பூத்து, காய் காய்த்தது!

"யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து, உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்" (ஏசா. 27:6).

ஈசாக்கின் இளைய குமாரனுக்கு தகப்பன் வைத்த பெயர், "யாக்கோபு" என்பதாகும். அதே நேரம், கர்த்தர் "இஸ்ரவேல்" என்ற பெயரை சூட்டினார். இஸ்ரவேல் என்பதற்கு, "தேவ பிரபு" என்றும், "போராடி மேற்கொள்ளுகிறவன்" என்றும் அர்த்தமாகும்.

ஈசாக்கின் மூத்த குமாரனாகிய ஏசா, கர்த்தரைத் தேடவேயில்லை. ஒருமுறைகூட ஜெபித்ததாக, வேதத்திலே வாசிக்க முடியாது. கர்த்தரால் கிருபையாய் கொடுத்த சேஷ்டபுத்திர பாகத்தையும்கூட, அவர் அசட்டை பண்ணிவிட்டார். ஆகவே கர்த் தரோ, யாக்கோபை நேசித்து, ஆசீர்வதிக்கும்படி சித்தமானார். "யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்" (ஏசா. 43:1) என்றார் அன்போடு.

யாக்கோபு தன் வாழ்நாளெல்லாம், அலைந்துத் திரிகிறவராகவேயிருந்தார். தகப்பனுடைய வீட்டை விட்டுவிட்டு, எதிர்காலம் என்ன? என்று அறியாமல், தன் இனத்தவரான, லாபானின் இரண்டு குமாரத்திகளுக்காக பதினான்கு வருடங்களும், மந்தை மேய்ப்பதற்கு ஆறு வருடங்களுமாக, அடிமை வேலை செய்தார்.

ஆனால், அலைந்து திரிந்த நாட்கள் முடிவடைந்தன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, கானான் தேசத்திற்கு, தகப்பன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இப்பொழுது, இங்கே வேர் பற்றி, உறுதியாக வாழ ஆரம்பித்தார். அலைந்து திரிந்த நாட்கள் முடிந்தது. குருவி தன் கூட்டை விட்டு அலைந்து செல்லுகிறது போல, வனாந்தர வாழ்க்கை முடிவடைந்தது. இப்போது, கானானிலே முற்பிதாக்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலே வேரூன்றினார்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றால், அலைந்துத் திரிகிற வருஷங்கள் முடிவடைய வேண்டும். நிரந்தரமான வேலை, நிரந்தரமான சபை, நிரந்தரமான குடும்பம் என்று வரும்போதுதான், வேர்கொள்ள முடியும். மரமானது, ஆழமாக வேர் விட்டு செல்லும்போது, தேவையான தண்ணீர், உரத்தை உறிஞ்சி, கிளை களுக்கும், இலைகளுக்கும், மலர்களுக்கும் அனுப்ப முடியும். தேவனோடு உறவாட பரிசுத்த ஆவியானவரோடு, ஆழமான ஐக்கியங்கொள்வதுதான், வேர் பற்றும் ஜீவியமாகும். மண்ணுக்குக் கீழாக இருக்கும் வேர், மனித கண்களுக்குத் தெரியாது. அதுபோலத்தான் ஜெபத்திலே, தேவனோடு உறவாடும் அந்தரங்க வாழ்க்கை, நீங்கள் கிறிஸ்துவில் உறுதிப்பட உதவியாயிருக்கும்.

இரண்டாவதாக, இஸ்ரவேல் பூத்து, காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும். மரமானது, பலுகிப் பெருக வேண்டுமென்றால், அங்கே பூக்கள் தோன்ற வேண்டும். பின்பு, பூக்களிலிருந்து காய்கள் உருவாக வேண்டும். காய்கள் பழுத்து, குலுங்கி ஆவிக்குரிய கனிகளைத் தரவேண்டும் (கலா. 5:22,23). அப்பொழுது, நீங்கள் மற்றவர்களுக்கும், கர்த்தருக்கும் ஆசீர்வாதமாயிருப்பீர்கள்.

ஆரோனின் கோலை தேவ சமுகத்தில் வைத்திருந்தபோது, ஒரே இரவில் துளிர் விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது. தேவபிள்ளைகளே, நீங்கள் மற்றவர்களுக்குப் பயனுள்ளவர்களாக பூக்களைப்போல வாசனை வீசுகிறவர்களாக, கனிகளைப்போல மற்றவர்களுக்கு மதுரமானவைகளைக் கொடுக்கிறவர்களாக விளங்க வேண்டும். அதுவே தெய்வீக ஆசீர்வாதம்.

நினைவிற்கு:- "அத்திமரம் காய் காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா" (உன். 2:13).