தேற்றும் ஆவி!

"வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்... நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன். உங்களிடத்தில் வருவேன்" (யோவா. 14:16,18).

கர்த்தர் நம்மை ஆற்றுகிறவர், தேற்றுகிறவர், ஆறுதல் செய்கிறவர். அவர் ஒருவரே தாய் தேற்றுவதுபோல, நம்மைத் தேற்றுகிறவர். "தாயைப் போல, மார்பையுடைய தேவன்," என்று அவர் அழைக்கப்படுகிறார். பாருங்கள்! ஆபிரகாமுக்கு 99 வயதானபோதும்கூட, அந்த வயதிலும், அவரை தேற்றுகிற தாயின் அன்பு, அவருக்குத் தேவைப்பட்டது (ஆதி. 17:1).

இயேசு இந்த பூமிக்கு வந்தபோது, தேற்றரவாளனாகவே வந்தார். காரணம், இந்த உலகத்தின் அதிபதியான, பிசாசு ஜனங்களை காயப்படுத்தி, நிம்மதியை இழக்கச் செய்கிறான். நோய்களையும், வியாதிகளையும், மரணத்தையும், துக்கத்தையும், உண்டாக்குகிறான். இயேசுவைப் போல, நம்மைத் தேற்றுகிறவர்கள் யாருண்டு? அவரது முப்பத்து மூன்று ஆண்டு ஊழியத்திலே, ஆயிரமாயிரமான மக்கள் தேற்றப்பட்டார்கள்.

அவருடைய ஊழியம் முடிகிற நேரம் வந்தது. இனி, அவர் சிலுவையிலே மரிக்கப்போகிறார். அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்து பிதாவின் வலதுபாரிசத்தில், ஏறிச் செல்லப்போகிறார். அந்த நேரம், இயேசு தம்முடைய அன்பான சீஷர்களை நினைத்து, உள்ளம் கலங்கினார். அவர்களை ஆறுதல்படுத்தி, தேற்றுவதற்காக வேறொரு தேற்றரவாளனை அறிமுகம் செய்தார். அவர் தான் "தேற்றுகிற ஆவி," அல்லது "தேற்றரவாளன்."

அன்றைக்கு சீஷர்களுக்கு மட்டுமல்ல, இன்றைக்கு உங்கள் ஒவ்வொருவரையும் ஆற்றித் தேற்றவே, தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் வெளியேயிருந்தும் உங்களைத் தேற்றுகிறார். உள்ளத்திலே தங்கியிருந்தும் உங்களைத் தேற்றுகிறார். உலகப்பிரகாரமாக தேற்றுகிறார். அதே நேரத்தில், ஆவிக்குரிய பிரகாரமாகவும் தேற்றுகிறார். பரிசுத்த ஜீவியத்திலிருந்து விழுந்துவிடாதபடி பாதுகாக்கிறார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியினாலும் ஆறுதலையும், தேறுதலையும், பெற்றுக்கொண்டடீர்களானால், அந்த அன்பை மற்றவர்களுக்குக் காட்டுங்கள். அவர்கள் துயரப்பட்ட நேரத்திலே, ஆறுதல் சொல்லுங்கள். சோர்ந்து, முறிந்துபோய்விடாதபடிக்கு, உங்களுடைய அன்பின் வார்த்தைகளினாலும், ஜெபத்தினாலும், அவர்களை எழுப்பிக் கட்டுங்கள்.

இந்த உலகம் ஆறுதலற்ற உலகம். திரளான ஜனங்கள், தங்கள் மனதிலே ஆழமான காயங்களோடும், வேதனைகளோடும் தவிக்கிறார்கள். வாலிப வயதில், கணவனை இழந்துத் தவிக்கும் இளம் விதவைகள். அநாதைகளாய் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைகள். அவர்களை ஆற்றித் தேற்றக்கூடியவர் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரே. "ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல, நான் உங்களைத் தேற்றுவேன். நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள் (ஏசா. 66:13).

பழைய ஏற்பாட்டிலே, நோவா என்ற வார்த்தைக்கு, "தேற்றுகிறவன்" என்று அர்த்தம். அவருடைய தகப்பனாகிய லாமேக்கு, நோவா என்று பெயர் சூட்ட காரணம் என்ன? "நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்" (ஆதி. 5:29).

நினைவிற்கு - "என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள். எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும் அதற்குக் கூறுங்கள்" (ஏசா40:1,2)