மகிமை வாசமாயிருக்கும்!

"தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக் கிறார்" (1 பேது. 4:14).

"பிதாவாகிய தேவன், மகிமையின் பிதா" என்று அழைக்கப்படுகிறார். ஆபிரகாமுக்கு முதன் முதல் மகிமையின் தேவனாக அவர் காட்சியளித்தார் (அப். 7:2). இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவர்? அவர் பிதாவின் மகிமையும், பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருக்கிறார் (எபி. 1:3). அவர் மறுரூப மலையிலே தம்முடைய மகிமையையெல்லாம் தெரிந்துகொள்ளப்பட்ட சீஷர்களுக்கு முன்பாக காண்பித்தார் (மத். 17:2). அப்.யோவான் எழுதினார், "அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது" (யோவா. 1:14).

மகிமையுள்ள ஆவியானவருக்கு ஒரு நோக்கம் உண்டு. உங்களை கிறிஸ்துவுக் கென்று மகிமையுள்ள மாசற்ற மணவாட்டியாக்க வேண்டும். இரண்டாவது, "திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப் படுகிறோம்" (2 கொரி. 3:18).

மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். "கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும். மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப் படும். பலமுள்ளதாய் எழுந்திருக்கும்" (1 கொரி. 15:43). "வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே" (1 கொரி. 15:48). அவருடைய வருகையின்போது, "நாம் வானவருடைய சாயலையும் அணிந்து கொள்வோம்" (1 கொரி. 15:49). அவருடைய சாயல் பூரண மகிமையானது. "ராஜ குமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையா யிருக்கிறது" (சங். 45:13).

தேவபிள்ளைகளே, நீங்கள் செலவழிக்கிற ஒவ்வொரு நாளும், வாரமும், மாதங்களும் கல்லறையை நோக்கி அல்ல, பூமியிலே புதையுண்டு போகிற நாளை நோக்கி அல்ல, கிறிஸ்துவினுடைய மகிமையை முகமுகமாய் கண்டு, மகிமையின்மேல் மகிமையடையும் அந்த நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். அது எத்தனை ஆனந்தமான, பாக்கியமான நாள்! உலகத்தில் உங்களுக்கு உபத்திரவங்கள் இருக்கலாம். பாடுகள் இருக்கலாம். போராட்டங்கள் இருக்கலாம். "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத் தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" (ரோம. 8:18).

"கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது, நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்" (1 பேதுரு 4:13). பாடுகளையும், பிரச்சனைகளையும் கண்டு ஒருபோதும் சோர்ந்துபோகாதிருங்கள். "அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்" (2 தீமோ. 3:12). கிறிஸ்து வினிமித்தம் வரும் பாடுகள், உங்களை தேவ மகிமைக்கு நேராக நடத்துகிறது.

கிறிஸ்துவோடு பாடுபடுகிற யாவரும், அவரோடு ஆளுகை செய்வார்கள். அந்த ஆளுகை செய்கிற நாள், உங்களுடைய கண்களுக்கு முன்பாக இருக்கட்டும். "எனக்குள் வாசம் செய்யும் மகிமையின் ஆவியானவரே, இதுவரை என்னை மகிமைப்படுத்தினீர். இன்னமும் மகிமைப்படுத்தும்" என்று கேளுங்கள்.

நினைவிற்கு:- "உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்" (1 தெச. 5:24).