பரிசுத்தமுள்ள ஆவி!

"பரிசுத்தமுள்ள ஆவியின்படி, தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த் தெழுந்ததினாலே, பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்" (ரோம. 1:5).

தேவனுடைய பரிசுத்தத்தின் மகத்துவத்தை, நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். தேவன், முழுக்க முழுக்க பரிசுத்தர். பிதாவாகிய தேவன் பரிசுத்தராயிருக்கிறார். குமாரனும் பரிசுத்தமுள்ளவர். அதேபோல, பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தத்தை வெளிப்படுத்துகிறார். மனுமக்களாகிய நமக்கு பரிசுத்தத்தைத் தருகிறார். அவர் அருளிய வேத புத்தகத்தினாலே, நம்மை பரிசுத்தப்படுத்துகிறார்.

"புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து" என்று, அப். பவுல் குறிப்பிடுகிறார். (ரோம 15:15). ஆம், கிறிஸ்தவ வாழ்க்கையிலே, "பரிசுத்தம்" மிகவும் முக்கியம். பரிசுத்தமில்லா விட்டால், தேவனை தரிசிக்க முடியாது. பரிசுத்தம் இல்லாவிட்டால், அவருடைய பிள்ளைகள், என்று அழைக்கப்பட முடியாது.

பரிசுத்தமில்லாமற்போனால், சாத்தான் உங்களோடுகூட சேர்ந்துகொள்வான். உங்களால் ஊக்கமாய் ஜெபிக்க முடியாது. பாவங்களும், சாபங்களும் அலைமோதி விடும். வேதம் சொல்லுகிறது, "உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல, நீங்களும் உங்கள் நடக்கை களெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்" (1 பேது. 1:15).

நீங்கள் பரிசுத்தராய் விளங்க வேண்டும் என்பதற்காகவே, கர்த்தர் உங்களுக்காக தன்னையே தந்தருளி, கல்வாரிச் சிலுவையிலே, பாடுகளும், வேதனைகளும் அனுபவித்து, தம்முடைய இரத்தத்தினால் உங்களை கழுவி சுத்திகரித்து, பரிசுத்த மாக்குகிறார். "இவரோ, (இயேசுவோ) தம்முடைய பரிசுத்தத்துக்கு, நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்" (எபி. 12:10).

உங்களுடைய வாழ்க்கையில் முதலும், முக்கியமானதும், பரிசுத்தமாயிருக் கட்டும். பரிசுத்தத்திற்கு அடுத்துதான் வல்லமை, பெலன், அற்புதங்கள், அடை யாளங்களெல்லாம் வருகின்றன. முதலாவது, தேவனுடைய பரிசுத்தத்தில் பூரண ராகும்படி, அதை நாடுங்கள். பரிசுத்தமுள்ளவர்கள்தான், கர்த்தருடைய வருகையிலே காணப்பட முடியும். மகிமையின்மேல் மகிமையடைய முடியும்.

ஆகவே, கறைதிரை ஒன்றுமில்லாமல், உங்களை சுத்திகரித்துக்கொள்ளுங்கள். பரிசுத்தமில்லாமல், பரலோக ராஜ்யத்திலே நீங்கள் காணப்படவே முடியாது. அது பரிசுத்தவான்களின் தேசமாயிருக்கிறது. அசுத்தத்தையும், அருவருப்பையும் நடப்பிக்கிற ஒன்றும், பரலோகத்துக்குள் பிரவேசிப்பதில்லை. சுத்திகரிக்கப்பட்ட பரிசுத்தவான்களே, பரலோகத்தை நிரப்பியிருப்பார்கள்.

கிறிஸ்தவர்களும்கூட, "என்னால் பரிசுத்தமாய் ஜீவிக்க முடியவில்லை. கண்களின் இச்சையிலே எனக்கு ஜெயமில்லை. யாரையும் இச்சையோடு பார்த்து விடுகிறேன். கனவிலும்கூட, அசுத்தமான கெட்ட சொப்பனங்கள் வருகின்றன," என்று துக்கத்தோடு சொல்லுகிறார்கள். இந்த நிலையில் கர்த்தரை சார்ந்துகொள்ளுங்கள். அவர் உங்களுடைய கரத்தைப் பிடித்து, பரிசுத்த பாதையிலே நடத்துவார். நீங்களும், கர்த்தரும், இணைந்து செய்கிற கூட்டு முயற்சிதான், பரிசுத்த வாழ்க்கையாகும். ஆகவே, பரிசுத்தமாய் வாழ நினைக்கிறவர்கள், கர்த்தரில் சார்ந்துகொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்" (எபி. 12:10).