இரட்டிப்பான நன்மை!

"இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்" (சகரி. 9:12).

தேவனுடைய பிள்ளைகளுக்கு, இரட்டிப்பான நன்மைகள், இரட்டிப்பான ஆசீர்வாதங்களுமுண்டு. உலகப்பிரகாரமாகவும் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். ஆவிக் குரியப் பிரகாரமாகவும் ஆசீர்வதிக்கிறார். இம்மைக்குரிய சகல நன்மைகளை அருளிச் செய்கிறார். அதே நேரம், மகிமைக்குரிய நித்திய ஜீவனையும் தந்தருளுகிறார்.

இரட்டிப்பான ஆசீர்வாதத்தை தாவீது சிந்தித்துவிட்டு, "என் ஜீவனுள்ள நாளெல்லாம், நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்" (சங். 23:6) என்கிறார். இம்மையிலும் ஆசீர்வாதம். மறுமையிலும் ஆசீர்வாதம்.

இரட்டிப்பான நன்மையைப் பாருங்கள்! இயற்கையாகவே ஒரு குழந்தைக்கு கர்த்தர் தாயை மட்டுமல்ல, தகப்பனையும் தந்தருளுகிறார். சகோதர, சகோதரி களையும் தந்தருளுகிறார். ஒரு கண்ணை மட்டும் சிருஷ்டித்துவிட்டு, நிறுத்தி விடாமல், இரண்டு கண்கள், இரண்டு கைகள், இரண்டு கால்கள் என்று எவ்வளவு ஆசீர்வாதங்களைத் தருகிறார்.

தேவபிள்ளைகளுக்கு பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் கொடுக்கிறார். அதுபோல, இரட்டிப்பான ஆசீர்வாதமாக இரட்சிப்பையும் தரு கிறார். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் தருகிறார். ஆவியானவர் ஆவியின் வரங் களையும் தருகிறார். ஆவியின் கனிகளையும் தருகிறார். உலகப்பிரகாரமான நண்பர் களையும் தருகிறார். ஆவிக்குரிய சிநேகிதர்களையும் தருகிறார். அறிவை உணர்த்தும் வசனத்தை தருகிறவர், கூடவே ஞானத்தைப் போதிக்கும் வசனத்தையும் தருகிறார்.

சாலொமோன் ராஜாவானபோது, "ஆண்டவரே, உம்முடைய திரளான ஜனங் களை நியாயம் விசாரிப்பதற்கு, எனக்கு ஞானம் வேண்டும்" என்று கேட்டார். கர்த்தருடைய பார்வையிலே அது மகிழ்ச்சிகரமாயிருந்தது. ஆண்டவர் உடனே அவனைப் பார்த்து, "நீ கேட்காத ஐசுவரியம், நீ கேட்காத கனம், மகிமை, கீர்த்தி, புகழ் எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்," என்று மனதுருகி வாக்குப்பண்ணினார். அப்படியே சாலொமோனுக்குக் கொடுத்தார்.

நீங்கள் கேட்கும்போது, இரக்கமுள்ள தேவன், தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே, உங்களுடைய குறைவுகளை நிறைவாக்காமலிருப்பாரோ? இரட்டிப்பாக உங்களுக்குத் தந்து, மகிழப்பண்ணாமலிருப்பாரோ? வேதத்திலே, காலேபினுடைய மகள் அக்சாள், தன்னுடைய தகப்பனை நோக்கி: "வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப் பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்" (நியாயா. 1:15).

கர்த்தரிடத்தில் கேளுங்கள். உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி, இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை நிச்சயமாய் நீங்கள் பெற்றுக்கொள்ளுவீர்கள். நீங்கள் விரும்புகிறதை கர்த்தர் உங்களுக்குத் தந்தருளுவார். விசுவாசியுங்கள்.

பாருங்கள்! யாக்கோபு சேஷ்ட புத்திர பாகத்தை விரும்பினார். கர்த்தர் அதை வாய்க்கப் பண்ணினார். தகப்பனுடைய ஆசீர்வாதத்தை விரும்பினபோது, அது அவருக்குக் கிடைத்தது. இந்த உலகப்பிரகாரமான ஆசீர்வாதத்தோடுகூட, கர்த்தரு டைய ஆசீர்வாதமும் வேண்டும் என்று விரும்பினபோது, கர்த்தர் யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றி ஆசீர்வதித்தார். உங்களுக்கும், இரண்டு வகையான ஆசீர்வாத முண்டு.

நினைவிற்கு:- "யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனை யாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்" (யோபு 42:10).