வசனம் வாசமாயிருக்கும்!

"கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும், பரிபூரணமாக வாசமாயிருப்பதாக" (கொலோ. 3:16).

யாருடைய இருதயத்திலே, கிறிஸ்து வாசமாயிருக்கிறாரோ, அவர்களுக்குள்ளே கிறிஸ்துவும், கிறிஸ்துவின் வசனமும், பரிபூரணமாக வாசமாயிருக்கும். கிறிஸ்துவின் வசனம் எப்படிப்பட்டது? அது ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது (யோவா. 6:63). ஆவியாயிருக்கிற இந்த வசனம், உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையது. அந்த வசனம், வாசிக்கிறவர்களுக்குள்ளே பெலன் செய்கிறது. மேலும், இரட்சிப்புக் கேற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது (2 தீமோ. 3:15).

"நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும், உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்" (யாக். 1:21). கறைதிரையில்லாத பரிசுத்த ஜீவியம் செய்வதற்கு, வேத வசனங்கள் உங்களுக்குள்ளே தங்கியிருக்க வேண்டும். வாசம் செய்ய வேண்டும். இந்த இரகசியத்தை அறிந்த தாவீது ராஜா ஜெபிக்கும்போது, "நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் என்றார்" (சங். 119:11).

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வசனங்கள் சகல பரிபூரணத்தோடும் உங்களுக் குள் வாசம் செய்யட்டும். கர்த்தர் வேத வசனங்களின் மூலமாக உங்களோடு பேசும்போது, உங்களுடைய உள்ளமாகிய பொக்கிஷ சாலையில் அதை சேர்த்து வையுங்கள். நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவை களை எடுத்து காண்பிக்கிறான் (மத். 12:35). ஏற்ற வேளையில் அந்த வாக்குத்தத்தங்கள் உங்களுக்கு கைக்கொடுக்கும். "ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை, வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்" (நீதி. 25:11).

இயேசுகிறிஸ்து, தன்னுடைய உள்ளமாகிய பொக்கிஷசாலையில் வேத வசனங் களை நிரப்பியிருந்தார். சாத்தான் சோதிக்க வந்தபோது, ஒவ்வொரு சோதனைக்கும் ஏற்ற பதிலை, வேதத்திலிருந்து அவர் எடுத்து வைத்தார். இந்த கல்லுகளை அப்ப மாக்கி சாப்பிடும் என்று சாத்தான் சொன்னபோது, உடனே "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல; தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தை யினாலும் பிழைப்பான்" என்று பதில் கொடுத்தார் (மத். 4:4). "கிறிஸ்துவின் வசனத்தைக் கேட்பவர்கள், அதை உண்மையும், நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்" (லூக். 8:15).

தேவபிள்ளைகளே, வேத வசனங்களைக் கேட்கும்போதும், வாசிக்கும்போதும் அதை கர்த்தரிடத்திலிருந்து வருகிற வார்த்தையாகவே ஏற்றுக்கொள்வீர்களானால், அது உங்களுக்குள்ளே பலன் செய்வதை உணருவீர்கள். இதனை அநேக தேவனுடைய பிள்ளைகள், தங்கள் அனுபவத்திலே கண்டு அறிந்திருக்கிறார்கள். அதை விசுவாசிக்கும் போது சகல சாபங்களும் முறிக்கப்பட்டு, ஆசீர்வாதம் பெறுவார்கள்.

தேவபிள்ளைகளே, உங்களை நோக்கி, வேத வசனங்கள் வரும்போது, அதை வாஞ்சையோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த வார்த்தைகள் தேனிலும், தெளிதேனிலும் மதுரமாயிருக்கும். "பெரோயா பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்" (அப். 17:11).

நினைவிற்கு:- "அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்" (நீதி. 4:22).