வாசமாயிருந்தால் பேசுவார்!

"பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்" (மத். 10 20).

பிதாவின் ஆவியானவர், உங்களுடைய இருதயத்தில் வாசமாயிருந்தால், ராஜாக் களுக்கு முன்பாகவும், ஆசாரியர்களுக்கு முன்பாகவும் நிற்கும்போது, என்னத்தை பேசுவோம், எப்படி பேசுவோம் என்பதைக் குறித்து கவலைப்படாதிருங்கள். கிறிஸ்து தாமே வாக்களித்து, "பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியான வரே, உங்களிலிருந்து பேசுகிறவர்" (மத். 10:20) என்று சொல்லியிருக்கிறார்.

ஒவ்வொருநாளும் நாம் அநேக காரியங்களைப் பேசுகிறோம். சராசரியாக ஒரு ஆண் ஒரு நாளைக்கு 29 ஆயிரம் வார்த்தைகளை பேசுகிறான் என்றும். ஒரு பெண் 35 ஆயிரம் வார்த்தைகளைப் பேசுகிறாள் என்றும் கணக்கெடுத்திருக்கிறார்கள். அதிலே பல வகை சொற்கள் வீணான சொற்கள். புறங்கூறி பேசும் சொற்கள், தன்னை நீதிகரித்துக்கொண்டு, மற்றவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று எண்ணி பேசும் வார்த்தைகள். "சொற்களின் மிகுதியில் பாவம் இல்லாமற்போகாது" (நீதி. 10:19).

பல வேளைகளிலே, "ஐயோ, நான் தவறாக பேசிவிட்டேனே" என்று வருத்தப் படுகிறோம். நம் மனச்சாட்சியும், "நீ பேசியது தவறு" என்று உணர்த்துகிறது. இதனால் பாவச் சுமை ஏறிக்கொண்டே போகிறது. ஆகவே நீங்கள் பேசும்பொழுது, கர்த்தருடைய ஒத்தாசையை நாடுங்கள். ஆவியானவர் பேசுவாரானால், எப்பொழு தும் தேவ சித்தத்தின்படி பேசுவார். பரிசுத்தமானதை பேசுவார். பேச வேண்டிய விதமாக பேசுவார். "ஸ்தேவான் பேசின ஞானத்தையும், ஆவியையும் எதிர்த்து நிற்க அவர்களால் கூடாமற்போயிற்று" (அப். 6:10). அப்படிப்பட்ட வாக்கின் வல்லமையை கர்த்தர் உங்களுக்கும் தந்தருளுவாராக!

தந்தை பெர்க்மான்ஸ், ஒரு அருமையான பாடலை எழுதினார். "எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே, இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா. எங்கு செல்ல வேண்டும்; என்ன சொல்ல வேண்டும்; வழிநடத்தும் ஆவியானவரே. உம்விருப்பம் இல்லாத இடங்களுக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தும் ஆவியானவரே" என்று கர்த்தரிடம் கேளுங்கள். அவர் உங்களுக்குள்ளே இருக்கிறபடியினால், உங்களுக்குள்ளேயிருந்து பேசுகிறது மட்டுமல்ல, உங்களுக் குள்ளேயிருந்து உங்களை வழி நடத்துவார்.

ஏசாயாவின் அனுபவ சாட்சி என்ன? "இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச் செய்கிறார்" (ஏசா. 50:4). ஆம், தேவனுடைய பிள்ளைகளே, இந்த சாட்சி, உங்களு டைய அனுபவமாயிருக்கட்டும்.

கிறிஸ்து உங்கள் இருதயத்தில் வாசம்பண்ணுகிறபடியினால், எப்பொழுதும் உங்களுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்கி வழியும் (சங். 45:1). "இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்" (லூக். 6:45). ஆகவே தேவனுடைய பிள்ளைகளே, பரலோக விருந்தாளியான கிறிஸ்து உங்களுக்குள் தங்கியிருக்கிறபடியால், எல்லாவற்றையும் அவருடைய கரத்தில் கொடுத்துவிடுங்கள். அவர் உங்களுக்காக பரிந்துபேசி யாவற்றையும் செய்து முடிப்பார்.

நினைவிறகு:- "கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது" (2 சாமு. 23:2).