அதிகாலையில் கிருபை!

"அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன்" (சங். 143:8).

என்னை கர்த்தருடைய வழியிலே நடத்தின, ஒரு வயதான மூதாட்டி உண்டு. அதிகாலை வேளையிலே அவர்களுடைய வீட்டுக்கு நான் போகும்போது, அவர்கள் எப்போதும் ஒரு தூணின் கீழே இருந்து ஜெபித்துக்கொண்டிருப்பார்கள். "தம்பி, இந்த தூணை கர்த்தருடைய பாதங்களாக எண்ணுகிறேன். ஒவ்வொருநாளும் அதிகாலை வேளை இங்கே வந்து அமர்ந்து, "கர்த்தர் என்ன பேசுவாரோ?" என்பதை கேட்க ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பேன். அவருடைய மறுமொழி என்னைக் களிகூறப்பண்ணும் என்பார்கள்.

எல்லா ஜெபத்திலும் விசேஷமான ஜெபம் அதிகாலை எழுந்து ஜெபிக்கிற ஜெபம். அப்பொழுது மனம் திறந்து ஆயத்தமாயிருக்கும். உலகம், குளிர்ச்சியடைந்து மௌனமாயிருக்கும். உலக சத்தங்கள், இரைச்சல்களைக் கேட்கும் முன்னால், கர்த்தருடைய மெல்லிய சத்தத்துக்காக காத்திருந்து, அவர் பேசக் கேட்பது எவ்வளவு நல்லது? "அதிகாலையிலே உங்களுடைய ஐம்புலன்களையும், அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி அத்தனையையும் கர்த்தருடைய பாதத்திலே சமர்ப்பித்து, கர்த்தருடைய ஆளுகைக்கு ஒப்புக்கொடுங்கள். அவர்தான் உங்களை கறைதிரையற்றதாய், பரிசுத்தமுள்ளதாய் காக்க வல்லமையுள்ளவர். பின்பு கர்த்தரை, "பரிசுத்தர், பரிசுத்தர்" என்று போற்றுங்கள். அந்த நாள் முடிவில் கர்த்தர் உங்களை பரிசுத்தமாய் பாதுகாத்துக் கொண்டதற்காக அவரை துதித்து மகிழுங்கள்."

தேவபிள்ளைகளே, இரவு நீண்ட நேரம் கதை பேசிக்கொண்டும், டெலிவிஷன் பார்த்துக்கொண்டும், இருக்காமல் சீக்கிரமாய் படுக்க போய்விடுங்கள். "நான் அதிகாலை எழும்பி, கர்த்தருடைய பொன் முகத்தைப் பார்க்க வேண்டும்" என்ற ஏக்கத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். படுத்திருக்கும்போதுகூட, உங்கள் ஆத்துமாவோடுப் பேசி, "ஆத்துமாவே, நீ அதிகாலையில் எழுந்து கர்த்தரைத் துதிக்க வேண்டும்" என்று சொல்லுங்கள்.

சில தேவபிள்ளைகள், அதிகாலையில் எழும்புவதற்காக இரவு நேரத்திலே சாப்பாட்டை குறைத்துக்கொள்வார்கள். கொஞ்சமாக டிபன் மட்டும் சாப்பிட்டு படுக்கைக்குச் செல்லுவார்கள். அப்பொழுது அவர்கள் அதிகாலையின் சோம்பலுக்கு விடுவிக்கப்படுவார்கள். கர்த்தருடைய ஆவியானவர் குறிப்பிட்ட வேளையிலே உங்களை தட்டியெழுப்புவார். காலையிலே எழுந்ததும், அந்த நாளை "ஜெப நாளாக" பிரதிஷ்டை செய்துவிடுங்கள்.

முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு அதிகாலையில் எழும்பும் பழக்கம் இருந்தது (ஆதி. 21:14, 22:3). ஈசாக்குக்கும் (ஆதி. 26:31), யாக்கோபுக்கும் அந்த பழக்கம் இருந்தது (ஆதி. 28:18). அநேக பரிசுத்தவான்கள் அதிகாலை நேரத்தை கர்த்தருக் கென்று கொடுத்து, கர்த்தரை கனம்பண்ணினார்கள். நீங்களும் அந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமே.

ஒருவர் சொன்னார்: "இஸ்லாமியர் அதிகாலை எழும்பி விடுவது போல, நானும் சேவல் கூவும் சத்தத்திற்கு முன்னால் எழும்பிவிட வேண்டுமென்று தீர்மானித்திருக் கிறேன். அவர்களுடைய நீதியிலும், என் நீதி அதிகமாயிருக்க வேண்டும் அல்லவா? (மத். 5:20). தேவபிள்ளைகளே, அதிகாலையில் பொழிந்தருளுகிற தேவனுடைய கிருபையாகிய மன்னாவை பெற்றுக்கொள்ள கண்ணும், கருத்துமாயிருங்கள்.

நினைவிற்கு:- "என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்" (நீதி. 8:17).