ஆரோக்கியம் வாசம்பண்ணும்!

"உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்" (செப். 3:17).

மற்றவர்களுக்கு மனதுருக்கத்தோடு வைத்தியம் செய்கிற ஒரு டாக்டர், மிகவும் வியாதிப்பட்டு ஆஸ்பத்திரியிலே அனுமதிக்கப்பட்டார். அவருடைய சரீரம் அழுகி, நாற ஆரம்பித்தது. அவரை என்ன நோய் தாக்கியிருக்கிறது என்று மற்ற டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. "கர்த்தர் தன்னை சுகமாக்க வல்லமையுள்ளவர் என்ற விசுவாசம் அவருக்கு இருந்தாலும், எப்படி தன்னை குணமாக்குவார்?" என்ற சந்தேகமும் இருந்து வந்தது.

அப்பொழுது அவருடைய மனைவி வேதத்தை சத்தமாய் வாசித்துக் கொண்டிருந்தாள். செப். 3:17-ம் வசனம் அங்கே வந்தது. "உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவிலிருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர். அவர் இரட்சிப்பார். அவர் உன் பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் கெம்பீரமாய் களிகூருவார்" என்ற வார்த்தை அந்த டாக்டரின் உள்ளத்தை தொட்டது. தன்னுடைய மனைவியிடம், திரும்பத் திரும்ப அந்த வேத வசனத்தை வாசிக்கச் சொன்னார்.

"என் சரீரம் அழுகினாலும், எனக்குள்ளேயிருக்கிறவர் வல்லமையுள்ளவர். எனக்குள்ளே வாசம் செய்கிறவர் பூரண ஆரோக்கியம் நிறைந்தவர். எனக்குள்ளே வாசம்பண்ணுகிறவர் அற்புதம் செய்கிறவர். எனக்குள்ளே வாசம்பண்ணுகிறவர் மனதுருக்கமுள்ளவர். நேற்றும் இன்றும் மாறாதவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, என்ன அற்புதங்கள் செய்தாரோ, அதே கிறிஸ்து இன்றைக்கு எனக்குள்ளே வாசம் செய்து, என்னைக் குணமாக்கி, ஆரோக்கியத்தை வரப்பண்ணுவார்" என்று சொல்லி களிகூரலானார்.

என்ன ஆச்சரியம்! விரைவிலே கர்த்தர் அவருக்கு பூரண சுகத்தைக் கொடுத்தார். அவர் சாட்சியிடும்போது, "எனக்குள்ளே கிறிஸ்து தங்கியிருந்ததாலே, நோய் வெளியேற வேண்டியதாயிற்று. கிறிஸ்துவும், நோயும் ஒரே இடத்தில் வாசம் செய்ய முடியாது" என்றார்.

மருந்துக்கள், டானிக்குகள் உங்களுக்குள் போய் உங்களை சுகமாக்கும் என்று நம்புவதைப் பார்க்கிலும், "கிறிஸ்துவானவர் எனக்குள்ளே வாசம்பண்ணி, என்னைக் குணமாக்குவார்" என்று விசுவாசியுங்கள். அப்பொழுது உங்களுடைய சரீரத்தில் ஆரோக்கியம் உண்டாயிருக்கும். டாக்டர்கள் உங்களுக்கு மருந்துகளைக் கொடுத்தாலும், சுகமாக்குகிறவர், பரம டாக்டரான கர்த்தர் ஒருவரே.

வேதம் சொல்லுகிறது, "தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும், வரங்களைப் பெற்றுக் கொண்டீர்" (சங். 68:18). ஆம், தேவபிள்ளைகளே, உங்களுக்குள் வாசம்பண்ணுகிற கர்த்தருக்குள்ளே குணமாக்கும் வரங்கள் இருக்கின்றன. அற்புதங்கள் செய்கிற சக்தி இருக்கிறது. ஆகவே கலங்காதிருங்கள். இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு ஒரு அற்புதத்தைச் செய்வார்.

"நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில், ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்" (யாத். 15:26).

நினைவிற்கு:- "எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்" (நீதி. 1:33).