உங்கள் பொக்கிஷங்கள்!

"உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்" (மத். 6:21).

உலகத்தில் வாழ பணம் அவசியம். உலகப் பொருள்கள் அவசியம். பணம் சம்பாதிக்க, கஷ்டப்பட்டு உழைத்துதான் ஆகவேண்டும். அதில் சந்தேகமில்லை. ஏதேன் தோட்டத்திலும்கூட, கர்த்தர் ஆதாமுக்கு வேலையை வைத்திருந்தார். நிலத்தை பண்படுத்த வேண்டும். அதைக் காக்க வேண்டும். சோம்பேறிகளுக்கு ஆண்டவர் ஒன்றும் கொடுப்பதில்லை.

ஆனால், சிலர் "பணம் பணம்" என்று, பேயாக அலைகிறார்கள். "பணம் பாதாளம் வரைக்கும் பாயும். அதற்கு ஒரு எல்லையேயில்லை" என்கிறார்கள். சிலர் பணம் சம்பாதிக்க, என்ன என்ன குறுக்கு வழி உண்டோ, அவ்வளவற்றையும் கையாளுகிறார்கள். லஞ்சம் கொடுத்து, படிப்பிற்கு இடம் வாங்குகிறார்கள். பரிதானம் கொடுத்து, நியாயத்தைப் புரட்டுகிறார்கள். நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிட்டு, சட்டத்தைப் புரட்டிவிடுகிறார்கள். தேவனுக்கும், உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது, என்று இயேசு சொன்னார். உலகப் பொருளுக்கு, ஆங்கிலத்தில் ’ Mammon’ என்று போட்டிருக்கிறது. மூல பாஷையிலே, "செழுமைக்கான தெய்வம்" என்று அர்த்தம்.

இன்றைக்கு கிறிஸ்துவர்களும்கூட, கிறிஸ்துவைக் குறித்தோ, சிலுவையைக் குறித்தோ, நித்திய ஜீவனைக் குறித்தோ பேசுவதை விட்டு விட்டு, செழுமையின் ஊழியத்தில் இறங்கியிருக்கிறார்கள். அதே நேரம், கர்த்தருடைய வழிகளில் நீங்கள் செல்லுவீர்களென்றால், கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்களை ஆசீர்வதிப்பார்.

இயேசு சொன்னார், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்" (மத். 6:33). கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும்போது, அந்த செல்வம் ஆரோக்கியமுள்ளதாகவும், நன்மை பயக்குகிறதாகவும், ஆசீர்வாதமாக வுமிருக்கும். ஒருநாளும் அதிலே அவர் வேதனையைக் கூட்டார்.

ஆனால், தவறான குறுக்கு வழிகளில், பணம் சம்பாதிக்கிறவர்கள், நிம்மதியோடு இருப்பதில்லை. தீராத வியாதிகளும், கலக்கங்களும் அவர்களுக்கு வரும். இரவு பகலாய் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், அதை அனுபவிக்க சக்தியிருக்காது. சிலர் மற்றவர்களுக்குக் கொடுக்காத கஞ்சர்களாயிருப்பார்கள். பல தலைமுறைக்கு, பணத்தை சேர்த்து வைத்து பாதுகாத்துக்கொண்டிருப்பார்கள். "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பது பழமொழி. ஆகவே கர்த்தருக்குக் கொடுங்கள். ஊழியங்களுக்குக் கொடுங்கள். தேவையுள்ள இனத்தார், ஜனத்தாருக்குக் கொடுங்கள்.

வேதம் சொல்லுகிறது, "நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே" (நீதி. 3:27). பணத்தை சம்பாதிக்க சரீரத்திலே பலமும், ஆரோக்கியமும், உள்ளத்திலே உற்சாகமும் தருகிறவர் கர்த்தர். ஆகவே, நீங்கள் சம்பளம் வாங்கியதும் நன்றியுள்ள இருதயத்தோடு ஆண்டவருக்கு அள்ளிக்கொடுக்கும்போது, அவர் மனமகிழுவார். இன்னும் அதிகமான செல்வத்தை உங்களுக்கு தந்தருளுவார். "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமை யிலே நிறைவாக்குவார்" (பிலி. 4:19).

நினைவிற்கு:- "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி; அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்" (1 தீமோத். 6:10).