குமாரனுடைய ஆவி!

"தேவன், தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். ஆகையால் இனி நீ அடிமையாயிராமல், புத்திரனாயிருக்கிறாய்" (கலா. 4:6,7).

இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரனாயிருக்கிறார். அவர், பிதாவின் "ஒரே பேறான குமாரன்." அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, கர்த்தருடைய பிள்ளைகளாகும்படியான அதிகாரத்தைத் தந்தருளுகிறார். மட்டு மல்லாமல், தேவன் தம்முடைய குமாரனுடைய ஆவியை, உங்கள் இருதயங்களில் அனுப்பி, "இனி நீ அடிமையல்ல, புத்திரனாயிருக்கிறாய். இனி நீ அந்நியனல்ல, தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்," என்று உரைக்கிறார்.

ஒருமுறை நான் சவுதி அரேபியா போயிருந்தபோது, ஒரு இஸ்லாமிய வாலிபன் என்னோடு தர்க்கம்பண்ணும்படி வந்தான். நான் சொன்னேன், "நான் தர்க்கம்பண்ண விரும்பவில்லை. ஆனால் நீ வாஞ்சையாயிருந்தால், அதை நீ விளங்கும்படி உனக்கு விளக்கிச் சொல்லித்தர விரும்புகிறேன். நீ அறிந்துகொள்ள ஆவலாயிருந்தால், உன் சந்தேகங்களை கேள்," என்று சொன்னேன்.

அவன் சொன்னான், "பிதாவாகிய தேவனுக்கு, அல்லது அல்லாவுக்கு மனைவி இல்லை. அல்லாவுக்கு சகோதர, சகோதரிகளுமில்லை. அல்லாவுக்கு திருமணமும் ஆகவில்லை. அப்படியிருக்கும்போது, அவருக்கு எப்படி குமாரன் வருவான்? ஏன் அவர், "ஒரே பேறான குமாரன்" என்று அழைக்கப்படுகிறார்? அப்படியானால், பிதாவின் மனைவி, மரியாளா?" என்று கேட்டான்.

பரிசுத்த ஆவியானவருடைய ஒத்தாசையோடு, நான் அவனைப் பார்த்து சொன்னேன், "பிள்ளைகள் இருப்பதற்கு, திருமணமாகித்தான் இருக்க வேண்டும் என்பது, கட்டாயமல்ல. ஆதாம், ஏவாள் தாய், தகப்பனின்றி சிருஷ்டிக்கப்பட் டார்கள். எபி. 7-ம் அதிகாரத்தில், மெல்கிசேதேக்கு தாயும், தகப்பனுமில்லாதவர் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே, பிதாவுக்கு அல்லது, அல்லாவுக்கு திருமணம் ஆகித் தான், குமாரன் வர வேண்டும் என்பது அவசியமில்லை."

"நீ இன்னும் புரிந்துகொள்வதற்கு, சூரியனை நோக்கிப் பார். உயரத்திலே சூரியன், அக்கினி பிளம்பாக இருக்கிறது. ஆனால், அதே அக்கினி பிளம்பிலிருந்து, ஒளிக்கதிர்கள் பூமிக்கும், அண்ட சராசரங்களுக்கும் செல்லுகிறது. ஒளிக்கதிர் வருவதற்காக சூரியன் திருமணம் செய்து, குமாரனாக ஒளிக்கற்றை வந்தது, என்று சொல்ல முடியாது. சூரியனிலிருந்து வந்த ஒளியைப்போலவே, நான் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறேன்," என்று குமாரனாகிய இயேசு சொன்னார்.

"ஆகவே, அவரை சூரியனிடத்திலிருந்து வந்த சூரியனின் மகன் என்று அழைக் கலாம். சூரியனிடத்திலிருந்து வெளிச்சம் மட்டுமல்ல, அக்கினியும் இறங்கி வருகிறது. வெப்ப சக்தியுள்ள அவரை, "ஆவியானவர்" என்று அழைக்கிறோம். அவர் பரிசுத்த ஆவியாலும், அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுக்கிறார். ஆகவே, சூரியன் மட்டுமே உண்டு. வெளிச்சமும், வெப்பமும் கிடையாது என்று வாதிட முடியாது. தேவன் திரித்துவமாய் விளங்குகிறார். வெறும் அல்லா, அல்லது யேகோவா மட்டுமல்ல, "குமாரனும், ஆவியானவரும்" இருக்கிறார்கள் என்றேன்.

தேவபிள்ளைகளே, தேவ குமாரன் அருளும் இரட்சிப்பினால், நீங்கள் பிதாவோடு இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள், ராஜாதி ராஜாவின் புத்திரராயிருக்கிறீர்கள். புத்திரரானால் சுதந்தரர். மட்டுமல்ல, சுயாதீனர். நீங்கள் கிறிஸ்துவின் குமாரன், பிள்ளையானால், நேராக கர்த்தரின் கிருபாசனத்தண்டை தைரியமாய் கிட்டிச் சேரும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.

நினைவிற்கு:- "நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்" (ரோம. 8:15).