ஜெப வீரராய் விளங்குவீர்கள்!

"கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர். காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்" (சங். 5:3).

நீங்கள் ஜெப வீரராய், ஜெபத்தில் உறுதியாய் தரித்திருந்து எழும்பிப் பிரகாசிக்க வேண்டும். கர்த்தருடைய நாமத்தினாலே, அரிய பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும். ஆத்துமாக்களை ஆதாயம் செய்து, பரலோகத்தண்டை வழி நடத்த வேண்டும். ஆம் தேவபிள்ளைகளே, ஜெபம் ஒன்றுதான் உங்களுடைய பரிசுத்தத்தைப் பாதுகாக்கும். தீய சக்திகளை அடக்கி நிறுத்தும்.

ஜெபத்தினால் நம்முடைய முற்பிதாக்கள், அரிய பெரிய காரியங்களைச் செய்தார் கள். ஆனால், இப்பொழுது இந்த தலைமுறையில் இரட்சிக்கப்பட்ட உங்களை, கர்த்தர் தெரிந்தெடுத்திருக்கிறார். இந்த தேசத்தை எழுப்புதலினால் நீங்கள் சந்திக்க, சிறந்த ஜெப வீரர்களாக திகழ வேண்டும். இன்றைக்குள்ள நிலைமை என்ன? ஜெபக்குறைவினால், தேசத்தில் தேவன் கிரியை செய்வது மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய நாமம் தரிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும்கூட, ஜெபக் குறைவினால், ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். பிரிவினைகளும், போராட்டங்களும் தலைதூக்குகின்றன. ஆகவே, நீங்கள் வல்லமையாய் எழும்பிப் பிரகாசிக்க, உங்களில் ஜெப ஆவியை அனல்மூட்டி எழுப்பிவிடுங்கள்.

ஜெபத்திற்கு, அதாவது தேவனை சந்திப்பதற்கு, எப்பொழுதும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். அதுதான், நீங்கள் ஜெப வீரர்களாய் திகழுவதற்கு, நீங்கள் எடுக்கும் முதல்படியாகும். அந்த ஜெப நேரத்தில், தேவ சமுகத்திலே போய் அமருவது உங்களுக்கு பழக்கமாகிவிட வேண்டும். ஒருநாளின் இருபத்து நான்கு மணி நேரத்திலே, கர்த்தரின் பாதத்தில் அமரக்கூடிய நல்ல நேரம், அதிகாலை வேளைதான். அப்பொழுது ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தருமான அருமை ஆண்டவர், உங்கள் ஜெபத்தை ஆவலோடு எதிர்பார்த்து, உங்களுக்காக காத்திருப்பார்.

அமெரிக்காவின் பிரசித்திப் பெற்ற ஜனாதிபதியான, ஆபிரகாம்லிங்கன் இளமையிலே இரட்சிக்கப்பட்டார். சிறந்த ஜெப வீரனாயிருந்து, தேசத்தை சிறப்பான வழியிலே நடத்தினார். அவருடைய வாழ்க்கையில், அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் கர்த்தரை சந்திப்பது வழக்கமாயிருந்தது. அவர் எந்த தளபதியையோ, மந்திரியையோ சந்திப்பதற்கு முன்பாக, முதலாவது ராஜாதி ராஜவும், கர்த்தாதி கர்த்தருமான தேவனை சந்தித்துவிடுவார். அதற்குப் பிறகுதான், அந்த நாட்களின் கடமைகளை செய்ய புறப்படுவார்.

அநேகருடைய சாக்குப்போக்கு என்ன? தூங்கிவிட்டேன். வீட்டு வேலை அதிகமாயிருக்கிறபடியால், ஜெபிக்க நேரமில்லை என்று சொல்லுகிறார்கள். ஆனாலும், அவர்களுக்கு பல் விளக்க நேரமுண்டு. உணவு அருந்த நேரமுண்டு. துணி மாற்றி, அலுவலகத்திற்குச் செல்ல நேரமுண்டு. தேவபிள்ளைகளே, உங்களுக்கு நேரமில்லாவிட்டாலும், நேரத்தை உருவாக்குங்கள். தூக்கத்தைக் குறைத்து, கர்த்தரை சந்திக்கிற, நேரத்தை அதிகப்படுத்துங்கள்.

நாள் முழுவதும், நீங்கள் ஜெப நிலைமையிலிருப்பது நல்லதுதான். ஆனால் கர்த்தரை சந்திக்க, குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அந்த நாளின் முடிவில் துயரத்தோடு, உங்களுடைய தோல்விகளை எண்ணி, வேதனைப்பட வேண்டியது வரும். ஆகவே, ஜெபிக்க நேரம் ஒதுக்கி, ஜெப நேரத்தில் மகிழுங்கள்.

நினைவிற்கு:- "விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்" (யாத். 34:2).