கடனின்றி வாழுங்கள்!

"ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன்வாங்கினவன், கடன்கொடுத்தவனுக்கு அடிமை" (நீதி. 22:7).

நீங்கள் ஒருநாளும், கடனுக்கு அடிமைப்படவே கூடாது. அநேக ஜனங்கள் தங்களை அறியாமலேயே, கடனுக்குள் போய் விடுகிறார்கள். "தவணை முறையில் வாங்கு கிறேன். இன்ஸ்டால்மென்டில் கிடைக்கிறது," என்று அதில் சிக்கிவிடுகிறார்கள். சிலர், "வீடு கட்ட பேங்கில் கடன் வாங்குகிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் நீண்ட வருடங்கள் கொடுத்துவிட்டால், வீடு சொந்தமாகிவிடும். வாடகை கொடுக்க வேண்டியதில்லை" என்று சொல்லுகிறார்கள். இன்றைக்கு, கடன் கொடுக்க, "கிரெடிட் கார்டு" வந்துவிட்டது.

ஆடம்பர வாழ்க்கை வாழுவதற்கு, அநேகர் கடன் வாங்கிவிடுகிறார்கள். என் அந்தஸ்தை காத்துக்கொள்வதற்கு கடன் வாங்கித்தான் ஆகவேண்டியிருக்கிறது, என்று சமாதானம் சொல்லுகிறார்கள். ஆனால் கடன் வாங்கும்போது, "எவ்வளவு வட்டியைக் கட்டுகிறோம். அதற்காக எவ்வளவு உழைக்க வேண்டியதிருக்கிறது. அடிமைப்பட்டு போகிறோமே" என்று யாரும் எண்ணுவதேயில்லை. ஏன் மனிதன் கடனுக்குள் போகிறான்? "பணத்தை எப்படி செலவழிக்க வேண்டுமென்று, அவன் திட்டமிட்டு தீர்மானிக்கவே முடிவதில்லை. எது அவசியம்? எது அனாவசியம்? எது ஆடம்பரம்? என்று அவனால் வேரறுக்க முடியவில்லை."

ஆபிரகாமுக்கு கர்த்தர் ஈசாக்கை வாக்குப்பண்ணியிருந்தாலும், ஆபிரகாம் பொறுமையில்லாமல் ஆகாரை சேர்த்துக்கொண்டு, இஸ்மவேலை பெற்றெடுத்தார். நாம் ஏன் கடன் வாங்குகிறோம்? கர்த்தருடைய வாக்குத்தத்தத்தில் விசுவாசம் இல்லாததினால், "இஸ்மவேல்" என்ற துன்பத்தைப் பெற்றெடுகிறோம். கலாத்தியர் 4-ம் அதிகாரத்திலே, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஈசாக்கை, இஸ்மவேல் துன்பப்படுத்தினான். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களுக்குக் காத்திருந்தால், ஈசாக்காகிய நகைப்பு வரும். அதோடு சந்தோஷம் வரும்.

கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? "கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய். நீயோ, கடன் வாங்காதிருப்பாய்" (உபா. 28:12). ஆகவே தேவபிள்ளைகளே, கர்த்தரை விசுவாசியுங்கள். கர்த்தர் கடன் வாங்காதிருக்கிற, நல்ல செழிப்பை உங்களுக்குத் தந்தருளுவார்.

"கடன் வாங்கித்தான் தீருவேன்," என்று மார்வாடிகளையும், கடன் கொடுக்கிற வர்களையும், பேங்குகளையும் நோக்கியிருந்தால், கர்த்தர் உங்களை கைவிட்டு விடுவார். உங்கள் கடன் சுமை, ஏறுமே தவிர குறையாது. எல்லா சூழ்நிலைகளிலும், கர்த்தருக்கு சேர வேண்டிய தசம பாகத்தை கொடுத்துவிட்டு, கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறப்பதை, ஆவலோடு எதிர்பாருங்கள். கர்த்தர் ஒருபோதும் பொய்யுரைக்கவேமாட்டார். வாக்குமாறாதவர், அற்புதவிதமாய் உங்களுடைய தேவைகள் அனைத்தையும் சந்திப்பார்.

ஆபிரகாமோ, ஈசாக்கோ, யாக்கோபோ ஒருநாளும் கடன் வாங்கினது இல்லை. அவர்களுடைய ஐசுவரியத்தை பூமி தாங்கக் கூடாததாயிருந்தது. அப்படி அவர்களை மேன்மையாய் நடத்தின ஆண்டவர், உங்களை நடத்தமாட்டாரா? ஆகாயத்துப் பறவைகள் கடன் வாங்குகின்றனவா? இல்லையே! கர்த்தர் அவைகளை அருமையாய் போஷிக்கிறாரே. காட்டுப் புஷ்பங்களை மேன்மையாய் உடுத்துவிக்கிறாரே. அப்படியே உங்களையும் உடுத்துவிப்பார். கர்த்தரை கனம் பண்ணி, அவரையே சார்ந்துகொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றி லும், ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்" (ரோம. 13:8).