சந்தோஷமாக மாறும்!

"மெய்யாகவே மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் அழுது புலம்புவீர்கள். உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்" (யோவா. 16:20).

இன்றைக்கு, ஏதோ ஒரு பிரச்சனை, ஒரு முள்போல உங்களை குத்திக்கொண்டே இருக்கக்கூடும். ஏதோ, ஒரு போராட்டம் உங்களை துக்கப்படுத்திக் கொண்டே இருக்கக்கூடும். எவ்வளவோ ஜெபித்துப்பார்த்து விட்டீர்கள். விசுவாசத்தோடு விடுதலையை எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கிறீர்கள். ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் இன்றைக்கு கர்த்தர் இந்த வாக்குத்தத்தத்தின் மூலமாய், உங்களோடு பேசுகிறார். நீங்கள் எதைக் குறித்து துக்கப்படுகிறீர்களோ, அது சந்தோஷமாய் மாறும். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை, அற்புதமாய் நீங்கள் பார்ப்பீர்கள்.

ஒருபக்கம், பிள்ளையை படிக்க வைத்து ஆளாக்கினீர்கள். வேலை கிடைக்கவில்லை. மகன் தவறான வழிகளிலே, நண்பர்களோடு ஊர் சுத்திக்கொண்டிருக்கிறான். பெண்ணுக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தீர்கள். கணவன் வீட்டில் வாழ முடியவில்லை. அவளை, அங்கே ஒடுக்குகிறார்கள். இன்னும் உங்களுடைய வீட்டில் சந்தோஷமில்லை. சமாதானமில்லை. இன்றைக்கு கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே குறுக்கிட்டு, தன்னுடைய கரத்தை நீட்ட விரும்புகிறார். அப்பொழுது இதுவரை உள்ள எல்லா பிரச்சனைகளும், "கப்சிப்" பென்று அடங்கி விடும்.

சீஷர்கள் ஒருமுறை கலிலேயா கடலிலே, படகில் பிரயாணம் செய்தார்கள். திடீரென்று கடல் கொந்தளித்தது. புயல் வீசினது. இவர்களால் படகை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. படகின் அடித்தட்டில் தூங்கிக்கொண்டிருந்த இயேசுவை எழுப்பினார்கள். அவர் எழுந்து வந்தார். "இரையாதே, அமைதலாயிரு" என்று புயலுக்கும், கொந்தளிக்கிற கடலுக்கும் கட்டளையிட்டார். ஒரே வார்த்தை. அதோடு எல்லா பிரச்சனையும் அமர்ந்துபோனது. "அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும்" (சங். 33:9).

சீஷர்களோடு படகிலே இயேசு இருந்தாலும்கூட, அவர்கள் அதை எண்ணாமற் போனார்கள். இயேசுவோடு பேசி மகிழவில்லை. அதனால்தான் படகு அலை மோதினது. இன்றைக்கு இயேசு உங்களுடைய உள்ளத்தின் ஆழத்திலிருக்கிறார். நீங்கள் அவரை எழுப்புங்கள். உபவாசத்தோடும், ஜெபத்தோடும் அவரைத் தேடுங்கள். அவர் எழுந்து, உங்களுக்காக வழக்காடி யுத்தம் செய்ய, இடங்கொடுங் கள். அவர் பேசுகிற ஒரு வார்த்தையிலே, எத்தனையோ ஆண்டுகள் தொடர்ந்து வந்த எல்லா பிரச்சனையும், அடங்கிப் போய்விடும்.

ஒரு சகோதரி தன் ஒரே மகளை சீரும், சிறப்புமாக திருமணம் செய்து கொடுத்தார்கள். கொஞ்ச நாட்கள் மட்டுமே, அந்த மகள் அந்த வீட்டில் வாழ்ந்தாள். மாமியார் பிரச்சனையினால், வாழ முடியாதபடி, பத்து வருடங்கள் பிரிந்திருந்தார்கள். அந்தத் தாலி கொடியும் அறுந்துபோய் விட்டது.

ஒருநாள் கர்த்தர் பேசினார். "உனது துக்கம் சந்தோஷமாய் மாறும்" என்று. அதை அப்படியே விசுவாசித்து, அறுந்த தாலி கொடியை இணைத்து ஆலயத்திற்கு கொண்டு வந்தாள். நாங்கள் அதை மீண்டும் ஆசீர்வதித்து, உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்று சொன்னோம். அந்த மாதமே, ஏறக்குறைய பத்து வருடங்களுக்குப் பின்பு, கணவன் வலிய தேடி வந்து, மனைவி குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்டு, மனைவியை அழைத்துச் சென்றார். இப்பொழுது ஆசீர்வாதமான ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது. கர்த்தர் அற்புதம் செய்கிறவர்.

நினைவிற்கு:- "ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" (யோபு 9:10).