கும்படி, உங்களை கிறிஸ்துவின் சுபாவங்களால் நிரப்புவீர்களாக. ஆவியின் வரங்களால் நிரப்புவீர்களாக.

நினைவிற்கு:- "உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள், யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக" (ஆதி. 49:26).