கண்ணீரின் ஜெபம்!

"தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்" (ஓசி. 12:3,4).

ஜெபத்திலே முதலாவதும், முக்கியமானதும், கண்ணீரின் ஜெபம்தான். ஒரு குழந்தையைப் பாருங்கள். பசியானாலும் சரி, எறும்பு கடித்து விட்டதானாலும் சரி, கீழே விழுந்து விட்டாலும் சரி, அழுகையின் மூலமாகத்தான் தன்னுடைய தேவை ஒவ்வொன்றையும் தாய்க்குத் தெரியப்படுத்துகிறது. பிள்ளை அழும்போது, தாயின் உள்ளம் துடிக்கிறது. தன் பிள்ளையின் அழுகையைக் கேட்டவுடன், எங்கிருந்தாலும் ஓடி விரைந்து வந்து, குழந்தையை கவனிக்கிறாள். அதின் தேவையை சந்திக்கிறாள்.

கர்த்தர் நமக்கு தாயைப்போன்றவர். அவர் எல்ஷடாய் தேவன். "எல்ஷடாய்" என்ற வார்த்தைக்கு, "தாயைப்போல மார்பையுடையவர்" என்று அர்த்தம். "ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்" (ஏசா. 66:13). "ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை" (ஏசா. 49:15).

"ஜெபத்தைக் கேட்கிறவரே" என்று தாவீது கர்த்தரை அழைத்தார் (சங். 65:2). அவர் ஜெபத்தைக் கேட்கிறவர் மட்டுமல்ல, ஜெபத்துக்கு விரைந்து வந்து, பதிலளிக்கிறவர். கண்ணீரின் ஜெபம், தேவனுடைய உள்ளத்தை உருக்குகிறது. கண்ணீரின் ஜெபத்துக்கு நிச்சயமாகவே பதிலளிப்பார். யாக்கோபு, தன்னுடைய சகோதரனை சந்திக்கப் பயந்து, தனிமையாய் ஜெபிக்கும்படி, "யாப்போக்கு" என்ற ஆற்றங்கரைக்கு வந்தார். யாக்கோபின் மனவியாகுலத்தையும், கலக்கத்தையும் பார்த்து, கர்த்தர்தாமே அவருக்கு உதவி செய்யும்படியாக உடனே இறங்கி வந்தார். யாக்கோபைப் பெலப்படுத்தி, திடப்படுத்தி, ஆசீர்வதித்தார்.

யாக்கோபு அன்றைக்கு ஜெபித்த கண்ணீரின் ஜெபம், அவருடைய சகோதரனை சமாதானத்தோடே சந்திக்க உதவிச் செய்தது. தேவபிள்ளைகளே, உங்களுக்கு பிரச்சனைகளா? போராட்டங்களா? அநேகர் உங்களுக்கு விரோதமாய் எழும்பி வருகிறார்களா? கண்ணீரோடு ஜெபியுங்கள். உங்கள் ஜெபத்துக்கு நிச்சயமாகவே பதில் உண்டு. கர்த்தருடைய கரம் குறுக்கிட்டு, கோணலானவைகள் எல்லாவற்றையும் செவ்வையாக்கி விடுவார்.

ஒரு ஊழியருக்கு போதுமான படிப்பறிவு இல்லாமலிருந்தாலும், கண்ணீரோடு ஜெபித்து, ஆலயத்திற்கு வருவார். பாடும்போதும் கண்ணீர் சிந்தி பாடுவார். ஆராதனை யின்போதும் கண்ணீர் விட்டு அழுவார். பிரசங்க நேரத்திலும் கண்களிலிருந்து கண்ணீர் தாரைத்தாரையாய் கொட்டிக்கொண்டிருக்கும். ஒப்புக்கொடுத்து, முன் வருகிறவர்களுக்காக கண்ணீரோடு ஆலோசனை சொல்லுவார். இதனால் அவர் நடத்தும் கூட்டங்களிலே தெய்வீக அன்பு கரைபுரண்டு ஓடும். ஆத்துமாக்கள் அவரிடத்திலே குவிந்துகொண்டிருப்பார்கள். பெரும் எழுப்புதல் ஏற்பட்டது.

இயேசுவைப் பாருங்கள்! அவர் எப்பொழுதும் கண்ணீர் சிந்தி ஜெபித்தார். லாசருவின் கல்லறை அருகே நின்று கண்ணீர் சிந்தினார் (யோவா. 11:35). பின்பு, லாசருவை உயிரோடு எழுப்பிக்கொடுத்தார். எருசலேம் நகரத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார் (லூக். 19:41). கெத்செமனே தோட்டத்திலே கண்ணீர் சிந்தி ஜெபித்தார். அவர் உங்களுடைய கண்ணீரை அறிவார். உங்களுடைய கண்ணீரை புறக்கணித்துவிட்டு, ஒருநாளும் கடந்து போகமாட்டார்.

நினைவிற்கு:- "தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்" (சங். 51:17).