ஆவியானவரின் ஜெபம்!

"அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்" (ரோம. 8:26).

உங்களுக்குள் தங்கியிருக்கும் ஆவியானவர், ஜெப வீரனானவர். அவர் உங்களுக்குள் வாசம்பண்ண வரும்போது, முதல் செய்கிற காரியம் உங்களுடைய சரீரத்தை தம்முடைய ஆலயமாக்கிவிடுகிறார். வாசஸ்தலமாக்கிவிடுகிறார். ஜெப வீடாக்கிவிடுகிறார். மகா பரிசுத்த ஸ்தலமாக்கிவிடுகிறார். பின்பு உங்களுக்குள்ளிருந்து ஜெபிக்க ஆரம்பிக்கிறார். நீங்கள் ஜெபிக்கும்படி, பரலோக மொழியாகிய அந்நிய பாஷையை உங்களுக்குள் கொண்டு வருகிறார். அவர்தாமே உங்களுக்குள்ளிருந்து, வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு ஜெபம் பண்ண ஆரம்பித்துவிடுகிறார்.

உங்களுக்கு ஏற்றபடி விண்ணப்பம் செய்வது எப்படி? வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று தெரியாமலிருக்கலாம். தேவ சித்தத்தின்படி ஜெபிக்க அறியாமலிருக்கலாம். அப்பொழுதெல்லாம் ஆவியானவரை அழையுங்கள். தயவு செய்து எனக்குள்ளிருந்து, நீர் தாமே, வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு ஜெபித்தருளும். என் பிரச்சனைகளுக்கு பதில் வாங்கித் தாரும் என்று கேளுங்கள். உங்களை பரிசுத்த பாத்திரமாய் அவரது கரத்திலே சமர்ப்பித்து விடுங்கள்.

ஒரு முறை ரோமர் 8:26-ஐ மிகவும் தியானித்து, "ஆவியானவரே, நீர் வாக்குக் கடங்காத பெருமூச்சுகளோடு எனக்காக வேண்டுதல் செய்வேன்" என்று சொன்னீரே, அந்த பெருமூச்சு எப்படிப்பட்டது? எனக்கு தெரியவில்லை என்று என்னைத் தாழ்த்தி கண்ணீரோடு ஜெபித்துக்கொண்டிருந்தேன். ஒரு பதினைந்து நிமிடம் கழிந்தது. எனக்குள்ளிருந்து பெருமூச்சும், கண்ணீரும் பொங்கி பொங்கி வர ஆரம்பித்தது. என்னால் நிறுத்த முடியவில்லை. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்காக பெரிய பாரம் எனக்குள்ளே வந்தது. "ஜெப வீரர்கள் எழும்ப வேண்டும். நீதிமான்கள் எழும்ப வேண்டும். பரிசுத்தவான்கள் எழும்ப வேண்டும் என்று பெருமூச்சோடும், கண்ணீரோடும் ஜெபித்தேன்."

ஆவியானவரோடு இணைந்து ஜெபிப்பது எத்தனை பாக்கியமானது! உங்களுக் குள்ளிருந்து, அவர் பலத்த பராக்கிரமசாலியாய் எழும்புவாரானால், எந்த சத்துருவும் அவருக்கு எதிர்த்து நிற்க முடியாது. குடும்பத்துக்கு விரோதமாய் எந்த தீய சக்தியும், அணுக முடியாது. வெள்ளம்போல சத்துரு வரும்போது கர்த்தருடைய ஆவியானவர், அவனுக்கு விரோதமாய் கொடியேற்றுவார் (ஏசா. 59:19).

உங்களுடைய அருகிலே உங்கள் ஜெப நண்பராக, பார்ட்னராக இருக்கிறவர் சத்துருவினுடைய வல்லமைகளை முறிப்பதற்கு பலத்த பராக்கிரமசாலியாய் எழுந்தருளுவார். பெந்தெகொஸ்தே நாளிலே ஜெபித்துக்கொண்டிருந்த சீஷர்கள்மேல் அவர் பலமாய் இறங்கினதினால், தேவ அக்கினி அவர்களை நிரப்பினது (அப். 2:3). உன்னதத்திலிருந்து வருகிற பெலனால் அவர்கள் தரிப்பிக்கப்பட்டார்கள்.

தேவபிள்ளைகளே, பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து ஜெபிப்பீர்களென்றால், உங்களுடைய ஜெப வாழ்க்கை வித்தியாசமாயிருக்கும். மறுரூபப்பட்டுவிடும். யுத்தக்களத்தில் போர் வீரர்களுக்கு முன்பாக, தேசக்கொடி பிடித்து, சேனைத் தலைவன் நடந்து செல்லுவதுபோல, ஆவியானவர் உங்கள் ஜெபத்தை நடத்தி முன் செல்லுவார். அவரே யுத்தத்தில் ஜெயக்கொடியானவர். அவரே யெகோவா நிசி.

நினைவிற்கு:- "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்" (அப். 1:8).