நிச்சயமாய் வரும்!

"வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து, எனக்கு ஒத்தாசை வரும்" (சங். 121:2).

121-ம் சங்கீதத்தில் வரும், ஒவ்வொரு வசனங்களும் கர்த்தருடைய போஷிப்பை, பாதுகாப்பை, அற்புதங்களைப் பற்றி, நமக்குச் சொல்லுகிறது. முதல் வசனத்தில், அது ஒரு ஜெபமாக இருக்கிறது. "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்." கர்த்தரை நோக்கிப் பார்ப்பதும், விசுவாசத்தோடு கண்களை ஏறெடுப்பதும், நல்ல ஜெபமாகும். இங்கே கர்த்தருக்கு, தாவீது ஒரு பெயர் வைக்கிறார். "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம்."

இரண்டாவது வசனம் விசுவாச அறிக்கையாயிருக்கிறது. எப்போதுமே நீங்கள் ஜெபித்த பிறகு, அந்த ஜெபத்தை உறுதி செய்யும் விதத்தில், விசுவாசத்தோடு திரும்பத் திரும்ப அறிக்கை செய்ய வேண்டும். "நிச்சயமாய் எனக்கு ஒத்தாசை வரும். கர்த்தர் தம்முடைய ஒத்தாசையை அனுப்புவார். நான் கலங்க வேண்டிய தேவையில்லை. நான் நம்பிக்கையோடே எதிர்பார்த்துக்கொண்டேயிருப்பேன்."

சில ஆங்கில மொழிபெயர்ப்புகள், "எனக்கு ஒத்தாசையாக மனிதரையோ, பர்வதம் போன்ற பெரிய ஆட்களையோ, இனத்தவர்களையோ, நான் நோக்கிப் பார்க்கமாட்டேன். கர்த்தரே எனக்கு ஒத்தாசை செய்வார் என்று, என் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது," என்பதைப் போல இருக்கிறது. அதைத் தொடர்ந்து தாவீது எழுதுகிறார். "இதோ, வேலைக்காரரின் கண்கள், தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள், தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள், அவரை நோக்கியிருக்கிறது" (சங். 123:2).

பல வேளைகளிலே உங்களுக்கு உதவி செய்யக்கூடிய மனுஷரை கர்த்தர் எழுப்பக்கூடும். தயாளக்குணமுள்ள செல்வந்தர்களை எழுப்பக்கூடும். ஆனால், நீங்கள் அவர்கள்மேல் உங்கள் நம்பிக்கையை வைக்காமல், கர்த்தரே அவர்களை எழுப்பியிருக்கிறார் என்ற நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும், கர்த்தரை நோக்கிப் பாருங்கள். எலியாவுக்கு உணவளிக்க, கர்த்தர் காகத்தை ஏற்படுத்தினார். கேரீத் ஆற்றின் தண்ணீரைக் கொடுத்தார்.

ஆனால் எலியாவின் கண்கள், காகத்தின் மேல் பதிந்துவிடவில்லை. ஒருநாள் கேரீத் ஆறு வற்றிப்போனது. காகம் வருவதே நின்று விட்டது. கர்த்தரையே தனக்கு ஒத்தாசை வரும் பர்வதமாக அவர் எண்ணியிருந்தபடியால், கர்த்தர் எலியாவை பராமரிக்க, ஒரு விதவையை ஏற்படுத்தினார். அந்த விதவையாலே உதவி செய்ய முடியாத நிலைமை வந்தபோது, கர்த்தர் தன்னுடைய தூதனை அனுப்பி, சோர்ந்து போய் படுத்திருந்த எலியாவுக்கு, அப்பமும், தண்ணீரும் கொடுத்து போஷித்தார்.

உங்களுடைய கண்கள் கர்த்தரையே நோக்கி பார்க்கும்போது, காகங்களையும், விதவைகளையும், தேவதூதர்களையும் உங்களுக்கு ஒத்தாசையாக அனுப்புவார். பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணம் உங்களுக்கு வரும். எந்த பார்வோனிடத் திலிருந்து இஸ்ரவேலருக்கு விரோதமாக சட்டம் இயற்றப்பட்டதோ, அந்தப் பார்வோனின் குமாரத்தியை கொண்டு, கர்த்தர் மோசேயைப் போஷித்தார். அவள் மோசேயை வளர்ந்து வாலிபனாக்கினாள். மோசே, எகிப்திலுள்ள சகல கலைகளி லும் தேர்ந்து, பயிற்றுவிக்கப்பட்டார்.

நினைவிற்கு:- "காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்" (யோபு 38:41).