ஆறுகளைக் கடக்கும்போது!

"நீ ஆறுகளைக் கடக்கும்போது, அவைகள் உன்மேல் புரளுவதில்லை" (ஏசா. 43:2).

"நீ ஆறுகளைக் கடக்கமாட்டாய்," என்று வேதம் வாக்குப்பண்ணவில்லை. உங்களுக்கு உபத்திரவமே வராது என்று, வேதம் சொல்லவில்லை. ஆறுகளை கடக்க வேண்டியது வரும். பாடுகளின் வழியாய் செல்ல வேண்டியதும் வரும். நிந்தைகள், உபத்திரவங்கள் வழியாய், நீங்கள் கடந்துச் செல்ல வேண்டியது வரும். ஆனாலும், எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தர் உங்களோடிருந்து, உங்களுக்கு ஜெயத்தைத் தந்தருளுவார்.

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது, அவர்கள் சமுத்திரமாகிய தண்ணீரைக் கடக்க வேண்டியதிருந்தது. பின்னால் துரத்தி வரும் எகிப்தின் இராணுவம், ஆயிரம் படகுகள், கப்பல்களிருந்தாலும், இத்தனை திரளான ஜனங்களை அக்கரைக்குக் கொண்டுச் செல்ல முடியாது. என்ன செய்வது? நீங்கள் கடந்துச் செல்ல வேண்டிய கடன் பிரச்சனைகள், வேலையில்லாத திண்டாட்டங்கள். குடும்ப நெருக்கங்கள், உங்களை பயமுறுத்தலாம். என்ன செய்வது? இந்த போராட்டத்தின் பாதையிலே, எப்படி கடந்துச் செல்லுவது?

"தண்ணீர்கள்" என்பது, "நெருக்கத்தைக்" குறிக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலை யில், கர்த்தர் மோசேயோடுகூட இருந்து, "உன் கோலை சமுத்திரத்தை நோக்கி நீட்டு," என்று சொன்னார். கர்த்தர் மிக அருகிலிருந்ததினால், அவருடைய நாசியின் சுவாசத்தினால், சிவந்த சமுத்திரம் இரண்டாய் பிளந்தது.

"மோசேயின் கோல்" என்பது, கர்த்தருடைய வாக்குத்தத்தங்களுக்கு அடை யாளம். பிரச்சனை நேரங்களிலே, கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை விசுவாச வார்த்தையாக பேசுங்கள். பிரச்சனைகள் தானாய் விலகி, உங்களுக்கு வழிவிடும். கர்த்தர் உங்களோடிருக்கிறபடியால், பிரச்சனைகளில் கலங்காதிருங்கள்.

"ஆறுகள்" மிக வேகமாய் உயரத்திலிருந்து வரும்போது, எந்த மனிதனும் ஆறுகளுக்கு முன்பாக நிற்க முடியாது. அது மனுஷனை, புரட்டித் தள்ளி உருளச் செய்யும். காட்டு வெள்ளம் ஆறுகளாக வரும்போது, கிராமவாசிகளையும், ஆடு மாடுகளையும், அடித்துச் சென்றுவிடும். ஆனால் கர்த்தர், "நான் உன்னோடு இருப்பேன். ஆறுகள் உன்மேல் புரளுவதில்லை" என்கிறார்.

சிவந்த சமுத்திரத்தை கடந்த பின்பு, இஸ்ரவேலர் யோர்தான் ஆற்றை கடக்க வேண்டியதிருந்தது. அறுப்புக் காலம் முடியுமட்டும், யோர்தானில் வெள்ளம் கரை புரண்டுபோகும். ஆனால் உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள், யோர்தானில் பட்டவுடனே வேகமாய் ஓடிவந்த யோர்தான் நின்றது. பின்பு பின்னிட்டு திரும்பி, ஒரே குவியலாய் நின்று இஸ்ரவேலருக்கு வழிவிட்டது.

எந்த பெரிய யோர்தானைப் போன்ற பிரச்சனைகளிருந்தாலும், கர்த்தர் அதை பின்னிட்டுத் திரும்பப்பண்ணுவார். உங்களுக்காக வழக்காடி யுத்தம் செய்வார். யோர்தான் நதியைப் பொதுவாக, "மரண நதி" என்று அழைப்பார்கள். இந்தப் பக்கம் வனாந்தரம், அந்தப் பக்கம், பாலும் தேனும் ஓடுகிற கானான். பரமக் கானானை நீங்கள் சுதந்தரிக்கும் முன்பாக, மரண போராட்டமே வந்தாலும், அது உங்களை அணுகுவதில்லை. எலியா, சால்வையை முறுக்கி யோர்தானை அடித்தபோது, யோர்தான் இரண்டாய்ப்பிரிந்தது அவரைப்போல, நீங்கள் கெம்பீரமாக வெற்றி முழக்கத்தோடு மரண யோர்தானைக் கடந்து போவீர்கள்.

நினைவிற்கு:- "நீ பயப்படாமல் பேசு. மவுனமாயிராதே; நான் உன்னுடனேகூட இருக்கிறேன். உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை" (அப். 18:9,10).