முடிந்து போகும்!

"உன் துக்கநாட்கள் முடிந்துபோம்" (ஏசா. 60:20).

இதுவரையிலும் உங்களுடைய துக்க நாட்களும், மன வேதனையின் நாட்களும், இருளின் நாட்களும், உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு உங்களுடைய வாழ்க்கைக்கு நேராய், கர்த்தர் தம்முடைய கரத்தை நீட்டுவதினால், இன்று முதல் உங்களுடைய துக்க நாட்களும், இருளின் நாட்களும் முடிந்துபோகும்.

அதோடு, கர்த்தருடைய வாக்குத்தத்தம் நின்றுபோகவில்லை. கர்த்தரே உங்களுக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். இனி ஒருபோதும் இருளும், அந்தகார லோகாதிபதியான பிசாசும், உங்களை அணுக முடியாது. சூரியனை கண்ட பனி, விலகித்தான் ஆகவேண்டும். சூரிய பிரகாசத்துக்கு முன்பாக, எந்த இருளும் நிற்க முடியாது. ஆம் தேவபிள்ளைகளே, உங்கள் கண்ணீரின் நாட்கள் நிலைத்து நிற்பதில்லை. நிச்சயமாகவே அது இன்று மாறிப்போகும்.

சாலொமோனைக் குறித்து, ஒரு பழங்கால கதை ஒன்று உண்டு. சிறுவனான சாலொமோன், தாவீதின் அரண்மனைக்கு முன்பாக விளையாடிக்கொண்டிருந்தான். ஒரு பொற்கொல்லன், சந்தோஷமாய் ராஜாவைப் பார்க்க போய், மிகுந்த துக்கத் தோடு திரும்பி வருகிறதை சாலொமோன் கண்டான்.

சாலொமோன் அதை விசாரித்தபோது, பொற்கொல்லன் சொன்னான்: "ராஜாவுக்கு ஏதாவது நகைகள் செய்ய வேண்டுமா? என்று கேட்கப் போனேன். ஆனால், அவரோ மிகுந்த டென்ஷனில் இருந்தார். கோபத்துடன் என்னைப் பார்த்து: "போ, போய் ஒரு மோதிரம் செய்துகொண்டு வா. நான் அந்த மோதிரத்தை துக்கத்தோடு பார்க்கும்போது, என் துக்கம் சந்தோஷமாய் மாற வேண்டும். அப்படி செய்யாவிட்டால் என்ன நடக்கும்? என்று, எனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டார், என்றான் பொற்கொல்லன்.

சாலொமோன் சொன்னான், கவலைப்படாதே; சாதாரண ஒரு மோதிரம் செய். அதிலே, "இது நிலைக்காது. கடந்துபோய்விடும்" என்று, பொறித்துக்கொண்டு ராஜாவிடம் கொடுத்துவிடும் என்றான்.

பொற்கொல்லன் அப்படியே செய்து, ராஜா துக்கத்தோடிருக்கும்போது கொடுத்தான். ராஜா அதைப் பார்த்தார். "இது நிலைக்காது. கடந்துபோய்விடும்" என்ற வார்த்தைகள் அவருடைய உள்ளத்தை தேற்றினது. மகிழ்ச்சியுடன் பொற் கொல்லருக்கு சிறந்த பரிசுகளைக் கொடுத்தான்.

அதுபோல தேவனுடைய பிள்ளைகளே, உங்களுடைய துக்க நாட்கள் நிலைத் திருக்காது. நிச்சயமாய் கர்த்தர் உங்களுடைய துக்கத்தை சந்தோஷமாய் மாறப் பண்ணுவார். உங்களுடைய கண்ணீரை ஆனந்தக்களிப்பாய் மாற்றுவார். "சாயங் காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும். கர்த்தருடைய கோபம் ஒரு நிமிஷம். அவருடைய தயவோ, நீடிய வாழ்வு" (சங். 30:5).

உலகத்தார் சொல்லுவார்கள், அடிக்கிற கைதான் அணைக்கும். அதுபோல கர்த்தருடைய கரத்திலிருந்து, தண்டனையாக, சில இருளின் வல்லமைகள் ஆட் கொண்டிருக்கலாம். உங்கள் குடும்பத்துக்குள்ளே, பாவ பிரச்சனையால் உண்டான இருள், உங்களை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கலாம். இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினாலே, அவருடைய வெளிச்சம் அன்போடு உங்கள்மேல் பிரகாசிக்கிறபடியால், நிச்சயமாகவே வெளிச்சம் உண்டாகும். சந்தோஷமும், சமாதானமுமுண்டாகும்.

நினைவிற்கு:- "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" (யோவா. 1:9).