சத்திய ஆவி!

"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்து வார்" (யோவா. 16:13).

வேதத்தில் மொத்தம் ஐந்து இடங்களில், "சத்திய ஆவி" என்ற வார்த்தை, வருகிறது. பழைய ஏற்பாட்டிலே, அந்த வார்த்தை ஒருமுறைகூட வரவில்லை. இயேசுகிறிஸ்து, அந்த சத்திய ஆவியானவரைக் குறித்து அறிமுகம் செய்தார். உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும், அறியாமலும் இருக்கிறபடியால், அவரைபெற்றுக்கொள்ள மாட்டாது. அவர் உங்களுடனே வாசம் பண்ணி, உங்களுக் குள்ளேயிருப்பதால் நீங்கள், அவரை அறிவீர்கள் (யோவா. 14:17).

இந்த உலகம், சாத்தானுக்குள்ளே கிடக்கிறது. அவன் பொய்யனும், பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான். அவன், எப்பொழுதும் சத்தியத்துக்கு விரோதமாய்க் கிரியைச் செய்கிறான். தந்திரமாய் ஏமாற்றுகிறான். பாருங்கள்! கர்த்தர், ஆதாம் ஏவாளோடு, "விலக்கப்பட்ட இந்த நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசித்தால், சாகவே சாவாய்" என்று, அவர்களுக்கு நேரிடப்போகும் ஆத்தும மரணத்தைக் குறித்து எச்சரித்தார். ஆனால் சாத்தானோ, "நீங்கள் சாகவே சாவதில்லை. இதை புசிக்கும் நாளிலே, உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள், தேவர்களைப் போல இருப்பீர்கள்," என்று பொய்யாய், நயவஞ்சகமாக சொன்னான்.

அதை நம்பி ஏவாள், பின்பு ஆதாம் விலக்கப்பட்ட கனியைப் புசித்தார்கள். அவர்களுடைய ஆத்துமா, அன்றே மரித்தது. ஆத்தும மரணத்தைப் பற்றி கர்த்தர் பேசினார். ஆனால் சத்துருவோ, சரீர மரணத்தைக் குறித்து சொன்னார். ஆம், அவன் பொய்யை ஊதுகிறான். பொய்யும் பொய்க்குப் பிதாவுமானவன் (யோவா. 8:34). திருடன் திருடவும், கொல்லவும், அழிக்கவுமே வருகிறான் (யோவா. 10:10).

அதேநேரம் இயேசு கிறிஸ்து சொன்னார், நானே வழியும், சத்தியமும் ஜீவனு மாயிருக்கிறேன் (யோவா. 14:6). இயேசு, எப்பொழுதுமே சத்தியத்தைதான் பேசினார். அவர்தான், உங்களுக்கு சத்திய ஆவியை அறிமுகப்படுத்துகிறார். உங்களுடைய இருதயத்தை, சத்திய ஆவியினால் நிரப்புகிறார். அப். யோவான் தம்முடைய நிருபத்தில் எழுதினார். சத்திய ஆவி இன்னதென்றும், (1 யோவா. 4:6). வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். கிறிஸ்துவே சத்தியம். ஆகையால் ஆவியானவர், இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கொடுக்கிறார் (1 கொரி. 1:1, யோவா. 5:6).

சத்தியத்துக்கு விரோதமாய் கிரியைச் செய்கிற, சாத்தானுடைய முதல் ஆவி, "வஞ்சக ஆவி" என்பதாகும். அவன் தந்திரமாய் பேசி, சத்தியத்தை புரட்டி, பொய்யை ஊதி, ஜனங்களை இடறப்பண்ணுகிறான். ஏமாற்றுகிறான். அடுத்த ஆவி, அந்திகிறிஸ்துவின் ஆவி. அவன் கிறிஸ்துவை மறுதலிக்கிறான். தன்னை வேறொரு கிறிஸ்துவாக காண்பித்து, மக்களை கிறிஸ்துவினின்று திசை திருப்புகிறான். இயேசு விடத்திலே, "சத்திய ஆவி என்ன?" என்று, பிலாத்து கேட்டான். சத்தியமானவர் அவருக்கு முன்னாலிருந்தும்கூட, அவன் சத்தியத்தை அறியவில்லை.

தேவபிள்ளைகளே, சத்தியத்தை சத்தியமாக நீங்கள் அறியும்படி, தேவன் தேவ ஆவியானவரின் சத்திய வேதாகமத்தை, உங்களுடைய கைகளிலே தந்திருக்கிறார். அதன் ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியம். அவை நித்தியம். வானமும், பூமியும் ஒழிந்துபோனாலும், ஆவியானவர் உரைத்த சத்திய வார்த்தைகள், ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை.

நினைவிற்கு:- "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" (யோவா. 16:13).