என்னுடைய ஆவி!

"பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" (சகரி. 4:6).

"என்னுடைய ஆவியினாலேயே ஆகும்," என்றால் என்ன அர்த்தம்? மற்ற எந்தவிதத்திலும், ஆகவே ஆகாது. பணத்தினாலோ, செல்வத்தினாலோ, செல்வாக் கினாலோ ஆகாது. ஆவியானவரில் சார்ந்துகொள்ளும்போது, மனுஷரால் கூடாதவை களை, அவர் கைக்கூடி வரும்படிச் செய்வார்.

இந்த சரித்திரத்தின் பின்னணியை, பாருங்கள். எழுபது ஆண்டுகள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக யூதர்கள், எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். சாலொமோன் கட்டின தேவாலயம், தீக்கிரையாக்கப்பட்டு, தகர்ந்து கிடந்ததைப் பார்த்த, செருபாபேல் என்ற வாலிபனின் உள்ளத்தில், ஆலயத்தைக் கட்டும்படி, பக்தி வைராக்கியம் எழுந்தது. ஒரு பெரிய பர்வதத்தைப்போல, சாத்தான் எழுந்து தடுக்க ஆரம்பித்தான். மறுபக்கத்தில் கர்த்தர் செருபாபேலை திடப்படுத்தி, "என் மகனே, பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல. என்னுடைய ஆவியினாலேயே ஆகும்," என்றார்.

இரண்டாவதாக, அவர் சாத்தான் பக்கமாய் திரும்பி, "பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்" என்று கடிந்து கொண்டார். மூன்றாவதாக, சகரியா தீர்க்கதரிசியிடம், "செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்" என்று சொன்னார் (சகரி. 4:7,9).

இன்றைக்கு நானும், நீங்களும் ஒரு ஆவிக்குரிய ஆலயத்தை கட்டிக்கொண்டிருக் கிறோம். உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார் (அப். 7:47,48). "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனு டைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும், அறியாதிருக்கிறீர்களா?" (1 கொரி. 3:16). எப்பொழுது உங்களுடைய வாழ்க்கையை பரிசுத்தமாய், கர்த்தரு டைய ஆலயமாய், தேவனுடைய வாசஸ்தலமாய் கட்ட எண்ணுகிறீர்களோ, அப்பொழுது நிச்சயமாகவே சாத்தான் உங்களை எதிர்க்கக்கூடும்.

அதே நேரத்தில், கர்த்தருடைய ஆவியானவரும், தேவதூதர்களும் உங்க ளோடிருக்கிறார்கள். வெள்ளம்போல் சத்துரு வரும்போது, ஆவியானவர் நிச்சயமாக உங்களுக்காக கொடியேற்றுவார் (ஏசா. 59:19). உங்களுடைய எல்லா சத்துருக்களுக்கு முன்பாக கர்த்தர் உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, உங்களுடைய தலையை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுவார். கர்த்தர் உங்களுக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியைக் கொடுத் திருக்கிறார் (2 தீமோத். 1:7). ஆகவே, திடன்கொண்டு உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை, ஆலயமாக கட்டியெழுப்புங்கள்.

மோசே, பார்வோனுடைய அரண்மனையிலிருந்தபோது, தன் சுயபெலத்தினால் இஸ்ரவேல் ஜனங்களை விடுதலையாக்கிவிடலாம் என்று நினைத்தார். அப்படியே, ஒரு எகிப்தியனை அடித்துக் கொன்று புதைத்துவிட்டார். முடிவாக, தோல்வி யடைந்தவராய், மீதியான் தேசத்திற்கு ஓட வேண்டியதாயிற்று. கர்த்தர் அவருக்கு கற்றுக்கொடுத்த பாடம், "என்னுடைய ஆவியினாலேயே ஆகும்" என்பதே.

தேவபிள்ளைகளே, மோசேயைப்போல, உங்கள் சுயபெலனை சாராமல், ஆவியானவரில் சார்ந்து நிற்கும்போது உங்களுடைய யுத்தத்தை, கர்த்தர் தன்னுடைய யுத்தமாய் செய்து, ஜெயத்தைத் தந்தருளுவார். "ஆவியினாலேயே ஆகும்."

நினைவிற்கு:- "அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டு வருகிறீர்கள்" (எபேசி. 2:22).