அக்கினியில் நடக்கும்போது!

"நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை, உன்பேரில் பற்றாது" (ஏசா. 43:2).

முதலாவது, தண்ணீர். இரண்டாவது, அதைவிட அதிகமான பாடுகளான ஆறுகள். மூன்றாவது, சுட்டெரிக்கிற அக்கினி. "உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து, ஏதோ புதுமையென்று திகையாமல், அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்‌" (1 பேது. 4:12,13).

ஏன், கர்த்தர் இந்த அக்கினி போன்ற சோதனைகளின் வழியாக கொண்டுச் செல்ல வேண்டும்? ஆம், நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, புடமிடப்பட்ட பொன் னாக விளங்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். அக்கினி வழியாக செல்லும் பொன், பிரகாசிக்க ஆரம்பிக்கிறது. அதிலுள்ள களிம்புகள், அழுக்குகள் எடுக்கப்பட்டு, சாம்பலாகிப் போய்விடுகிறது. தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை விலை யேறப்பெற்றவர்களாய் கண்டதினால், கறைதிரையற்றவர்களாய், மாசற்றவர்களாய், சுத்த பொன்னாக, தேவ சந்நிதானத்திற்கு முன்பாக நிறுத்தும்படி சித்தமானார்.

பொன்னை, எதுவரையிலும் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்கள் தெரியுமா? பொற்கொல்லனுடைய முகம், அந்த பொன்னிலே கண்ணாடிபோல பளீச்சென்று தெரிகிற வரையிலும், சுத்திகரித்து புடமிட்டுக்கொண்டேயிருப்பார்கள். அது போல ஆவிக்குரிய வாழ்க்கையிலே, கிறிஸ்துவினுடைய சாயல், அவருடைய ரூபம், சுபாவங்கள் உங்களில் காணப்படுகிற வரையிலும் கர்த்தர் உங்களை சுத்திகரிப்பார்.

"அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப் பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்" (1 பேது. 1:7). யோபு பக்தன், உணர்ந்து சொல்லுகிறார், "நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10).

அடுத்ததாக, அக்கினி ஜுவாலையைக் குறித்து, கர்த்தர் பேசுகிறார். உங்களை பரிசுத்த ஆவியினாலும், அக்கினியாலும் நிரப்புகிற கர்த்தர், உங்களை அக்கினி ஜுவாலையாக்குவார். "தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார்" (எபி. 1:7).

அந்த அனுபவத்தை, மோசே வனாந்தரத்திலே கண்டுகளிகூர்ந்தார். முட்செடியில் அக்கினி பற்றியெரிந்துகொண்டிருந்தபோதிலும், அது வெந்து போகாதிருந்தது. மோசே கிட்டப்போய், அந்த அற்புத காட்சியைப் பார்த்து மகிழ்ந்தார் (யாத். 3:3).

ஒருவிசை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள், நேபுகாத்நேச்சாரால் அக்கினி சூளையிலே போடப்பட்டபோது, உலகப்பிரகாரமான அந்த அக்கினி அவர்களை சேதப்படுத்த முடியவில்லை. பரலோக பரிசுத்த ஆவியின் அக்கினி இறங்கி வந்தது. அந்த அக்கினியிலே, நான்காவது ஆளாக, மனுஷகுமாரனாக இறங்கி வந்து, எபிரெய வாலிபர்களை தப்புவித்து, அவர்களோடே உலாவிக் கொண்டிருந்தார். அந்த தேவக் குமாரனாகிய இயேசு, எல்லா அக்கினி போன்ற சோதனையிலும், போராட்டத்திலுமிருந்து, உங்களை பாதுகாப்பார்.

நினைவிற்கு:- "எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல், துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்" (எபி. 12:11).