மவுனத்தின் காலம்!

"மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு" (பிர. 3:7).

பிரசங்கி 3-ம் அதிகாரத்தில், ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு. வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும், ஒவ்வொரு காலமுண்டு என்று 38 வகை காலங்களைப் பற்றி பிரசங்கி பேசகிறார். அதில் ஒரு காலம், மவுனமாயிருக்க வேண்டிய ஒரு காலம்.

சில வேளைகளிலே, மவுனமாயிருக்க வேண்டிய இடத்தில் பேசி, பிரச்சனை களை உண்டாக்கி விடுகிறோம். "ஐயோ, ஏன்தான் இப்படி பேசினோமோ?" என்று வருந்துகிறோம். அதே நேரத்தில், பேச வேண்டிய காலத்தில் பேசாமல் அமைதியாய் இருந்தால், நமக்கு கிடைத்த அரிய பெரிய வாய்ப்பை தவற விட்டு விடுகிறோம்.

"மவுனம்" சில வேளைகளில், "துக்கத்துக்கு" அடையாளம். அன்பாய் வளர்த்த மகன், தாய்க்கு பிரியமில்லாத ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய, ஒத்தக்காலில் நிற்கும்போது, தாய் அமைதியாயிருந்து விடுகிறாள். "மகன், இப்படி செய்து விட்டானே" என்ற துக்கம், தொண்டையை அடைக்கிறது. சில தாய்மார்கள் துக்கம் தாங்காமல், வாழ்நாள் முழுவதுமே அமைதியாயிருக்கிறதைப் பார்த்திருக்கிறேன். சில குடும்பங்களில், கணவனுக்கு எதை சொல்ல வேண்டுமோ, அதைப் பிள்ளைகள் மூலமாய் மனைவி சொல்லி அனுப்புவாள். அவர்கள் அனுபவிக்கிற மனக் கஷ்டத்தை அது குறிக்கிறது.

ஆவிக்குரிய ரீதியிலே சிலர் மவுனமாயிருந்து, "கர்த்தர் என்ன பேசுகிறார்" என்பதை, ஜெபத்துடன் கவனித்துக்கொண்டிருப்பார்கள். கர்த்தர், உள்ளத்தின் ஆழத்திலே, மெல்லிய குரலிலே பேசுகிற வரையிலும், கர்த்தருக்குள் பொறுமையுடன் காத்திருந்து, மவுனமாயிருப்பார்கள்.

ஒருமுறை, நாங்கள் இஸ்ரவேல் தேசத்திற்கு பயணம் சென்றிருந்தோம். கர்மேல் பர்வதத்தில் தெற்கில் வந்தபோது, ஒருவர் தெருவிலே வேகமாய் போய்க்கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், "இந்தியனாயிருக்கும். ஒருவேளை தமிழனாயிருந்தால் சந்தோஷமாய் பேசலாம்" என்று, ஓடிச் சென்றோம்.

நாங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, அவர் பதில் சொல்லவில்லை. முடிவிலே மெதுவான குரலில், "நான் மவுனச் சாமியார். திருச்சியைச் சேர்ந்தவன். இங்கே கத்தோலிக்க மடத்தில் துறவியாயிருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, வேகமாய் கடந்து போனார். ஆனால் வேதம் சொல்லுகிறது: பேசும்படியாக ஒரு காலத்தை கர்த்தர் வைத்திருக்கிறார். அது, கர்த்தருக்காக சாட்சி சொல்லுகிற ஒரு தருணம். கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கிக்கிற தருணம். நற்செய்தி அறிவிக்க வேண்டிய தருணம்.

சமாரியாவுக்கு வெளியேயிருந்த நான்கு குஷ்டரோகிகளும், எதிரிகள் ஓடிவிட்டார் கள். பொருட்களையும் படைகலன்களையும் விட்டுவிட்டு, தங்கள் தேசத்துக்குத் திரும்பி விட்டார்கள் என்று அறிந்து, அவர்கள் தாங்கள் சுயநலமாய் உண்டு திருப்தியடைவதோடு நின்றுவிடாமல், "இந்நாள் நற்செய்தி அறிவிக்கும்நாள்.

நாம் மவுனமாயிருந்து பொழுது விடியுமட்டும் காத்திருந்தால், குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்" (2 இராஜா. 7:9). ஆ, இது கிருபையின் காலத்தின் கடைசி நேரம். நீங்கள் சுவிசேஷத்தை அறிவிக்காவிட்டால் வேறு யார் அறிவிப்பார்கள்.

நினைவிற்கு:- "தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்" (நீதி. 25:25).