ஜெபிக்க ஓர் இடம்!

"நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்" (மத். 6:6).

சில வீடுகளுக்குச் செல்லும்போது, நம்மையறியாமல் ஜெபிப்பதற்கு நம் உள்ளம் பொங்கும். சில இடத்திற்குப் போனால், ஜெபிக்க மனம் வராது. வேறு சில இடங்களுக்குப் போனால், பிசாசின் கிரியைகளை உணருவீர்கள். வேறு சில இடங்களில், அருவருப்பான சிந்தைகளும், விபச்சார, வேசித்தன எண்ணங்களும் வரும்.

ஆகவே நீங்கள் ஜெபிப்பதற்கென்று, தேவ பிரசன்னமுள்ள அருமையான இடத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அன்னாளைப் பாருங்கள்! அவள் மனதின் வேதனைகளையெல்லாம் ஊற்றி, ஊக்கமாக ஜெபிக்கும்படி, ஒரு இடத்தைத் தெரிந்துகொண்டாள். அதுதான், தேவனுடைய ஆலயம். அங்குள்ள ஆல்ட்டரிலே, முழங்கால்படியிட்டு இருதயத்தை ஊற்றி அவள் ஜெபித்திருக்கக்கூடும்.

கர்த்தர் சொல்லுகிறார், "நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டு வந்து: என் ஜெப வீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்க தகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு, சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்" (ஏசா. 56:7).

ஆலயத்திலே, தேவ ஜனங்கள் கூடி வந்து கர்த்தரை ஆடிப்பாடித் துதிக்கிறார்கள். ஆராதனை செய்கிறார்கள். கர்த்தருடைய வார்த்தை அங்கே பிரசங்கிக்கப்படுகிறது. காலா காலமாய், தேவனுடைய பிள்ளைகள் அங்கே கூடி வந்து ஆராதிக்கிறபடியால், அந்த இடத்தில் தேவ பிரசன்னத்தை அதிகமாய் உணர முடியும். எந்தத் தடையுமின்றி, அங்கே ஜெபங்கள், கர்த்தரிடத்தில் ஏறெடுக்கப்படுகிறதை உணருவீர்கள்.

வேதம் சொல்லுகிறது, "யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்" (நியாயா. 11:11). எசேக்கியா ராஜா, சுவர் பக்கமாய் திரும்பி ஜெபித்தார் (ஏசா. 38:2). இயேசு கிறிஸ்துவினுடைய ஜெப இடம், கெத்செமனே தோட்டமாயிருந்தது. அங்கே அவர் தன் இருதயத்தை ஊற்றி, வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு, இரத்த வேர்வை சிந்தி, பிதாவை நோக்கி விண்ணப்பம்பண்ணினார் (லூக். 22:43, எபி. 5:7).

எந்த இடத்திலேயும், நீங்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளலாம் என்றாலும்கூட, உங்களுக்கென்று ஒரு ஜெப இடம் இருப்பது, மிகவும் நல்லது. முடிந்தால் உங்களுடைய வீட்டில் ஒரு ஜெப அறையை, "கெத்செமனேயாக" உருவாக்குங்கள். ஏதாவது ஒரு மூலையையாவது தெரிந்துகொண்டு, அங்கே அனுதினமும் கர்த்தரை சந்தியுங்கள். நீங்கள் வழக்கமாய், அதே இடத்திற்குத் திரும்பத் திரும்ப சென்று ஜெபிக்கும்போது, உங்களை அறியாமலேயே, கர்த்தர் உங்களுக்காக அங்கே காத்திருக்கிறதை அறிந்து கொள்ளுவீர்கள்.

நான் வருமான வரி இலாகாவிலே பணியாற்றியபோது, எங்கள் அலுவலகத்திற்கு எதிரே உள்ள மரத்தின் கீழாய், அமைதியாய் உட்கார்ந்திருந்து ஜெபிப்பதுண்டு. அங்கே போகும்போதே, என் உள்ளம் பொங்க ஆரம்பித்துவிடும். அப்படி தொடர்ந்து ஜெபித்து, ஜெபித்து அந்த மரத்தை நோக்கி செல்லும்போதே, கர்த்தர் எனக்காக காத்திருக்கிறதை, உணர முடிந்தது. தேவபிள்ளைகளே, நீங்கள் இருக்கிற இடத்திலே, கர்த்தர் உங்களைத் தேடி வருவார்.

நினைவிற்கு:- "நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது" (யோவா. 4:21).