நித்திய ஆவி!

"நித்திய ஆவியினாலே, தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்து" (எபி. 9:14).

உங்களுடைய கண்களுக்கு முன்பாக, வலது புறமும், இடது புறமும் மிகவும் நீளமான நூல் ஒன்று, செல்லுகிறதாக எண்ணிக்கொள்ளுங்கள். அந்த நூலில், இரண்டு புள்ளிகளை வையுங்கள். ஒன்று, உங்களுடைய பிறப்பு. அடுத்தது, உங்களுடைய இறப்பு. நீங்கள் பிறப்பதற்கு முன்பாக, நித்திய வருஷ காலங்களிருக்கிறது. அதை, "கடந்த நித்தியம்" என்று அழைக்கலாம். அதுபோல உங்களுடைய இறப்புக்குப் பிறகு, மிக நீளமான நித்தியம் இருக்கிறது. அது "வருங்கால நித்தியம்." இடையில் நீங்கள் இந்த பூமியிலே வாழுவதற்கு, கர்த்தர் ஒரு நல்ல வாய்ப்பை அளித்திருக் கிறார்.

பூமியிலே பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், பெரிய நீண்ட நித்தியத்தைத் தாண்டி வந்திருக்கிறான். ஆனாலும், கடந்து வந்த நித்தியத்தைக் குறித்து, அவனுக்கு ஒன்றுமே தெரிவதில்லை. இந்த பூமிக்குரிய வாழ்க்கையானது, இனி வரப்போகும் நித்தியத்திற்கு, ஆயத்தப்படுகிற வாழ்க்கையாயிருக்கிறது.

"நித்தியம்" என்பது, ஒரு மாபெரும் இரகசியமாகும். இந்த இரகசியத்தை வேத புத்தகத்தைத் தவிர, வேறு எந்த புத்தகங்களும் விளக்கிக் காண்பிக்கவில்லை. உங்கள் வருங்கால நித்தியத்துக்காக, பரிசுத்தத்தோடும், தெய்வீக அன்போடும், மிகுந்த மனத்தாழ்மையோடும், ஜெபத்தோடும், ஆயத்தமாக வேண்டியது மிகவும் அவசியம்.

இயேசு கிறிஸ்துவினுடைய பல பெயர்களை, ஏசாயா தீர்க்கதரிசி எழுதிவிட்டு அவருடைய நாமம், "நித்திய பிதா" என்று அழைத்தார். அதுபோல, கர்த்தர் நமக்குக் கொடுக்கிற ஆவியின் பெயரும், "நித்திய ஆவி" என்று அழைக்கப்படுகிறது (எபி. 9:14). அந்த நித்திய ஆவியிலே, கிறிஸ்து சார்ந்துகொண்டு தம்மையே பழுதற்ற பலியாக பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தார். அவர் பரலோகத்திலே தேவ குமாரனாயிருந்தவர். பூமிக்கு வந்தபோதோ, மனுஷ குமாரனாய் நமக்குள் மாதிரியாய் வாழ்ந்து காண்பித்தவர். ஆம், நித்திய ஆவியினாலேயே, உங்களை கர்த்தருக்கு ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். இப்படித்தான் அநேக பரிசுத்தவான்கள், தங்களை ஒப்புக்கொடுத்து, இரத்த சாட்சிகளாய் மரித்திருக்கிறார்கள்.

மனுஷனுடைய சரீரப் பிரகாரமான வாழ்க்கை, மரணத்தில் முடிவடைந்து விட்டாலும்கூட, அவனுடைய ஆவியோ, ஆத்துமாவோ மரிப்பதில்லை. அவை நித்தியமானவை. எல்லோருடைய ஆவியும், தன்னைத் தந்த தேவனிடத்திற்குப் போகிறது (பிர. 12:7). ஆனால், அவன் ஆத்துமா தான், நித்திய மகிழ்ச்சிக்குள்ளே, அல்லது பாவம் செய்திருந்தால், நித்திய வேதனையை நோக்கிச் செல்லுகிறது.

ஆகவே, நித்தியமான கிறிஸ்துவின்மேலும், ஆவியானவர் மேலும் நம்பிக்கை வையுங்கள். மரண நேரத்திலே, அதுவரை நமக்கு ஒரு வீடாய், போர்வையாய், தங்கி தாபரிக்கும் வாசஸ்தலமாயிருந்த சரீரம், கீழே விழுகிறது. வேக வேகமாய் அழுக ஆரம்பிக்கிறது. ஆனால், உங்களுடைய ஆத்துமா நித்தியமானது. நம்முடைய மரணமோ, அல்லது கர்த்தருடைய வருகையோ, எது முதலாவது இருந்தாலும், நீங்கள் கர்த்தரோடு வாசம்பண்ண வேண்டும். நித்திய நித்தியமாய், தேவ பிரசன்னத்திலே, மகிழ்ந்து களிகூர வேண்டும். அதற்கு உங்களை ஆயத்தப் படுத்திக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை. உன் சந்திரன் மறைவது மில்லை. கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். உன் துக்கநாட்கள் முடிந்து போம்" (ஏசா. 60:20).