கனி, தரும் செடி!

"யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்" (ஆதி. 49:22).

யாக்கோபின் பன்னிரண்டு பிள்ளைகளிலே, யோசேப்பு விசேஷமானவர். ஆனாலும், அவர் கண்ணீரின் பாதையிலே நடந்ததை, வேதம் நமக்கு விளக்குகிறது. யோசேப்பின் தாயாகிய ராகேல், நீண்ட வருடங்கள் குழந்தையில்லாமலிருந்து யோசேப்பைப் பெற்றபோது, "நீ பெருகுவாய்" என்று அர்த்தங்கொள்ளும் "யோசேப்பு" என்ற பெயரைச் சூட்டினாள். வாலிப வயதிலிருந்தே, அவருக்கு சோதனைமேல் சோதனை. போராட்டங்கள் மேல் போராட்டம். ஆனால், முப்பது வயதிலே, பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தில், எகிப்தின் பிரதம மந்திரியாய் விளங்கி, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருந்தார். அவர் ஒரு கனிதரும் செடி.

எங்கள் ஊருக்கு வெளியேயுள்ள பெரிய ஆலமரத்தில் பழம் பழுக்கிற காலத்தில், எத்தனையோ ஆயிரமான குருவிகள், மைனாக்கள், கிளிகள் அங்கே வந்து அமர்ந்திருக்கும். அந்த மரத்தைச் சூழ, இனிமையான பறவைகளின் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும். கனியற்ற மரத்தை யாரும் நாடுவதில்லை. அது வெட்டப்பட்டு, அடுப்பு எரிக்க விறகுக்குத்தான் பயன்படும். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை கனிதரும் மரமாக்கி, அநேகம்பேருக்கு ஆசீர்வாதமாக வைக்க விரும்புகிறார். உங்களைத் தேடி, தேடி ஆயிரமாயிரமான ஆத்துமாக்கள் ஓடி வந்து, தாகம் தீர்க்கப்பட வேண்டும்.

இயேசு கிறிஸ்து, ஒரு கனிதரும் செடியாக இருந்தார் அல்லவா? "நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே, நன்மை செய்கிறவராயும்; பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார்" (அப். 10:38).

எந்த மனுஷனையும், கனி தரும் செடியாக மாற்றுகிறவர், நம்முடைய ஆண்டவர். "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே, அந்த மெய்யான ஒளி" (யோவா. 1:9). எந்த மனுஷனையும் புறம்பே தள்ளாதவர். எந்த மனுஷனையும், கிறிஸ்துவுக்குள் தேறினவனாய் நிலைநிறுத்த வல்லமையுள்ளவர். அவரே, உங்களை கனிதரும் செடியாக மாற்றுகிறவர்.

ஒரு காலத்தில், நான் மற்றவர்களுக்குப் பிரயோஜனமற்றவனாக, பண பற்றாக்குறையிலும், வறுமையிலும் வாழ்ந்தேன். அப்பொழுது, எங்கள் வீட்டில் வைத்திருந்த உபவாசக் கூட்டத்திற்கு வந்த ஊழியர், என்னை ஆசீர்வதித்து, "இன்று முதல், கர்த்தர் உங்களுக்கு பசுமையான நாட்களைத் தருகிறார்" என்று சொன்னார். அந்த வார்த்தையை, அப்படியே விசுவாசித்தேன். அன்று முதல், மகிமையான ஊழியத்தை எனக்குத் தந்து, கனிதரும் செடியாக்கினார்.

யோசேப்பு கனிதரும் செடியாயிருந்ததினால், முழு எகிப்தியரும் பஞ்ச காலத்தில் யோசேப்பை நோக்கி ஓடி வந்தார்கள். அவ்வளவு பேருக்கும் தானியங்களை வாரி வழங்கினார். மட்டுமல்ல, கானான் தேசத்திலிருந்த யோசேப்பின் சகோதரர்களும், தகப்பனும்கூட தானியம் வாங்க எகிப்துக்கு வந்தார்கள். யோசேப்பினால் ஆசீர் வதிக்கப்பட்டார்கள். ஆம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கும்போது, உங்களைப் பகைக்கிறவர்கள் உங்களை தேடி வரும்படிச் செய்வார். உங்கள் சத்துருக்களின் மத்தியிலே, உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, உங்கள் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுவார். உங்களுடைய பாத்திரம் நிரம்பி வழியும்.

நினைவிற்கு:- "ஒருவன் என்னிலும், நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" (யோவான் 15:5).