நிமிரப் பண்ணுவேன்!

"உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின, உங்கள் தேவனாகிய கர்த்தர்" (லேவி. 26:13).

இஸ்ரவேலர் எகிப்தியருக்கு அடிமையாயிருந்தார்கள். எகிப்தியர் அவர்கள்மேல் தாங்க முடியாத சுமைகளைச் சுமத்தினார்கள். ஒவ்வொருநாளும் ஏராளமான செங்கல்களை அவர்கள் சுட வேண்டும். அதற்குப் போதுமான வைக்கோல் கொடுக்கவில்லை. எகிப்தின் ஆளோட்டிகள் அவர்களை கொடூரமாய் அடித்து, நிர்ப்பந்தித்து கடின வேலை வாங்கினார்கள். எந்த சுதந்திரமும், சுயாதீனமுமேயில்லாமல், அவர்கள் தலை குனிந்து நடந்தார்கள்.

கர்த்தர், அவர்களை விடுதலையாக்க விரும்பி, பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலே, அந்த அடிமைத்தன வாழ்விலிருந்து மீட்டுக்கொண்டார். அவர்கள் விடுதலையோடு வனாந்தரத்துக்கு வந்து, கர்த்தரைப் பாடினார்கள். துதித்தார்கள். ஆராதித்தார்கள். மகிழ்ந்து கொண்டாடினார்கள். நானூறு வருட அடிமைத்தன வாழ்வில் இல்லாத ஒரு சந்தோஷம், பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால், அவர்களுக்கு விடுதலை வாழ்வு கிடைத்தது.

இன்றைக்கு, அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப் பார்க்கிலும், உங்களை மீட்டுக்கொண்ட "கிறிஸ்துவின் இரத்தம்" மிக மேன்மையுள்ளது. அது சாபத்தின் அடிமைத்தனத்திலிருந்தும், சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்தும், உங்களை மீட்டெடுத்தபடியால், மகிழ்ச்சியோடு துதியுங்கள். ஆனந்த சத்தத்தோடே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்.

லூக்கா 13-ம் அதிகாரத்தை நீங்கள் வாசிக்கும்போது, ஒரு பெண் பதினெட்டு வருடங்களாய், பெலவீனப்படுத்துகிற ஆவியினால், கூனி குறுகி நடந்தாள். அவள் ஆபிரகாமின் குமாரத்திதான். ஆண்டவரை தொழுதுகொள்ள வந்தவள்தான். ஆனாலும், பெலவீனக் கட்டிலிருந்து விடுதலைப் பெற முடியாமல் தவித்தாள். நுகத்தடிகளை முறித்து, நிமிர்ந்து நடக்கப்பண்ணுகிற தேவனாகிய கர்த்தர் அவள்மேல் இரக்கங்கொண்டார். மனதுருகி, அவள்மேல் தன் கைகளை வைத்தபோது, அவள் உடனே நிமிர்ந்தாள். அற்புத சுகத்தைப் பெற்றுக் கொண்டாள்.

இன்றைக்கு உங்களுடைய வாழ்க்கையிலும், பிசாசானவன் உங்கள் சரீரத்தை முடக்கியிருக்கலாம். பக்கவாதத்தினால் (குணாணூணிடுஞு) கை, கால்கள் சரியாய் பயன் படுத்த முடியாமல், முடக்கப்பட்ட நிலைமையிலே நீங்கள் தவிக்கலாம். இதனால் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியவில்லை. இன்றைக்கு குமாரனாகிய இயேசு, உங்களுக்கு விடுதலைக் கொடுக்கும்படி, உங்கள் அருகில்தான் நிற்கிறார். எந்த பகுதியில் உங்களுக்கு விடுதலை வேண்டும் என்பதை குறிப்பிட்டு, கர்த்தரிடத்தில் சொல்லுங்கள். நீங்கள் விசுவாசிக்கக் கூடுமானால், நிச்சயமாகவே, கர்த்தர் உங்களுடைய விசுவாசத்தை கனப்படுத்தி, உங்களுக்கு அற்புதம் செய்வார்.

பன்னிரண்டு வருஷமாய், இரத்தப்போக்காகிய பெரும்பாடுள்ள ஸ்திரீக்கு, கர்த்தர் சுகமளிக்கவில்லையா? முப்பத்தெட்டு வருடமாய், பெதஸ்தா குளத்தண்டையில், பரிதாபமாய் படுத்திருந்தவனை, இயேசு தேடி வந்து, அற்புதம் செய்யவில்லையா? லேகியோன் பிசாசு பிடித்ததினால், கல்லறையண்டை நம்பிக்கையில்லாமலிருந்த மனிதனுக்கு, அற்புத சுகமளிக்கவில்லையா? உங்களுக்கும் விடுதலை தருவார். உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணுவார்.

நினைவிற்கு:- "அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால், அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால், அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்" (சங். 91:14).