சுமக்கிற ஆசாரியர்கள்!

" சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற, ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடி வருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும்" (யோசு 3:13).

ஒரு ஆச்சரியமான சம்பவத்தைப் பாருங்கள்! எப்பொழுது, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமந்துகொண்டு ஆசாரியர்கள் யோர்தானிலே கால் வைத்தார்களோ, அப்பொழுது, யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடி வராமல், ஒரே குவியலாக நின்றது. கர்த்தர் செய்த பெரிய அற்புதங்களில், இது ஒன்றாகும். இஸ்ரவேல் ஜனங்கள், கானானை சுதந்தரிக்க முடியாதபடி முதலாவதாக, பார்வோன் வந்தான். பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தாலே அந்த தடை நீங்கினது. இரண்டாவதாக, சிவந்த சமுத்திரம் எதிர்கொண்டு வந்தது.

மோசேயின் கோலாகிய வாக்குத்தத்தத்தின் கோல் மூலமாக, சிவந்த சமுத்திரம் வழி விட்டது. பின்பு பார்வோனையும், அவனுடைய சேனையையும் அமிழ்த்திப் போட்டது. மூன்றாவதாக, தடையாக யோர்தான் வந்தது. அந்த தடையை நீக்க, உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கிற ஆசாரியர்களின் கால் பட்டபோது யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது . இன்றைக்கு நானும், நீங்களும் உள்ளத்தில் கிறிஸ்துவை சுமக்கிறோம். அவர் கல்வாரியிலே செய்த, "இரத்த உடன்படிக்கையை" சுமக்கிறோம். நானும், நீங்க ளும் கர்த்தருடைய ஆசாரியர்களாயிருக்கிறோம் (வெளி. 1:6). ஆம், நாம் ராஜரீகமான ஆசாரியக் கூட்டம் (1 பேது. 2:9). தேவ ஆவியானவர் உங்களிலிருக்கிறபடியால், அவர் உங்களுக்கு தந்த அபிஷேகத்தாலே எவ்வளவு பெரிய யோர்தான் எதிர்த்து வந்தாலும், அது பின்னிட்டுத் திரும்பி உங்களுக்கு வழிகொடுக்கும்.

வெறும் ஆசாரியர்கள் கால் மிதித்தால், யோர்தான் பின்னிட்டுத் திரும்பாது. ஆனால், கர்த்தருடைய உடன்படிக்கையை சுமக்கிற ஆசாரியர்கள் மிதித்தால் மட்டுமே, அது வழி விடும். வெறும் கழுதைக்கும், குட்டிக்கும் மதிப்பில்லை. ஆனால் இயேசுவை சுமந்து வருகிற கழுதைக்கு, எவ்வளவு மதிப்பு! வஸ்திரங்களையும், மரக்கிளைகளையும் பரப்பி, குருத்தோலைகளை ஏந்தி, ஓசன்னா பாடி, வரவேற்பார்கள். கிறிஸ்து உங்களுக்குள்ளிருப்பாரென்றால், நீங்கள் கால் வைக்கிற இடங்களிலெல்லாம் அற்புதம் நடக்கும். எந்த வீட்டுக்குள் கால் வைத்துப் போனாலும், அங்கே இருக்கிற அசுத்த ஆவிகள் அலறி ஓடும்.

சண்டையும், பிரச்சனையும் மாறி, சமாதானம் உண்டாகும். காரணம், "சமாதானப் பிரபு" உங்களுக்குள்ளேயிருக்கிறார். உங்களோடும் வருகிறார். ஒருமுறை மோசே ஆடுகளை மேய்த்துக்கொண்டு, ஓரேப் பர்வதம் மட்டும் வந்தார் (யாத். 3:1). அங்கே முட்செடியிலே கர்த்தர் எழுந்தருளி, மோசேக்கு தரிசனமாகி, "நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி" என்று சொன்னார். முட்செடியிலே தேவனாகிய கர்த்தர் எழுந்தருளினபடியால், அந்த இடம் முழுவதும் பரிசுத்த பூமியாய் மாறினது.

தேவபிள்ளைகளே, உங்களுக்குள் பரிசுத்தமுள்ள கிறிஸ்துவும், ஆவியானவரும் வாசம் செய்கிறார்கள். தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள் வாசம்பண்ணி, உங்களை தேவாலயமாய் மாற்றியிருக்கிறபடியால், நீங்கள் நிற்கிற இடமெல்லாம் பரிசுத்தமாக வேண்டும். ஆம், நீங்கள் ஒரு பரிசுத்த பூமி.

நினைவிற்கு:- " சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார் அல்லவா? என்றான்" (1 சாமு. 10:1).