ஆவியின் கனியோ!

"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்" (கலா. 5:22,23).

ஒரு முறை ரெயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, என்னையறியாமல் என் உள்ளத்தில், "ஆவியின் கனிகள் அத்தனையையும் பெற வேண்டும், கனியுள்ள ஜீவியம் செய்ய வேண்டும், ஆத்தும நேசருக்கு ஆவியின் கனிகளை அள்ளிக்கொடுக்க வேண்டும்" என்ற வாஞ்சை எழுந்தது. அதே நேரத்தில், எனக்குள்ளே ஒரு சந்தேகம். ஒருவன் ஒரே நேரத்திலே ஒன்பது கனிகளையும் காண்பிக்க முடியுமா? அன்பிலே பூரணப்படும்போது, இச்சையடக்கம் இல்லாமல் போய்விடக்கூடும். சந்தோஷத்திலே பூரணப்படும்போது, சாந்தம் குறைவுபடக் கூடும். எல்லா ஆவியின் கனிகளிலும், ஒருவன் நிறைவடைய முடியுமா?

அதே ரெயில் கம்பார்ட்மென்டில் இருந்த ஒரு வயது முதிர்ந்த தேவ மனிதன் என்னிடம் சொன்னார், "நீங்கள் ஒவ்வொரு ஆவியின் கனியிலும் பூரணப்பட வேண்டுமென்று முயற்சித்துக் கொண்டிருப்பது வீணான காரியம். எல்லா ஆவியின் கனிகளும் நிறைந்த கிறிஸ்து உங்களுக்குள் வாசம்பண்ணுகிறார். ஆவியின் கனி களைப் பூரணமாய் கொடுக்கிற, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசம்பண்ணு கிறார். அவரே உங்களில் அனைத்து கனிகளையும் காணச் செய்கிறவர் என்றார்.

பழைய ஏற்பாட்டில், இப்பொழுதுபோல் ஆவியின் அபிஷேகம் பொழிந்தருளப் படவில்லை. அவர்கள் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட நற்குல திராட்சச்செடி. பாலும், தேனும் ஓடுகிற கானானிலே நடப்பட்டவர்களாயிருந்தார்கள். "கர்த்தர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச் செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக் கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார். அதுவோ, கசப்பான பழங்களைத் தந்தது" (ஏசா. 5:2).

ஆனால் புதிய ஏற்பாட்டில், கிறிஸ்துவே மெய்யான திராட்சச் செடியாயிருக்கிறார். நாம் அவரில் முற்றிலும் சார்ந்திருக்கிற கொடிகளாயிருக்கிறபடியால், நாம் கர்த்தருக் கென்று நற்கனிகளைக் கொடுக்கிறோம். மட்டுமல்ல, நீரூற்றண்டையிலே நாட்டப் பட்ட கனிதரும் செடியாயிருக்கிறபடியால், நல்ல கனிகளை ஏராளமாய் கர்த்தருக் கென்று கொடுக்க முடியும். நீரூற்றாகிய பரிசுத்த ஆவியானவரோடு உங்கள் உள்ளம் எப்போதும் இணைக்கப்பட்டிருப்பதாக.

இயேசு கிறிஸ்து சொன்னார், "என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால், அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும், நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்" (யோவா. 15:4,5).

"ஒரு நதியுண்டு. அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமான வர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்" (சங். 46:4). தேவனுடைய பிள்ளைகளே, நீங்கள் உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலமாயிருக்கிறீர்கள். பரிசுத்தாவியாகிய ஜீவநதி உங்களுடைய உள்ளத்தை சந்தோஷிப்பிக்கும். மட்டுமல்ல, ஜீவ கனிகளையும் கொடுக்கும். நீங்கள் நிச்சய மாகவே கனியுள்ளவர்களாய் விளங்குவீர்கள்.

நினைவிற்கு:- "நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது" (வெளி. 22:2).