வாய்க்காதே போகும்!

"உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்" (ஏசா. 54:17).

இன்றைக்கு வெளி ஒன்று பேசி, உள் ஒன்று வஞ்சகமாய் நினைக்கிற காலங் களுக்குள் வந்திருக்கிறோம். முன்னால் நமக்கு உதவி செய்பவர்களைப்போல காட்டிக் கொண்டு, பின்னால் குழி வெட்டும் சதி கும்பலை சந்தித்து வருகிறோம். சின்ன பிரச்சனைக்காக, பெரிய தீங்கு செய்ய நினைக்கும் சூனியக்காரர்களையும், செய்வினை செய்கிறவர்களையும் கவனித்து வருகிறோம்.

அவைகளின் மத்தியிலே, கர்த்தர் எழுந்து நின்று, "மகனே, உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்" என்று வாக்களிக்கிறார். ஏனென்றால், காரணம் என்ன? நீங்கள் யாக்கோபாய், இஸ்ரவேலாய் இருக்கிறீர்கள். கர்த்தருடைய பங்காய், அவருடைய சுதந்தரமாயிருக்கிறீர்கள். "யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை. இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை" (எண். 23:23). இதை சொன்னது யார் தெரியுமா? இஸ்ரவேலருக்கு தீங்கு செய்யும்படி, சாபமான வார்த்தைகளை கூறும்படி, கூலி பொருத்தப்பட்டு வந்த, பிலேயாம் என்பவன். கர்த்தர் குறுக்கிட்டு, உருவின பட்டயத்தோடு, அவனுக்கு எதிர்கொண்டு வந்தார். அவனைக் கொண்டு இஸ்ரவேலரை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி செய்தார். ஆம், அவருடைய பிள்ளைகளுக்காக, எவ்வளவு அற்புதங்களைச் செய்கிறார்.

நான் திருமணமாகி வந்த புதிதில், எங்களுடைய வீட்டுக்கு விரோதமாக, அநேகர் சூனியங்களை செய்ததினால், வீட்டுக்குள் அடிக்கடி எலுமிச்சம் பழங்கள் வந்து விழும். எங்கள் வீட்டில், ஒரு எலுமிச்சம் மரம்கூட இல்லை. கோழி வளர்க்காத எங்கள் வீட்டில், எங்கேயிருந்து கோழி முட்டைகள் வந்து விழுந்தன. தெரியாது. அருவருப்பான பொம்மைகள்மேல், மை தடவி ஏவல் செய்தார்கள். சில வேளைகளில், எங்களுடைய படுக்கை மட மடவென்று ஆடும். யாரோ இரவில் நடமாடுகிற சத்தம் கேட்கும். ஆனாலும், கர்த்தரை தஞ்சமாய்க் கொண்டிருக்கிற நான் அவைகளுக்கு பயந்ததில்லை. கர்த்தருடைய பிள்ளைகளை ஒருபோதும் தீமை அணுகாது.

கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? "உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்" (சங். 91:7,8).

ஒரு நாள் எங்களுடைய வீட்டிலே ஒரு உபவாசக் கூட்டம் நடத்தி, நல்ல தேவனுடைய ஊழியக்காரர்களைக் கொண்டு, சூனியக் கட்டை எதிர்த்து நின்று ஜெபித்தோம். சத்துருவின் வாய் அடைக்கப்பட்டது. யார் யார், எனக்கு விரோத மாய் சூனியம் செய்கிறார்கள் என்று நினைத்தேனோ, அவர்களையெல்லாம் நிமிரக்கூடாதபடி கர்த்தர் அடித்தார். ஒன்றுமே, எங்களுக்கு விரோதமாய் வாய்க்கவில்லை.

இன்றைக்கு, நீங்கள் எந்த பாதையிலே செல்லுகிறீர்கள்? எந்த விதமான போராட்டம் உங்களுக்கு இருக்கிறதோ, எனக்குத் தெரியாது. ஒன்றை மாத்திரம் அறிந்திருக்கிறேன். பலத்த பராக்கிரமசாலியாய், கர்த்தர் உங்களோடு நிற்கிறார். அவர் எல்லா தீமைக்கும் உங்களை விலக்கிக் காப்பார்.

நினைவிற்கு:- "எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக் கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது. வாதை உன் கூடாரத்தை அணுகாது" (சங். 91:9,10).