நுகத்தை முறிப்பேன்!

"இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுப்பேன்" (நாகூம் 1:13).

சாத்தான், தேவ ஜனங்கள்மேல், பல நுகத்தடிகளை வைக்கப் பிரியப்படுகிறான். பாவ பழக்க வழக்கத்தை காட்டி, அடிமைப்படுத்த முனைகிறான். ஆனால் கர்த்தரோ, தம் பிள்ளைகளுக்கு ஆதரவாயிருந்து, பிசாசினால் வருகிற சகல கட்டுகளையும், அடிமைத்தனங்களையும் முறித்து, விடுதலையாக்குகிறார். "குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்" (யோவான் 8:36).

நான் ஆப்பிரிக்காவிலுள்ள ‘பெனின்’ என்ற தேசத்திற்குப் போனபோது, அந்த மக்களை சிறைப்படுத்த, வியாபாரிகள் ஒருவரின் கழுத்தின்மேல் மரத்தினாலாகிய ஒரு நுகத்தை வைத்து, இரும்பு சங்கிலிகளால் முன் நடக்கிறவர்களையும், பின் நடக்கிறவர்களையும் இணைத்து, ஆயிரமாயிரமான பேரை அடிமைகளாக்கி அமெரிக்கா கொண்டுபோய் விற்பதற்காக நடத்திக்கொண்டு போகிற ஓவியத்தைப் பார்த்தேன். பசியும், பட்டினியுமாய் வாழ்ந்த அவர்களுக்கு, விடுதலை கிடைக்கவில்லை. ஆடு, மாடுகளை ஏற்றுவதைப்போல கப்பலில் ஏற்றி, பல மாதங்களுக்கு பிறகு, அவர்களை மார்க்கெட்டில் ஏலமிட்டு விற்பனை செய்தார்கள். அந்த அடிமைத்தன நுகத்தைப் பார்க்கும்போது, மிகவும் மனவேதனையாயிருந்தது.

சாத்தான் இப்படி, பலர்மேல் கடன் சுமையை ஏற்றி, அடிமைகளாக வைக்கிறான். வட்டி கட்ட முடியாதபடி, தடுமாறுகிறார்கள். வேறு சிலர் மேல் நோய், வியாதி, சாபம் என்னும் நுகத்தடியை வைக்கிறான். சிலர் அப்பார்ட்மென்ட் வாங்கப் போகிறேன் என்று, பேங்குகளில் வட்டிக்கு பணம் வாங்கி, அசலையும், வட்டியையும் கட்ட முடியாதபடி தடுமாறுகிறார்கள். இதனால், பிள்ளைகளுடைய படிப்பும், மன நிலைமையும் பாதிக்கப்படுகிறது.

யுத்தத்தின் நாட்களில், தோல்வியுற்ற இளவரசன், திரும்ப தன் தேசத்தை ஆள வேண்டுமென்றால், ஜெயம்பெற்ற ராஜா, அவன்மேல் பல நிபந்தனைகளையும், வரிச் சுமைகளையும், நுகத்தடி போல சுமத்துவான். மாதந்தோறும் தனக்கு பத்தாயிரம் பொற்காசுகளைத் தரவேண்டுமென்று நிர்ப்பந்திப்பான்.

இதனால் தோல்வியடைந்த ராஜா, மிகவும் கஷ்டப்பட்டு ஜனங்கள்மேல் அநியாய வரி விதித்து பேரரசுக்கு கட்டுவான். இதனால் ஜனங்களுக்கு நன்மை செய்ய முடியாது. நல்ல திட்டங்களைக் கொண்டு வரவும் முடியாது. அப்படி கப்பம் கட்டாவிட்டால், அந்த இளவரசனை கொன்றுவிட்டு, கப்பம் கட்டக்கூடிய வேறொருவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்துவிடுவான்.

இப்படித்தான் சாத்தானும், மனுஷன் சுமக்கிறதற்காகிய பாரங்களை சுமத்துகிறான். சிலருக்கு குடி போதைகளைத் தருகிறான். சிலருக்கு கஞ்சா பழக்கங்களைத் தருகிறான். சிலர்மேல் நுகத்தடியாய் வேசித்தன ஆவிகள் வந்து இறங்குகின்றன. தேவபிள்ளைகளே, இன்றைக்கு நுகத்தடியைப் பார்த்துக்கொண்டிராமல், விடுதலை யாக்குகிற கர்த்தரை நோக்குங்கள். எந்த நுகத்தடியையும் முறித்துப்போட அவரால் முடியும்.

"சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" (யோவா.8:32). இன்றைக்கு, உங்களுடைய விடுதலையின் நாளாக இருக்கட்டும். "கர்த்தருடைய ஆவி எங்கேயோ, அங்கே விடுதலையுமுண்டு" (2 கொரி. 3:17). உங்களுக்கு வாக்குத்தத்தம் கொடுத்தவர் உண்மையுள்ளவர்.

நினைவிற்கு:- "திரும்பவும் பயப்படுகிறதற்கு, நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்" (ரோம. 8:15).