ஆயிரம் மடங்கு!

"நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும், ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே, உங்களை ஆசீர்வதிப்பாராக" (உ பா. 1:11).

இன்றைக்கு நீங்கள் இருக்கிறதைப் பார்க்கிலும், ஆயிரம் மடங்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரென்றால், அது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! இரண்டு பேராய் சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலம், இன்றைக்கு எழுநூறு கோடியை தாண்டியிருக்கிறது. இது எத்தனை மடங்கு என்று எண்ணிப்பாருங்கள். "இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியமானது" (எண். 24:1).

கர்த்தர் தம் ஜனங்களைப் பார்க்கும்போது, மனதுருகி, அன்பினால் நிறைந்து, அவர்களை ஆசீர்வதிக்கிறார். அவர் உங்கள்மேல் வைத்த தயவு பெரியது. காருணியம் பெரியது. ஆகவே, கர்த்தரிடத்தில் ஆசீர்வாதத்தைக் கேளுங்கள். எலிசாவினுடைய விருப்பம் இரண்டு மடங்காயிருந்தது. ஆகவே, அவர் எலியாவைப் பார்த்து, "உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம், எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றார்" (2 இராஜா. 2:9). தன்னுடைய விருப்பத்தை சொன்னது மட்டுமல்ல, இடைவிடாமல் எலியாவைப் பின்தொடர்ந்து சென்று, அந்த இரட்டிப்பான ஆவியின் வரத்தைப் பெற்றுக் கொண்டார்.

பென்யமீனுக்கு, "ஐந்து மடங்கு" ஆசீர்வாதத்தை, யோசேப்பு கொடுத்ததை ஆதி. 43:34-ல் வாசிக்கிறோம். யோசேப்பு, தன் சகோதரர் எல்லாருக்கும் உணவு வகைகளை பங்கிட்டு அனுப்பினபோது, பென்யமீனுக்கோ ஐந்து மடங்கு அதிகமாய் கொடுத்தார். ஏன்? பென்யமீனும், யோசேப்பும் ஒரே தாயின் பிள்ளைகள். ஆகவே, பென்யமீனை எண்ணிய போது, யோசேப்பின் உள்ளம் உருகிவிட்டது.

தாவீது ராஜா சொல்லுகிறார், "கர்த்தர் என் சுதந்தரமும், என் பாத்திரத்தின் பங்கு மானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். நேர்த்தியான இடங்களில், எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு" (சங். 16:5,6).

தானியேலுக்கு, "பத்து மடங்கு" ஞானம் கிடைத்தது. வேதம் சொல்லுகிறது, "ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில், ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும், ஜோசியரிலும், அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்" (தானி. 1:20). காரணம் என்ன? தானியேல் தன் பரிசுத்தத்தைக் குறித்து பண்ணின தீர்மானமே யாகும். ராஜாவின் போஜனத்தினாலும், அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தானியேல் தன்னைத் தீட்டுப்படுத்தவில்லை (தானி. 1:8).

ஈசாக்குக்கு, "நூறு மடங்கு" ஆசீர்வாதம் கிடைத்தது. "ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறு மடங்கு பலன் அடைந்தான்" (ஆதி. 26:12). நூறு என்பது பூரணத்தின் எண். அது ஒரு மனுஷனுடைய பிரயாசத்தின் பூரணம். நல்ல நிலத்தில் விளைகிற விதை முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் தந்தது (மத். 13:8). தேவபிள்ளைகளே, இஸ்ரவேல் ஜனங்களைப்போல கர்த்தர் உங்களை ஆயிரம் மடங்கு ஆசீர்வதிக்க விரும்புகிறார். எப்போதும் ஆசீர்வாதத்துக்குப் பாத்திரராய், நீங்கள் காணப்பட வேண்டும். அதற்காக கர்த்தரைப் பிரியப்படுத்தி, அவரை சந்தோஷப்படுத்துங்கள்.

நினைவிற்கு:- "எங்கள் களஞ்சியங்கள், சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்க தாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்" (சங். 144:13).